செனட்டர் டத்தோ நெல்சென் அவர்களைப் பாராட்டுகிறோம்
இந்திய மாணவர்கள் சுமார் 30 பேர் தாங்கள் விரும்பிய மருத்துவதுறையில் கல்வி கற்க வாய்ப்பு வழங்காமல் வேறு துறையில் வாய்ப்பு வழங்கியது ஏன் என வினா தொடுத்திருக்கிறார் ம.இ.கா. வின் கல்விப்பிரிவுத் தலைவர் டத்தோ நெல்சன்.
அந்த 30 மாணவர்களும் மருத்துவம் பயில தகுதியற்றவர்களாக இருந்தால் நாம் அது பற்றி எதுவும் பேசப் போவதில்லை. அனைவரும் அனைத்து தகுதியும் உள்ளவர்கள். பின்னர் ஏன் இந்த புறக்கணிப்பு? நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!
ஒவ்வொரு நாடும் மருத்துவம் பயில சிறந்த மாணவர்களையே அல்லது அதிகம் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களையே தேர்ந்தெடுக்கும் ஒரு முறையையே கையாள்கிறார்கள். ஒருசில கல்லூரிகளில் தில்லு முல்லுகளும் உண்டு. பணம் கொடுத்து இடம் பிடிப்போரும் உண்டு.
நமது நாட்டில் அப்படி ஒரு நிலை இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. பணம் கொடுத்தால் இடம் கிடைக்கும் என்கிற நிலைமையில் நாம் இல்லை. மருத்துவம் பயில இது தான் தகுதி என்கிற ஓர் அளவுகோள் இருக்கிறதா என்பதும் புரியவில்லை.
எப்படி இருந்தாலும் ம.இ.கா.வின் கல்விப்பிரிவின் தலைவர் டத்தோ நெல்சன் அவர்களின் இந்த அக்கறையையும், முயற்சியையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும். காரணம் ஒற்றுமை அரசாங்கத்தின் இந்தியத் தலைவர்கள் யாரும் இந்தப் பிரச்சனையில் அக்கறை காட்டாத சூழலில் டத்தோ அவர்கள் அக்கறை காட்டியிருக்கிறார். பாராட்டுகள்!
ஆனாலும் பிரச்சனையை டத்தோ அவர்கள் வெளிக் கொணர்ந்திருக்கிறார் என்பதிலே நமக்கு மகிழ்ச்சிதான். இனி என்ன செய்யப் போகிறார்? 'பிரச்சனையைக் கொண்டு வந்துவிட்டேன். என் வேலை முடிந்தது' என்று கைகழுவிவிட்டு நகர்ந்துவிடுவாரா? அப்படி ஒரு சிந்தனையில் டத்தோ இருந்தாரானால் நமது அனுதாபங்கள். அது தான் உங்கள் நிலை என்றால் இதனைச் சொல்லுவதற்கு செய்தியாளர்கள் தேவையில்லையே!
இந்தப் பிரச்சனைக்கு இத்தோடு டத்தோ அவர்கள் முற்றுப்புள்ளி வைக்கக் கூடாது என்பது தான் நமது வேண்டுகோள். இனி தொடர் முயற்சிகள் வேண்டும். கல்வி அமைச்சரைச் சந்திக்க வேண்டும். தேவை என்றால் பிரதமரைச் சந்திக்க வேண்டும். முயற்சிகள் தொடர வேண்டும்.
பொது மக்களுக்கு என்ன நடந்தது என்பது அறிவிக்கப்பட வேண்டும். இத்தனை ஆண்டுகள் தேசிய முன்னணி அரசாங்கம் நம்மை இளிச்சவாயர்களாகவே நடத்தி வந்திருக்கின்றது! இப்போது ஒற்றுமை அரசாங்கம். இனியும் அது தொடரக் நாம் அனுமதிக்கக் கூடாது.
பார்ப்போம்! இனி ம.இ.கா. என்ன செய்யப் போகிறது; பக்கத்தான் கூட்டணி என்ன செய்யப் போகிறது. பார்ப்போம்!
No comments:
Post a Comment