நடந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றி என்பது பிரதமர் அன்வார் மேல் உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது என நிச்சயம் நம்பலாம்.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் அவர்களின் கடைசி காலம் மனதை நொருக்கிய காலமாகத்தான் அமையும் என நம்பலாம்.
அவர் அரசியலில் புகுந்த போது 'வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல' புகுந்தார். இனக்கலவரத்தை ஏற்படுத்தினார். கல்விச் சேவையை காவிமயமாக மாற்றினார். தகுதியின்மையை வளர்த்தாரே தவிர தகுதியுள்ளவராக மாற்ற இயலவில்லை.
இப்போதும் அரசியலில் இருக்கிறார். ஆனால் யாரும் அவரை மதிக்கவில்லை. மலாய் இனம் அவரது பலம் என நினைத்தார். ஆனால் அது இப்போது பாவமாக மாறிவிட்டது! யாரும் அவரை நம்பத் தயாராக இல்லை! யாரை அவர் புறக்கணித்தாரோ அவர்கள் எல்லாம் அவருக்கு நண்பர்களாக மாறிவிட்டனர்!
எப்படியோ டாக்டர் மகாதிர் இனி ஓர் அரசியல்வாதியாக பேர் போட வழியில்லை. இருக்கும்வரை ஏதாவது குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார். ஒரு 'தொண தொண' பெரியவரின் புலம்பல் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்! வேறு வழியில்லை!
இப்போது நடந்த தேர்தலில் ஒற்றுமைக் கூட்டணி இரண்டு தொகுதிகளிலும் நல்ல கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. மலாய் வாக்காளர்கள் மிகவும் அதிருப்தியோடு இருப்பதாக சொன்னாலும் அதில் உண்மை இல்லை என்று நிருபிக்கப்பட்டிருக்கிறது. சட்டமன்ற தொகுதியில் இந்திய வாக்காளர்களின் வாக்களிப்பு குறைவான எண்ணிக்கையில் இருந்ததாகச் சொன்னாலும் அதன் உண்மை நிலவரம் தெரியவில்லை. எல்லாருமே தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்! என்ன செய்ய?
பிரதமர் அன்வாரை ஆயிரம் தான் குறை சொன்னாலும் அவருடைய நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி அப்படி என்று அலை மோதுகிறார்! அரசாங்கம் கவிழ்க்கப்படுமோ என்கிற பயம் ஒரு பக்கம். மலாய் இனத்தின் ஆதரவு குறையுமோ என்கிற கவலை ஒரு பக்கம். அதனால் ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்துத் தான் செயல்படுகிறார். இதற்கிடையே இந்தியர்களின் குடைச்சல் வேறு. தவிர்க்க முடியாதது என்று புரிகிறது. ஆனால் நிதானமாகத்தான் செயல்பட முடிகிறது.
எப்படியோ இந்த சட்டமன்ற, நாடாளுமன்ற வெற்றிகளை நாமும் வரவேற்கிறோம். நல்லதையும் எதிர்பார்க்கிறோம்!
No comments:
Post a Comment