மலேசியர்கள் இன்றைய நிலையில் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.
விலைவாசி என்பது நமது முதல் எதிரி. அனைத்துப் பொருள்களும் விலையேற்றம் கண்டுவிட்டன. மிக மிக அத்தியாவசியமான பொருள்கள் கூட, அரிசி போன்ற பொருள்கள், விலையேற்றம் கண்டுவிட்டன. குழந்தைகளுக்கான மாவு, எண்ணெய், சீனி எல்லாம் ஏறிக்கொண்டே போகின்றன.
ஆனால் இவற்றை விட முக்கியமான ஒன்று உண்டு. வேலை செய்தால் தானே வயிற்றை நிரப்ப முடியும்? அதற்கும் இப்போது பிரச்சனை. வேலை இல்லாப் பிரச்சனை. கோரொனா தொற்றுக்குப் பிறகு இன்னும் நிலைமை சீர் அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக வேலை இல்லாப் பிரச்சனை இன்னும் பிரச்சனையாகவே இருக்கின்றது. அதுவும் இந்தியரகளுக்கு வேலை வாய்ப்புகள் கடுமையான பிரச்சனையாகவே இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
நம்மிடம் எந்த புள்ளி விபரங்களும் இல்லை. பேச்சு என்னவோ இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்று பெரிய அளவில் பேசப்படுகின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது கேள்விக்குறியே.
இங்குள்ள இந்தியப் பெண்கள் இப்போது சிங்கப்பூருக்கு வேலை வாய்ப்புகளைத் தேடி போவதாகக் கூறப்படுகின்றது. படித்தவர்கள் வேலை வாய்ப்புகளைத் தேடிப் போவது வேறு. மிகச் சாதாரண வேலைகளுக்குக் கூட நமது பெண்கள் சிங்கப்பூருக்குப் போவது நாம் இதுவரை கண்டதில்லை. இங்கு வேலை வாய்ப்புகள் இல்லை அல்லது மறுக்கப்படுகின்றன என்கிற போது அவர்கள் சிங்கப்பூரை நோக்கி படை எடுக்கின்றனர்.
படித்தவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி போவது என்பது வேறு. ஆனால் இப்போது நமது குடும்பப் பெண்கள் சிங்கப்பூரை நோக்கி வேலைக்குப் போவது பிரச்சனை கடுமையாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். பிள்ளைகளைப் பிரிந்து, குடும்பத்தைப் பிரிந்து போகிறார்கள் என்றால் பிரச்சனை கடுமை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆமாம், என்ன செய்வது? குடும்ப சுமை என்பது சாதாரண விஷயமா?
பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது தான் நிலைமை சீரடையும். ஆனால் எப்போது என்பது தான் கேள்வி. நம்முடைய ஆலோசனை எல்லாம் நமது அரசியல்வாதிகள் இந்த வேலை இல்லாப்பிரச்சனையில் கொஞ்சம் தலையிட்டு நமது இந்திய பெண்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தேடித் தருவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். குடும்பப் பெண்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment