Saturday 16 September 2023

முதன் முறையாக.....!

 

                                                                   டத்தோ ரமணன் - மித்ரா

மித்ரா அமைப்பு, முதன் முதலாக,  2016 முதல் இந்தியர் உருமாற்றத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும்  நூறு மில்லியன் ஒதுக்கீட்டுத்  தொகையை இந்த ஆண்டு முழுமையாக  இந்திய சமூகத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மித்ராவின் தலைவர் டத்தோ ரமணன் அறிவித்திருக்கிறார்.

இதற்கே நாம் மித்ராவின் தலைவரைப் பாராட்ட வேண்டும். காரணம் கடந்த காலங்களில்  இந்திய சமூகம் என்று ஒன்று இருப்பதாகக் கூட  மித்ராவின் பொறுப்பாளர்களுக்குத் தெரியவில்லை!  அதனால் 'பெறுவார்' யாருமில்லை  என்று சொல்லி , கொடுக்கப்பட்ட மான்யத்தைத் திருப்பி அரசாங்கத்திற்கே அனுப்பிவிட்டதாக  அப்போதே செய்திகள் வெளி வந்தன. 

எப்படியோ இம்முறை அது போன்ற தவறுகள் எதுவும் நடக்கவில்லை. 'பெறுவதற்கு' இன்னும் பலர் உள்ளனர் என்கிற உண்மை இப்போதைய தலைமையத்துவதற்குத் தெரிய வந்ததால் மான்யம் பரவலாகக் கொண்டு போய் சேர்க்கப்பட்டிருக்கின்றது.  அதற்காக நன்றி.

நம்முடைய நோக்கம் எல்லாம் அரசாங்கம் கொடுக்கும் மான்யம் தேவைப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான். தேவை என்பது நமது சமுதாயத்திற்கு என்றும் இருக்கும்.

ஒன்றை நாம் நம்புகிறோம். இதுவரை மான்யம் பெற்றவர்கள்  தேவையின் அடிப்படையில் தான் பெற்றிருக்கிறார்கள் என்பதை நாம் நம்புகிறோம். இந்த முறை அந்த மான்யம் பெரும்பாலும் கல்வி சம்பந்தப்பட்டவர்களுக்கே  அதிகம் பகிரப்பட்டிருக்கிறது என்பது  நிதர்சனம்.  அதே சமயத்தில் மேற்கல்வி கற்கும் மாணவர்கள், கல்வியைத் தொடர பணம் தேவை, என்றால் அவர்களுக்கும் மித்ரா கைக் கொடுக்கும் என்பதையும் நம்புகிறோம். 

கல்விக்கு நாம் எதிரி அல்ல. நிச்சயமாக அவர்களுக்கான உதவி செய்வதை மித்ரா தொடர வேண்டும்.

ஆனால் அதே சமயத்தில்  சிறு வர்த்தகங்களில் ஈடுபட்டிருக்கும்  சிறு வியாபாரிகளுக்கு உதவ   மித்ரா முடிந்தால் அதிகம் அக்கறை காட்ட வேண்டும் என்று நினைவுபடுத்துகிறோம். பெரும் வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை.வங்கிகள்  அவர்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன. சிறு குறு வியாபாரிகளுக்குத் தான் உதவி பெறுவதில்  பல சிக்கல்கள், பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்கு எப்படி உதவலாம் என்கிற ஒரு திட்டத்தை வகுத்து அவர்களுக்கு உதவ வேண்டும். சிறு வியாபாரங்கள் செய்பவர்களுக்கு உதவுவது மித்ராவின் கடமை. அவர்கள் தான் நீண்ட நாள்களாக 'மித்ரா உதவ வேண்டும்' என்கிற கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

இது தான் முதன் முறை என்று சொல்லி முற்றுப்புள்ளி வைக்க வேண்டாம்! உங்கள் பணி தொடர வேண்டும்!

No comments:

Post a Comment