Friday, 31 May 2024

அப்படி என்ன கோபம்?

 

ஒரு நான்கு வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம். என்ன சொல்லுவது? எப்படிச் சொல்லுவது?

குழந்தைகளுக்குத் தண்டனைக் கொடுப்பதில் கூட  எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்,  எப்படியெல்லாம் செயல்படுகிறார்கள்? மிருகங்கள் கூட தங்களது குட்டிகளை எப்படியெல்லாம் பாதுகாக்கின்றன.  மனிதனுக்கு மட்டும் ஏன் புத்தி இப்படிப் போகிறது? நம்மாலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் தண்டனைகள் தான் கடுமையானது  என்றால்  சிங்கப்பூரியரின்  மனமும் கல்லாகத்தான் இருக்கும் போல் தோன்றுகிறது! என்ன செய்ய? ஒரு குழந்தைக்கு இப்படியா தண்டனைக் கொடுப்பார்கள்?

அவன் நான்கு வயது குழந்தை.  ஏதோ அவனது உடையிலேயே மலம் கழித்துவிட்டான்.  பொறுமை காப்பது கடினம் தான்.   ஆனால் என்ன செய்ய? பொறுமை காப்பது பெற்றோரின் கடமை. அந்த இடத்தில் தாய் இருந்திருந்தால்  அவள் அந்தத் தவற்றினைச் செய்திருக்க மாட்டாள். தகப்பன்மார்களுக்குப் பொறுமை இல்லை.

தண்டனையாக தந்தை குழந்தையின் வாயில் மிளகாயைத் திணித்துவிட்டிருக்கிறார். அந்த மிளகாய் தொண்டையில் போய் சிக்கிக் கொண்டது.  அதுவே குழந்தையின்மரணத்திற்குக் காரணமாகிவிட்டது. பாவம். அந்தக் குழந்தையின் ஆயுள்  அவ்வளவு தான் என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

முப்பத்தெட்டு வயதான  குழந்தையின் தந்தைக்கு எட்டு மாத சிறத்தண்டனையை நீதிமன்றம் விதித்திருக்கிறது.  இப்போது அவர் சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

சந்தித்த வேளை,  சிந்திக்கவே இல்லை இழந்துவிட்டேன் உன்னை.

Thursday, 30 May 2024

ஏன் இந்த கொடூர தண்டனை?

 இதனை நாம் எப்படித்தான் புரிந்து கொள்வது?  தண்டனைக் கொடுப்பதில் தவறில்லை.  ஆனால் இப்படியொரு கொடூர தண்டனையா என்று  நம்மால் கேட்கத்தான் முடியும்.  ஓர் ஆசிரியர்,  பிள்ளைகளுக்கு எது சரியான தண்டனை என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

இன்றைய கடுமையான வெயில் காலத்தில்  சாதாரணமாக யாராலும் வெளியே போக முடிவதில்லை.  பலர் குளிரூட்டியைத் தேடி ஓடுகின்றனர்.  சிலர் குளிர்பானங்களைச் சலிக்காமல் குடித்துக் கொண்டிருக்கின்றனர். என்ன தான் செய்வது?

ஏற்கனவே  இந்த வெப்பத்தின் அளவை  தாங்க முடியாத நிலையில் இரண்டு மாணவர்கள் இறந்து போனார்கள் என்கிற செய்தியையும் நாம் படித்திருக்கிறோம்.  குறிப்பிட்ட  இந்த ஆசிரியர் செய்திகளைப் படிப்பதில்லை என்பது  நமக்குப் புரிகிறது.  அன்றாடச் செய்தி என்பது ஓர் ஆசிரியருக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  ஏன் கல்வி அமைச்சு கூட எந்தவித புறப்பாட  நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்கிற அறிவிப்பையும் செய்திருக்கிறதே.  தண்டனை என்பது அதில் அடங்கவில்லையோ!

