நன்றி: வணக்கம் மலேசியா
மனிதவள அமைச்சு நியோஸ் என்கிற அமைப்பின் மூலம் பல தொழில் திறன் பயிற்சி திட்டங்களை இளைஞர்களின் நலனுக்காக வழங்கி வருகிறது.
எந்த வித தொழில் திறனும் இல்லாதவர்கள் இது போன்ற பயிற்சிகளின் மூலம் தங்களது தொழில் திறனை வளர்த்து கொள்வது காலத்தின் கட்டாயம். வெறுங்கையில் முழம் போட முடியாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். எந்தவொரு பயிற்சியுமின்றி, எந்தவொரு தொழில் திறனுமின்றி "வேலை இல்லை! வேலை இல்லை! என்று கூவிக் கொண்டிருப்பதில் பயனில்லை.
இந்திய இளைஞர்கள் திறமையில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. இயற்கையாகவே அவர்களிடம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றது. நான் இதனைப் பல இளைஞர்களிடம் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். இது போன்ற பயிற்சிகளில் ஈடுபடும்போது அவர்களது திறமை ஊக்குவிக்கப்படுகிறது. அவர்களது திறமை வெளிச்சத்திற்கு வருகிறது.
மனிதவள அமைச்சு பயிற்சி காலத்தில் உங்களுக்குப் பணம் தருகிறது. நீங்கள் தங்குவதற்கான வசதிகள் கொடுக்கின்றது. உங்களுக்குச் சாப்பாடு போடுகிறது. நீங்கள் உங்கள் கையிலிருந்து எந்த செலவையும் செய்ய ஒன்றுமில்லை.
நம்மிடம் உள்ள ஒரே குறை: இந்த செய்திகள் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேருவதில்லை. முன்பாவது ம.இ.கா. வை நாடலாம் என்கிற நிலைமை இருந்தது. இப்போது உள்ள பிரச்சனை: யாரை நாடுவது? ம.இ.கா. வை ஒதுக்கியாகிவிட்டது. இப்போது ஆளும் கட்சிகளுக்கு எந்த அலுவலகமும் இல்லை. எங்கே போவது என்று தெரியவில்லை.
நேரடியாகவே 'ஆன்லைன்' மூலம் மனு செய்யலாம். அதுவும் நல்ல ஏற்பாடு தான். இன்றைய இளைஞர்கள் அதுவும் தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றனர்! சரி அதையும் விடுவோம்.
இப்போதைய முக்கிய தேவை தொழில் திறன் பயிற்சிகளைப் பற்றியான செய்திகள் நமது இந்திய இளைஞர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அது எப்படி என்பதைத்தான் ஆராய வேண்டும். மனிதவள அமைச்சு பல வழிகளில் இந்த செய்திகளைக் கொண்டு சேர்க்கின்றது. ஆனால் நமது இளைஞர்களோ அது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கின்றனர்.
இருந்தாலும் நாம் அலட்சியமாக இருந்தவிட முடியாது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அலட்சியமாக இருந்துவிட முடியாது. ஆக்ககரமான செயலில் ஈடுபட வேண்டும். நீங்கள் 'கம்' மென்று இருந்தால் பின்னர் கேள்விக்கணைகள் உங்களை நோக்கித்தான் வரும்!
திறமைகளை வளர்த்துக் கொள்வோம்! தலை நிமிர்ந்து வாழ்வோம்!
No comments:
Post a Comment