நன்றி: செல்லியல்
"நான் எப்போ வருவேன், எப்டி வருவேன்'னு தெரியாது! ஆனா வரவேண்டிய நேரத்தில கரெக்டா வருவேன்!"
யார் பேசிய வசனம் என்று சொல்லியா தெரிய வெண்டும்? தலைவர் ரஜினி தான்!
அவர் எப்போ வருவார் என்று நமக்குத் தெரியாது என்பது உண்மை தான். எப்படி வருவார் என்பதும் உண்மை தான். கோட் சூட்டோடு வருவாரா, கலாச்சார உடையோடு வருவாரா என்பதும் உண்மை தான்.
வரவேண்டிய நேரத்தில் கரக்டா வருவேன் என்றாரே அது தான் தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் வந்திருந்தால் ஒரு வேளை அது கரெக்டான நேரமாக இருந்திருக்கும். ஒரு வேளை 'ஜெய்லர்' படத்தின் வேலையில் மும்முரமாக இருந்திருப்பாரோ? எப்படியோ இப்போது வந்திருக்கும் நேரமும் கரெக்டான நேரம் தான்!
ஆனாலும் அவரது வருகையால் அப்படியே இந்தியர்களின் வாக்குகள் பக்காத்தான் கூட்டணிக்குப் போய்விடும் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான். அது நடக்கப் போவதுமில்லை. யாரும் எதிர்பார்க்கவும் இல்லை.
அது அவரது தனிப்பட்ட வருகை. ஒரு நண்பரைச் சந்தித்துவிட்டுப் போவது போல வந்துவிட்டுப் போயிருக்கிறார். நண்பராகக் கூட இருக்கலாம். நமக்குத் தெரிய நியாயமில்லை. ஆனால் அவரது வருகையால் மலேசிய இந்தியர்களுக்கு எதுவும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அதை நாம் தெரிந்து கொண்டால் போதும்!
ஒன்றை நாம் நினைவு கூர்வது நல்லது. அவரது வாழ்க்கைப் பயணம் நமக்கெல்லாம் ஒரு பாடம். ஒரு பஸ் கண்டக்டராக அவரது வாழ்க்கைப் பயணம் அமைந்தது. ஆனால் அத்தோடு அவரது பயணம் முற்றுப் பெறவில்லை. சென்னைக்கு வந்தார். திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிகனாக வேண்டும் என்கிற தனது இலட்சியக் கனவைத் தொடர்ந்தார். பின்னர் நடிகனாக ஒரு சிறிய வேடத்தை இயக்குநர் பாலச்சந்தர் அவருக்குத் தந்தார். அதுவே ஆரம்பம்.
இரும்புக் கதவை திறந்து கொண்டு தமிழ் திரை உலகினுள் புகுந்தவர் இன்று வரைத் தொடர்கிறார். ஆரம்பகாலத்தில் ஆயிரம், இரண்டாயிரம் என்று சம்பளம் வாங்கியவர் இன்று, ஜெய்லர் படத்தில் 220 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்! அநேகமாக அடுத்த படத்தில் இன்னும் அவருக்குச் சம்பளம் கூடலாம்!
நமது இளைஞர்களுக்கு உள்ள செய்தி என்ன? உங்கள் இலட்சியம் என்ன? அதனை நோக்கிப் பயணம் செய்யுங்கள். மற்றவை சோறு போடலாம். ஆனால் மனநிறைவைத் தராது. ரஜினியின் வருகை வாழ்க்கையில் முன்னேற ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். நாமும் நமது பாதையில் பயணம் செய்வோம்!
No comments:
Post a Comment