ஓர் ஐந்தாம் வகுப்பு,  11 வயது மாணவனை,  இரண்டு மணி நேரம் வெய்யிலில் நிற்குமாறு தண்டனைக் கொடுப்பது எத்துணைக் கொடுமை என்பதை  அவர் எப்படி அறியாமல் போனார்?  சரி அவர்தான் அறியவில்லை. பள்ளித் தலைமையாசிரியருக்குத் தெரியாமலா போயிருக்கும்?   நடுத்திடலில் ஒரு மாணவனை நிற்க வைத்திருப்பதை   யாருமே அறிந்திருக்க வில்லையா?  அது எப்படி சாத்தியம்?  அவர் குளிரூட்டியில்  மட்டும் தான் இருப்பாரோ?

இப்போது அந்த மாணவன் OKU  என்று முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறான். அவனுக்கு அது வாழ்நாள் தண்டனை.  அவனால் இனி சராசரி  மனிதனாக  வாழ வழியில்லை. நிரந்தரமாக்கப்பட்ட  ஊனம்.  பையனுடைய எதிர்காலம்?  பெற்றோர்களின்  பரிதாபம்?

கல்வி அமைச்சின் நடவடிக்கை என்ன என்பதைப்  பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, 29 May 2024

சமய நல்லிணக்கம் தேவை!

 


"முஸ்லிம்கள் மற்ற மதத்தினரோடு  விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்  என்பது போல  பிற மதத்தினரும் முஸ்லிம்களோடு விட்டுக் கொடுத்து வாழ்வது  என்பது மிக மிக அவசியம்.  முஸ்லிம்கள் மற்ற மதத்தினரோடு  புரிந்துணவோடும் அக்கறையோடும் பொறுப்போடும் வாழ வேண்டும்  என்பது எப்படி அவசியமோ  அதே போல மற்ற மதத்தினரான  புத்த, கிருஸ்துவ, இந்துக்களும்  இஸ்லாமியர்களோடு  அப்படியே  வாழ்வதும் அவசியம்"  என்று நமது பிரதமர்  ஜப்பானிய பல்கலைக்கழகமொன்றில் ஏறக்குறைய மேற்கண்டவாறு கூறியிருப்பது  மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று.

எல்லாப் பிரச்சனைகளையும் விட  சமய நல்லிணக்கம் என்பது தான்  ஒரு நாட்டின்  நலனுக்கு மிக நன்மைப் பயக்கும்.   சமய நல்லிணக்கம் இல்லாமல் ஒரு போதும்  நாடு வளர்ச்சியடைய வாய்ப்பில்லை. இனங்களுக்கிடையே  சமய புரிந்துணர்வு இல்லையென்றால்  நாட்டில் அமைதியின்மை தான் நிலவும்.

சமய நம்பிக்கை எந்த அளவு மனிதனுக்கு அவசியமோ  அந்த அளவுக்குச் சகிப்புத்தன்மையும் அவசியம்.  பல நாடுகளில் மத சகிப்புத்தன்மை என்பதே இல்லை.  இஸ்ரேல் - பாலஸ்தீனம் சண்டை என்பது  என்னன்னவோ   பெயரில் சொன்னாலும் அது ஒருவகையில் யூத மதத்தினருக்கும் இஸ்லாமிய மதத்தினருக்குமான சண்டை தான். இலங்கையில் புத்த - இந்து மதத்தினரிடையே சண்டை ஏற்பட்டதின் தொடக்கம்  சமயம் தான்.

அதனால் தான் மதம் சம்பந்தமான பிரச்சனைகள் எழும் போது அது முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்  என்று பல நாடுகள் எச்சரிக்க மணி அடிக்கின்றன.   அதனையும் மீறி பல நாடுகளில் பல சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

நமது பிரதமரின் கருத்து நம் நாடு மட்டும் அல்ல எல்லா நாடுகளும் அவசியம் பின்பற்ற வேண்டிய கருத்து.  சமயம் என்றாலே சண்டை சச்சரவு என்பது போய் அமைதி, சமாதானம் என்கிற நிலை வரவேண்டும். அதற்கு மக்கள் என்பது போய் குருமார்களே மக்களை வழிநடத்த வேண்டும்.

