Friday, 22 September 2023

இரகசிய காமிராவா?

 


சபா மாநில  தங்கும் விடுதி ஒன்றில் இரகசிய கேமரா பொருத்தப்பட்ட விவகாரம் மிகவும் கடுமையானதாக சுற்றுலாத்துறை  எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாத  விஷயம் இது.

நாட்டிற்கு அவப்பெயர். நமது நாடு சுற்றுலாப் பயணிகளை அதிகம் நம்பியிருக்கும் நாடு. சுற்றுலாத்துறை கணிசமான அளவுக்கு வருமானத்தை ஈட்டும் ஒரு துறை. 

பயணிகள் தங்கும் விடுதிகளில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படும் போது  அது அந்த தங்கும் விடுதிக்கு மட்டும் கெட்ட  பெயர் அல்ல சுற்றுலாத்துறைக்கே கெட்ட பெயர்.  ஓரிருவர் செய்யும் தவற்றினால்  அனைத்து தங்கும் விடுதிகளுக்குமே கெட்ட பெயர். இது போன்ற சம்பவங்களினால்  சுற்றுலாப் பயணிகள் மலேசியா போன்ற நாடுகளுக்கு  பயணம் செய்வதற்கே தயங்குவர்.

விடுதிகளில் தங்குபவர்கள் வெளிநாட்டுப் பயணிகள் மட்டும் அல்ல உள்நாட்டுப்  பயணிகளும் அடங்குவர். யாராக இருந்தாலும் இது போன்ற செயல்களை விரும்புவதில்லை. ஏன்? தவறு செய்கிறார்களே அவர்களின் குடும்பத்தினர் கூட அதனை விரும்ப மாட்டார்கள்.

காவல்துறை எந்த அளவுக்கு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான்  இது போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்த முடியும்.

நீண்ட நாள்களாக இது போன்ற செய்திகள் வந்ததில்லை. ஒரு வேளை மறைக்கப்படுகிறதோ, அறியோம்.

சுற்றுலா என்றால மற்ற நாடுகளின் கலை கலாச்சாரம், மொழி போன்றவற்றைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு பலர் பல நாடுகளுக்கு வருகைப் புரிகின்றனர்  அங்கே இது போன்ற துர்சம்பவங்கள் நடக்கும் போது  அந்நாட்டின் மீதான நம்பிக்கையே சிதைந்துவிடும்.

எப்படியோ நம்மால் இது போன்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ள இயலாது. ஒழுக்கத்துக்கு  சவால் விடும் விஷயங்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. நமது எதிர்ப்பினை நாம் தெரிவிக்கிறோம். இது போன்ற சம்பவங்களை ஆதரிப்பார் யாருமில்லை.

சுற்றுலாத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல. இனி மேல் இது போன்ற சம்பவங்கள்  நடைப்பெறக் கூடாது  என்பதை  சுற்றுலாத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment