Thursday 14 September 2023

கொஞ்சம் பொறுமை காட்டலாமே!

 


என்ன செய்வது? பார்க்க பரிதாபம் தான். ஆனால் செய்கிற குறும்பு கொஞ்சம் அதிகமாகும் போது ஆசிரியர்கள் பொறுமை இழந்து விடுகின்றனர்.  அது தான் நடந்திருக்கிறது.

பள்ளி  பாட நேரத்தில் ஒரு மாணவன் வகுப்பில் மின் சிகிரெட்டை ஊதிக் கொண்டிருந்தால்  நம்மால் ஓரளவு அவன் எப்படிப்பட்ட மாணவன்  என்பதை ஊகிக்க முடியும். அதுவும் 5-ம்  படிவ  மாணவன். பரிட்சை நெருங்கி விட்டது.  ஆசிரியரும் தனது கடைசி நேர முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கும் நேரம்.

ஒரு மாணவன் செய்கின்ற குறும்புதனத்தால் மற்ற மாணவர்களுக்கும் படிப்பில் கவனச்சிதறல்  ஏற்படத்தான் செய்யும்.  அதனை எந்த ஆசிரியரும் விரும்பமாட்டார்.

ஆனால் அதற்காகவெல்லாம் ஓர் ஆசிரியர் இப்படியெல்லாம் கடுமையான தண்டனையைக் கொடுப்பது நியாயம் ஆகுமா என்று  கேட்டால் அது நியாயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டி வரும்.

அப்படி என்றால் என்ன செய்யலாம்? கால்களிலோ, கைகளிலோ பிரம்பால் அடிப்பது கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும். பிரச்சனை என்னவென்றால்  மாணவர்களை அடிப்பதே கூடாது என்றால்  இந்த மாணவர்கள் எப்படி உருப்படுவார்கள்?

மேற்படி இந்த மாணவன் எப்படித்  தாக்கப்பட்டான்  என்பதும் நமக்குப் புரியவில்லை. எதனையும் நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஒன்று மட்டும் உறுதி. இப்படித் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுவதை  எந்த பெற்றோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது அவர்களின் பிள்ளைகளின் மேல் உள்ள அன்பு, பாசம் எனலாம்.அதாவது பெற்றோர்களின் அதீத அன்பே  அந்தப் பிள்ளைகளுக்கு விரோதமாய் அமைந்துவிடுகிறது.

நம் பிரார்த்தனையெல்லாம்   அந்த மாணவனின்  கண் பார்வையில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது  என்பது மட்டும் தான்.  அந்த ஆசிரியரும் வருங்காலங்களில் இது போன்ற  அடவாடித்தனமாக  நடந்து கொள்ளக் கூடாது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.  என்ன செய்வது? இன்றைய மாணவர்களின் நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கின்றன.  அதற்காக அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டா இருக்க முடியும்?

கல்வி அமைச்சு என்ன முடிவு செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment