Sunday 17 September 2023

தற்கொலைகளை தவிர்ப்போம்!


என்னவோ, எவ்வளவோ சொல்லியாயிற்று. ஆனால் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. யாரை நொந்து கொள்வது?

தற்கொலைக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். தற்கொலை செய்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.  எல்லாரும் சொல்லுவது போல "அந்த நிமிடத்தை தவிர்த்துவிட்டால்" அதன் பின் அவர்கள் சகஜமாகி விடுவார்கள். ஆனால் மாட்டிக்கொள்பவர்கள் அந்த  நிமிடத்தை தவிர்க்க முடியாவிட்டால் என்ன செய்வது?

அரசாங்கம் பல வசதிகளைச் செய்து கொடுத்திருக்கின்றது. மனநோய் சம்பந்தமான  பிரச்சனைகளைக் களைய  தொடர் சிகிச்சைகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சிகிச்சையும் தொடர்கிறது.

தற்கொலைகளைத் தடுக்க பல தனியார் இயக்கங்கள் ஆலோசனைகள் கொடுக்கின்றன. அவர்களுடைய தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் அவர்கள் அதற்கான ஆலோசனைகளைக் கொடுப்பார்கள்.

இப்போது நம் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.எதற்கு என்றே புரியவில்லை. அதுவும் இந்தியப் பெண்களின் நிலை பரிதாபம். சமீபகாலமாக நானும் 'டிக்டாக்' பார்த்து வருகிறேன். ஒரு சிலரின் போக்கு நமக்கு அதிர்ச்சியை  அளிக்கிறது. இது போன்ற ஆபத்தில் உள்ளவர்கள  நிச்சயம் ஆலோசனைகள் பெற வேண்டும். இயக்கங்களின் தொலைபேசி எண்களை வைத்திருக்க வேண்டும். தேவையோ இல்லையோ நேரம் வரும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்ப்பட இசையமைப்பாளர் விஜய் அண்டனியின் மகள், மீரா செய்து கொண்ட தற்கொலையினால்  இன்று பல பெற்றோர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக உலகம் எங்கிலுமுள்ள தமிழர்கள். அந்தப் பெண்ணுக்கு என்ன தான் குறைச்சல்? அப்படி ஏதும்  இருப்பதாகத் தெரியவில்லை. எது கேட்டாலும் கிடைக்கும், எதற்கும் குறைச்சலில்லை, எல்லாமே கைக்கு எட்டிய தூரம் தான் அதற்கு மேல் ஏன்ன வேண்டும்? அது தான் நமது கேள்வி.

ஆனால் இன்னொரு பக்கம் பார்த்தால்  'எல்லாமே கிடைக்கும்' என்பது தான்   குழந்தைகளுக்கு  மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகத்  தோன்றுகிறது!  என்னவோ நமக்குப் புரியவில்லை! நமது உலகம் வேறு குழந்தைகளின் உலகம் வேறாக இருப்பதாகத் தோன்றுகிறது.

நமக்குத் தெரிந்ததெல்லாம்  பிரச்சனை வரும்போது குழம்பிப் போகாதீர்கள். மனநல மருத்துவரிடம்  சென்று  சிகிச்சைப் பெறுங்கள். அதற்கான வசதிகள் நம் நாட்டில் உண்டு.

தற்கொலைகள் வேண்டவே வேண்டாம்!

      

No comments:

Post a Comment