மதத்தை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதனை வைத்து  காசு சம்பாதிக்க நினைப்பதோ,  அரசியல் பதவிகள் பெற நினைப்பதோ  கண்டிக்கத்தக்கது.

இன்று பல நாடுகளில் சமய நல்லிணக்கம்  இல்லாததற்கு அரசியல்வாதிகளே காரணம்.  அவர்களே சமயத் தலைவர்களைத் தூண்டிவிட்டு  மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்றனர்.

எப்படியோ சமயம் என்று ஒன்று இருக்கும் வரை அரசியல்வாதிகள்  அதனைத்தான் பதவிகளைப் பிடிக்க குறுக்குவழியாகப் பயன்படுத்துவர்.  வேறுவழியில்லை!  நிஜம் அது தான்!

Tuesday, 28 May 2024

பூச்சி கறி மசாலா!

                                      இந்திய தயாரிப்புகள் - மீன் மசாலா தூள்

மீன் மசாலாத் தூள்கள் மூலம் கொஞ்சம் நிம்மதியாக இருக்க வேண்டு மென்றால்  நமது உள்ளூர் மசாலாக்களையே பயன் படுத்துங்கள்.  அது தான் உடம்புக்கு நல்லது.

நமது உள்ளூர் தயாரிப்புக்கள் என்றால் சுகாதார அமைச்சு கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்துக் கொண்டு  அதனைச் சோதனை செய்ய  இறங்குவார்கள்.  அதனால் உள்ளூர் தயாரிப்புக்கள் , சரியாகச் சோதிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது. 

ஆனால் இந்திய மீன் மசாலைகள்  போதுமான சோதனைகள் செய்த பிறகு  பொது மக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறதா  என்பது  கேள்விக்குறியே.  காரணம் இந்தப் பிரச்சனையை பினாங்கு பயனீட்டாளர் சங்கம், சுகாதார அமைச்சுக்குப் புகார் செய்த பின்னரே சுகாதார அமைச்சு இந்த  மீன் மசாலைகளுக்குத் தடை விதித்திருக்கிறது!  ஏற்கனவே  ஹாங்கோங், சிங்கப்பூர் போன்ற நாடுகள் இவைகளைத் தடை செய்து விட்டன.  சுகாதார அமைச்சு ஏன் முன்பே தடைசெய்யவில்லை என்பதற்கான  காரணம்  தெரியவில்லை.

ஆனாலும் சுகாதார அமைச்சின் அறிவிப்பின்படி:  எவரஸ்ட் மீன் மசாலை ஒரே முறை  மட்டும் தான், கடந்த ஏப்ரல் மாதத்தில்,  இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது.  எம்.டி.எச். மசாலை இறக்குமதி செய்யப்பட்டதற்கான எந்தவொரு குறிப்பும் இல்லையென சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இந்த இரு மீன் மசாலைத் தூள்களிலும் பூச்சிக்கொல்லிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒருவகை இரசாயனம் கலக்கப்பட்டிருப்பதாக  பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டுபிடித்து அறிவித்தது.

சுகாதார அமைச்சு இப்போது விற்பனைக்கு இந்த மீன் மசாலைகள்  தடைசெய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு செய்திருக்கிறது. அதே சமயம் அதன் விளம்பரங்களையும் தடை செய்திருக்கிறது.

மக்கள் ஏமாந்தால் பூச்சிக்கொல்லியைக் கூட மசாலைத்தூள் என்பார்கள் இந்த வியாபாரிகள்!

Monday, 27 May 2024

ஏன் இந்த நிலை? ஆராயுங்கள்!

SPM  பரிட்சையில் தோல்வி என்பது வேறு.  ஆனால் தேர்வே எழுதவில்லை என்பதே வேறு.

