சீனர்கள் எதனை முக்கியமாகக் கருதுகிறார்கள்?
பொதுவாக ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒவ்வொரு விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்கிறோம்.சரி, தமிழர்களாகிய நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? இன்றைய நிலையில் ஒரு வீடு, ஒரு கார் என்பது தான் நமது நோக்கமாக இருக்கிறது. நடுத்தர குடும்பங்கள் என்றால் ஏறக்குறைய இப்படித்தான். அதுவும் ஒரு சிலர் கார்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கார் என்பது அவர்களுடைய தகுதியைக் கூட்டிக் காட்டும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் சீனர்களின் பார்வை வித்தியாசப்படுகிறது. அவர்களின் வரிசைப்படி முதலாவது பணம். தொழில் செய்பவர்களாக இருந்தால் தொழிலில் முதலீட்டை அதிகரிப்பது. தேவைக்காக ஒரு கார். அதன் பின் தான் வீடு மற்றவை.
கையில் பணம் இருந்தால் எதுவும் செய்ய முடியும். கார் போக்குவரத்து வசதிக்காக மட்டும் தான். பணம் இருந்தால் தொழிலை மேம்பாடு அடையச் செய்ய முடியும். தொழில் மேம்பாடு அடைந்தால் பணம் தானாக வரும். அதன் பின்னர் தான் பணத்தை வைத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.
சீனர்களுக்குத் தொழில் தான் வாழ்க்கையில் முதல் அடியை எடுத்து வைப்பது. அதன் பின்னர் அதனை அபிவிருத்தி செய்வது. வங்கியில் கடன் கேட்டாலும் அவர்களுக்குக் கிடைக்கும். காரணம் அவர்களின் தொழிலின் முன்னேற்றத்திற்குக் கடன் தேவை. வங்கிகளும் கடன் கொடுக்க தயார் நிலையில் இருக்கின்றனர். வங்கிகள் சீனர்கள் மேல் அதிக நம்பிக்கை வைக்கின்றனர். புள்ளி விபரங்கள் அவர்களுக்குச் சாதகமாக இருக்கின்றன.
நமது இனத்தவர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை நாமே மீள்பார்வை செய்ய வேண்டும். வங்கியில் கடன் வாங்கினால் அது வணிகத்திற்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்கிற ஓர் ஒழுங்கு வேண்டும். தொழிலில் வருகின்ற வருமானம் மீண்டும் தொழிலுக்கே போக வேண்டும் என்கிற கட்டுப்பாடு வேண்டும்.
ஆக, சில பாடங்களை நாம் சீனர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நம் அருகில் உள்ள அவர்கள் தான் நமக்கு நல்ல எடுத்துக்காட்டு. அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்.
எது முக்கியம் என்பதை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment