Tuesday 19 September 2023

எல்லாமே அளவுதான்!

 

பதவியில் உள்ளவர்களை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து தள்ள வேண்டாம்!

இப்படித்தான் ஏற்கனவே புகழ்ந்து, புகழ்ந்து  கடைசியில் வெறும் சுழியத்தில் இந்த சமுதாயத்தை மலைகளுக்கு அனுப்பி விட்டார்கள் நமது முன்னாள் அரசியல்வாதிகள! மீண்டும் மீண்டும் அதே தவற்றைச் செய்ய வேண்டாம்!

ஏதோ ஒன்றைச் செய்தால் அவர்கள் ஆயிரம் காரியங்களை செய்தது போல அவர்களைத் தூக்கு தூக்கு என்று தூக்கி விடுகிறோம்! அப்படி என்றால்  என்ன தான் செய்யலாம்?  ஒன்றும் செய்ய வேண்டாம். நாம் சும்மா இருப்போம்! யாருடைய  வாலையும் பிடித்துக் கொண்டு தொங்கு தொங்கு  என்று தொங்க  வேண்டாம்!

செய்ய வேண்டியது அவர்களது கடமை. செய்யவில்லை என்றால் அவர்கள் தகுதி அற்றவர்கள் என்பது தான் பொருள். அவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் வரும் போது  அவர்களைப் புறக்கணியுங்கள்.

அதே போல  டத்தோ ராமகிருஷ்ணன்  மித்ராவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார்.  அவர் அந்தப் பதவிக்குத் தகுதி உள்ளவர் என்பதனால் அவருக்கு அந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நமக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

நமக்கு வேண்டியதெல்லாம்  மித்ராவின் பணத்தைக் கொண்டு அவர் இந்திய சமூகத்திற்கு என்ன செய்யப் போகிறார் என்பதைத்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்த ஆண்டு அரசாங்கம் கொடுத்த முழு மானியத்தையும்  பயன்படுத்திக்கொண்டு விட்டதாக அவர் சமீபத்தில் கூறியிருந்தார். நல்லது. வரவேற்கிறோம்! நிச்சயமாக  முழு மானியத்தையும் பயன்படுத்தியிருப்பது இது தான் முதல் தடவை! அதுவே பெரிய சாதனை!  முழு விபரங்களும் அவர்களது அகப்பக்கத்தில் கிடைக்கும் என நம்புகிறோம். அப்படி இல்லையென்றால் ஏதோ சரியில்லை என்று நமபலாம்.

 இன்னும் அவர் என்ன என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னது போல அவசரப்பட வேண்டாம்.  அவர் அப்படி, இவர் இப்படி என்று புகழ்ந்து தள்ள வேண்டாம். என்ன தான் நடந்திருக்கிறது என்று நமக்குத் தெரிய வேண்டும். மானியங்கள் இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு எப்படிப் பயன் அளித்திருக்கிறது என்பது நமக்குத் தெரிய வேண்டும்.

ஒன்றுமே தெரியாமல் அவர் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக அதற்குள் எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.  கொடுத்த மானியத்தை வாரி இறைத்திருக்கிறார்.  அதனால் என்ன பலன் என்பதற்காக அவரைப் போலவே நாமும் காத்திருக்கிறோம்.

தேவையில்லாமல் 'காக்காய்' வேலைகளைச் செய்ய வேண்டாம்! அவர்களை வேலைகளைச் செய்ய விடுங்கள். செய்த பிறகு அவர்களைப் பாராட்டுவோம்!

No comments:

Post a Comment