பொருளாதார முன்னேற்றம் என்னும் போது நமது நிலை என்ன?
நாம் பல துறைகளில் படிப்படியாக முன்னேறி வந்திருக்கிறோம். எல்லாம் நமது சொந்த முயற்சியின் மூலம் தான் என்பது எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
நமது முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தவர்கள் என்றால் அது அரசாங்கமும் ம.இ.கா. வும் தான். ம.இ.கா. ஏதோ ஒரு சில சலுகைகளை வாங்கிக் கொடுத்தனர் என்றாலும் அது அரசாங்கம் போட்ட பிச்சை தான்! பெருமைப்பட ஒன்றுமில்லை! அன்றும் சரி இன்றும் சரி அவர்கள் தங்களின் நலனுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தனர். பள்ளிக்கூடங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களை அபகரித்தவர்களை மாலை போட்டா வர வேற்க முடியும்?
சீனர்கள் அரசியலுக்கு வருமுன்னரே ஓரளவு வசதியான நிலையில் தான் வருகின்றனர். பணம் இல்லாமல் அவர்கள் அரசியலுக்கு வருவது குறைவு. நமது நிலை என்ன?
பஞ்சப்பராரிகள், ஒரு வேளை சாப்பாட்டுக்கு லாட்டரி அடித்தவர்கள், வழியில்லாமல் அடிதடியில் ஈடுபட்டவர்கள் - இவர்கள் தான், அரசியலை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய சூழலில் இருந்தவர்கள் தான், அரசியலுக்கு வந்தார்கள்! அவர்கள் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்தார்கள். நம்மையும் ரௌடிகளாக மாற்றினார்கள்! இன்றும் அது தொடர்கிறது! இன்றளவும் சிறை மரணங்கள் குறைந்தபாடில்லை.
இன்று நமது முன்னேற்றம் என்பது வளர்ந்திருக்கிறது. திருப்திகரமாக இல்லை என்பது தான் நமது குறை. அரசாங்கம் நமது வேலை வாய்ப்புகளை முற்றாகப் பறித்துவிட்டது. தனியார் துறையில் குறைந்த சம்பளம் வாங்குகின்ற கூலித் தொழிலாளர்கள் என்றால் அது நாம் தான்.
நம்மிடையே நிறைய வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள். அதுவும் திறமை மிக்கவர்கள் என்று பெயரெடுத்திருக்கிறோம். ஆனால் இங்கு ஏமாற்று வேலை என்பது நிறையவே உண்டு. பெயர் போட முடியாதவர்கள் அரசியலுக்கு வந்து விடுகிறார்கள்!
நமக்கு அரசாங்க வேலை என்பது பெரும்பாலும் ஆசிரியர் பணி தான். தமிழ்ப்பள்ளிகள் இல்லாவிட்டால் அதுவும் காலி! இடைநிலைப்பள்ளிகள், கல்லூரி விரிவுரையாளர்கள் இருந்தாலும் அங்கேயும் அரசாங்கம் கை வைக்கிறது. நம்மை தகுதியற்றவராக்கி விடுகிறது!
மருத்துவம் என்பது நமது முதன்மையான தொழிலாக இருந்தது. அதனையும் அரசாங்கம் தகர்த்துவிட்டது! தகுதியற்றவர்களைக் கொண்டு வந்து நிரப்பிவிட்டது! இனி வருங்காலங்களில் இவர்களும் வேலை தேடி நடு ரோட்டுக்கு வருவார்கள்!
ஒன்று மட்டும் சொல்லுவேன். நீங்கள் நிறையவே படித்திருக்கலாம். பல தகுதிகள் கொண்டவராக இருக்கலாம். ஆனால் வேலை தான் செய்ய வேண்டும் என்று அலையாதீர்கள். நீங்கள் சார்ந்த துறையில் சொந்தமாக தொழில் செய்ய முயற்சி எடுங்கள். சொந்த மருத்துவ நிலையங்கள், சொந்த வழக்குரைஞர் நிறுவனங்கள், சொந்த கல்வி நிறுவனங்கள் என்று கொஞ்சம் வித்தியாசமாக சிந்தியுங்கள். வேலை செய்வதில் பெருமைபட்டுக் கொள்ளாதீர்கள்! உங்களின் சொந்தத் தொழில் தான் உங்களுக்குப் பெருமை.
இந்த சமுதாயம் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்றால் யாருக்கோ வேலை செய்பவர்களாக இருக்க முடியாது! நமது எண்ணங்கள் மாற வேண்டும். சொந்தத் தொழில் என்பது நமக்குக் கம்பீரத்தைக் கொடுக்கும் என்பதை நம்ப வேண்டும்.
சொந்தத் தொழில் தான் தமிழரின் நிலையை உயர்த்தும்! உயர்வோம்!
No comments:
Post a Comment