புகை மூட்டம் என்பது நமக்குப் புதிய வார்த்தையாகத் தெரியவில்லை!
ஒவ்வொரு ஆண்டும் இதே பல்லவியைத்தான் பாடிக்கொண்டிருக்கிறோம்! அது ஏன், எப்படி என்கிற கேள்வியைக் கூட எழுப்புவதில்லை. ஆமாம், கேள்வியை எழுப்பி என்ன செய்ய? ஆகப்போவது ஒன்றுமில்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டோம்.
ஒவ்வொரு ஆண்டும் அதே பதில். காதே புளித்துப் போய் விட்டது. "என்னமோ இந்தோனேசியாவில் காடுகளை எரிக்கிறார்களாம்! அதனால் வரும் புகைமூட்டமாம்! அங்கு எரிப்பவர்களும் மலேசிய கம்பனிகளாம்!"
இது நடப்பது ஏதோ ஓரிராண்டுகள் அல்ல. பல ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏதோ மழைகாலமாக இருந்தால் பிரச்சனை கொஞ்சம் குறைவாக இருக்கும். அதுவும் மகா மகா கொடிய வெய்யில் காலம் இது. அதை சமாளிப்பதற்கே முடியவில்லை. இதுவும் சேர்ந்து கொண்டதால் இரு பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.
இப்போது மருத்துவமனைகள் நோயாளிகளினால் நிறைந்து வழிவதாகச் சொல்லுகின்றனர். அதுவும் மூத்த குடிமக்கள் நிலைதான் பரிதாபம். அவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.
பள்ளிப் பிள்ளைகளும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிக்கு வெளியே எந்த புறப்பாட நடவடிக்கைகளிலும் ஈடுபட முடிவதில்லை. பகல் நேரங்களில் அலுவலகத்தைத் தவிர்த்து வெளிப்புறங்களில் வேலை செய்வோருக்கும் இந்த புகைமூட்டம் பலரை அவதிக்குள்ளாக்குகிறது; நோயாளிகளாக்குகிறது. பல வேலைகள் தடைபடுகின்றன.
இருந்தாலும் இந்த வெய்யிலோடும், புகைமூட்டத்தோடும் நாம் வாழத்தான் பழகிக்கொள்ள வேண்டும். எத்தனையோ ஆண்டுகளாக நாம் வாழப்பழகிக் கொணட நமக்கு இன்னும் மிச்சம் மீதம் உள்ள ஆண்டுகளிலும் பழகிக் கொள்ள முடியாதா, என்ன?
நமக்கு உள்ள ஒரே கவலையெல்லாம் இந்த நிலை இப்படியே தான் நீடிக்கப் போகிறதா? இதற்கு ஏதேனும் பரிகாரங்கள் உண்டா என்பதை நமது ஜோஸ்யர்கள் தான் சொல்ல வேண்டும்! விஞ்ஞானிகளால் முடியவில்லை என்றால் அப்புறம் என்ன?ஜோஸ்யர்கள் தான் விஞ்ஞானிகள், இல்லையா!
இந்த புகைமூட்டத்தை யாரால் தீர்க்கமுடியும் என்பது தெளிவாக ஒன்றும் தெரியவில்லை. அதைக் கண்டுபிடித்து முடிவு சொல்லும் போது புகைமூட்டம் இல்லாமல் போய்விடும்! அப்போது இது பற்றியான பேச்சும் மறந்துவிடும்! மீண்டும் அடுத்த ஆண்டும் வரும்வரை அனைத்தும் மறந்து போகும்!
No comments:
Post a Comment