தற்காப்புப் படையில் பூமிபுத்ரா அல்லாதாரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாக தற்காப்பு அமைச்சர் கூறியிருப்பது வருத்தமடைய வைக்கும் செய்தி தான். நாட்டின் தற்காப்புக்கு 3 விழுக்காடு தான் சீனர், இந்தியர்களின் பங்களிப்பு என்றால் பெருமைப்பட என்ன இருக்கிறது?
ஆனால் இந்த செய்தி ஒன்றும் புதிதல்ல. இந்தக் குற்றச்சாட்டு எல்லாகாலங்களிலும் உள்ளது தான். இது ஏன் இப்படியே தொடர்கிறது? எங்கே பிரச்சனை?
ஒன்று பூமிபுத்ரா அல்லாதவர்கள் உடல் ரீதியில் தகுதியில்லாதவர்களாக இருக்க வேண்டும். நெட்டை, குட்டையாக அல்லது ஒல்லிபிச்சானாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு வகைக் கோளாறு இவர்களிடம் இருக்கத்தான் வேண்டும்.
ஒரு காலகட்டத்தில் ம.இ.கா. வே களத்தில் இறங்கி இந்திய இளைஞர்கள் தற்காப்புப்படையில் சேர்க்கப்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் எதுவும் செயல்வடிவம் பெறவில்லை. ஏதோ ஒன்றிரண்டு பேர் சேர்க்கப்பட்டார்கள்.
அத்தோடு முடித்துக் கொண்டார்கள். என்ன தான் நடக்கிறது என்று நமக்கும் புரியவில்லை.
இப்போதும் அதே குற்றச்சாட்டு. நமக்கு உள்ள கேள்வியெல்லாம் உண்மையில் இவர்கள் என்ன தான் சொல்ல வருகிறார்கள்? பூமிபுத்ரா அல்லாதார் படையில் சேர ஆர்வம் காட்டவில்லை என்கிறார்களா அல்லது ஏதோ காரணங்கள் சொல்லி அவர்களைப் புறக்கணிக்கிறார்களா என்பது தான் நமது கேள்வி. நமக்குத் தெரிந்தவரை நமது இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது தான் பொதுவான கருத்து.
ஆனாலும் நம்மால் எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை. அவர்களிடம் புள்ளி விபரங்கள் இருக்கும் அதனைத்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நாமும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான்!
தற்காப்பு அமைச்சர் புள்ளி விபரங்களின்படி 3 விழுக்காடு என்கிறார். நன்றி! அதே போல மற்ற அரசாங்கத் துறைகளில் பூமிபுத்ரா அல்லாதாரின் எண்ணிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்த கொள்ளவும் நமக்கு ஆசை உண்டு. அதனையும் தெரிந்து கொண்டால் அரசாங்கத்தில் நமது நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அதாவது நாம் புறக்கணிக்கப் படுகிறோமா அல்லது புறந்தள்ளப்படுகிறோமா என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
எப்படியோ, நமது இளைஞர்கள் தற்காப்புப்படையில் சேர்ந்து தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள். இப்போது நமது வீரம் எல்லாம் சிறையில் தான் பூட்டிக் கிடக்கிறது.
நாட்டிற்காகவும் இனி நாம் உழைப்போம்!
No comments:
Post a Comment