ஆமாம்,  சுமார் 10,000 த்திற்கு மேற்பட்ட  மாணவர்கள்  பரிட்சை எழுதவரவில்லை.  அனைவருமே ஏற்கனவே பரிட்சை எழுத  பதிந்து கொண்டவர்கள் தான்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை வேறு.   கோவிட்-19 பெருந்தொற்றால் பல தடைகள்.  அதனால் மாணவர்கள் பரிட்சை எழுத  வாய்ப்பில்லை என்று ஊகிக்கலாம். ஆனாலும் பெரும்பாலான மாணவர்கள் பரிட்சை எழுதி  இப்போது மேற்கல்விக்கும் போய்விட்டனர்.

பரிட்சை எழுதி தேர்ச்சி அடையவில்லையென்றால்  அவர்கள் தொழிற்கல்வி பயில வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.  தோல்வி அடைந்தால் கூட இடைநிலைக் கல்வியை முடித்திருப்பதற்கான  அடையாளம்  உண்டு.  ஆனால் பரிட்சையே எழுதவில்லை என்றால் இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?  அவர்கள் தவறான பாதையில் போவதற்கான  வழிகள்  நிறையவே இருக்கின்றன.  தீய சக்திகள் அவர்களைச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைத் தவறான பாதைகளுக்கு இழுத்துச் செல்ல பலர் காத்திருக்கின்றனர்.

குறிப்பாக கஞ்சா விற்பனை, திருட்டுச் சம்பவங்கள், பணம் வசூல் செய்ய அடியாட்கள் - இவர்கள் ஒரு பக்கம்  யார் எந்த இளைஞன் அகப்படுவான் என்று காத்துக் கிடக்கின்றனர்.  அவர்களுக்கு அவர்கள் வேலைகள் நடக்க வேண்டும். பெற்றோர்கள் கொஞ்சம் ஏமாந்தால்  பிள்ளைகளின் எதிர்காலமே ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.

முடிந்தவரை இந்த மாணவர்களுக்கு மீண்டும் அவர்களின் கல்வியைத் தொடர  பெற்றோர்கள் முயற்சிகளை எடுக்க வேண்டும்.  கல்வி மட்டும் தான் அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டும்.

அதைவிட  கல்வி அமைச்சு  சரியான  காரணங்களை ஆராய வேண்டும். எவ்வளவு தான் ஏழை மாணவர்களாக இருந்தாலும்  அரசாங்கமும் அவர்களுக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கின்றது.  வேறு காரணங்கள் என்னவாக இருக்கும்?  கல்வி அமைச்சு தான் உண்மையை உடைக்க வேண்டும்.

Sunday, 26 May 2024

வேறு ஆளே இல்லையா!

 

மெட் ரிகுலேஷன் கல்விக்கான நுழைவுகள் ஆரம்பமாகிவிட்டன.

இனி நமது மாணவர்களின்  நிலை என்ன என்பது பற்றி  யாருக்கும் தெரிய நியாயமில்லை. மெட் ரிகுலேஷன்  கல்லூரிகளையெல்லாம் இரும்பு பூட்டு போட்டு மிகவும் இறுக்கமாக  பூட்டி வைத்திருக்கிறது கல்வி அமைச்சு!  அவர்கள் வாயே திறப்பதில்லை!

மேல்சபையில்  இரண்டு புண்ணியவான்கள்  - இந்திய செனட்டர்கள் -  இதனைப்பற்றி பேசியிருக்கிறார்கள்.  இந்திய மாணவர்களுக்கு, இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் 2500 இடங்கள் ஒதுக்கியது போல,  இன்றைய அரசாங்கமும்  ஒதுக்க வேண்டும் எனக்  கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அந்த இரண்டு பெருமகனார்களைத் தவிர்த்து வேறு யாரும் கண்டு கொள்ளவில்லை.   அந்த இரண்டு பேருக்கும் நன்றி!

நாடாளுமன்றத்தில் ஓரளவு இந்திய உறுப்பினர்கள் உள்ளனர். பெரிய எண்ணிக்கை இல்லையென்றாலும்  சுமார் பத்து பேராவது இருக்கத்தான் செய்வர். இவர்கள் அனைவரும்  ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக ஏன் பிரதமர் அன்வாரை சந்திக்கக் கூடாது?  உங்களுடன் மேல்சபை உறுப்பினர்களையும்  சேர்த்துக் கொள்ளலாமே.

பிரதமரை சந்திப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? எங்களால் முடியாது. ஆனால் நீங்கள்  மக்கள் பிரதிநிதிகள் ஆயிற்றே!  உங்களுக்கு என்ன தடை?  ஒரு தடையும் இல்லையே!  கல்விக்காக, இந்திய மாணவர்களுக்காக, இதைக்கூட உங்களால் செய்ய முடியாதா?  ஒவ்வொரு ஆண்டும்  நமது சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள்  எந்த அளவு  காயப்படுத்தப் படுகின்றனர் என்பதை நீங்கள் அறியாதவர்களா?

இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டவே முடியாதா?  இது உங்களுக்கு அசிங்கமாகத் தெரியவில்லையா?   இந்த சமுதாயம் ஒவ்வொரு ஆண்டும் போராட்டங்களையே சந்தித்து வருகிறது.  அதுவும் கல்வி என்றாலே அதிகப்  போராட்டம்.  வெளியே உள்ள மக்கள்,  நாங்கள்,  அதனைக் கண்டு  வெட்கமடைகிறோம்.  ஆனால் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய இடத்தில் இருக்கும் உங்களால்  அது பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லையே!

இந்த நேரத்தில் எங்களுடைய கோரிக்கை  இது தான்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஒன்று சேர்ந்து, ஒரு குழு அமைத்து, பிரதமரைச் சந்தித்து இதற்கு ஒரு முடிவு காணவேண்டும்.  இனி மேலும்  இந்தப் பிரச்சனையை இழுத்துக் கொண்டே போவது அவமானத்திலும் அவமானம்!

இந்தப் பொறுப்பு இரண்டு செனட்டர்களுக்கும்  மட்டும் உரியதல்ல. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரியது என்பதை அறிக!

Saturday, 25 May 2024

படிப்பை நிறுத்த வேண்டாம்!


எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் அனைவருக்கும் நமது வாழ்த்துகள். வெற்றி பெற்ற பல மாணவர்களுக்கு  அடுத்து என்ன செய்வது என்கிற தடுமாற்றம்  இருக்கத்தான் செய்யும். எஸ்.டி.பி.எம்.  எடுப்பதற்குத்  தயார் நிலையில் இருக்கும் மாணவர்கள்  அதனைத் தொடர்வதில் தயக்கம் வேண்டாம். தொடருங்கள்.  எஸ்.டி.பி.எம்.  வேண்டாம் என்று நினைப்பவர்கள். கல்வியைத் தொடர்வதற்கு  நிறைய வாய்ப்புகள் உள்ளன. 

இன்று கல்வியாளர்கள் பலர் வழிகாட்டுகின்றனர். நிறைய வாய்ப்புகளை அறிவிக்கின்றனர். அவர்கள் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்களுடைய கைப்பேசிகளைப் பயன்படுத்தியே பல தகவல்களைப் பெற்றுவிடலாம்.  கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.  ஒரு முயற்சியுமே செய்யாமல்  மற்றவரைப் பழி கூறாதீர்கள்.

நீங்கள்  எஸ்.பி.எம்.  தேர்வில்  தோல்வி அடைந்திருந்தாலும்   அவர்களும்  தங்கள் கல்வியைத் தொடர வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.  டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. கொஞ்சம் உள்ளே போய் பலவேறு வாய்ப்புகளைப் பற்றி  அறிய முயற்சி செய்யுங்கள்.  ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.  ஒரு கதவை மூடினால் இறைவன் ஒன்பது கதவுகளைத் திறந்து வைத்திருப்பார் என்பார்கள். நம்முடைய குறைபாடுகள் எல்லாம் மாணவர்கள் எதனையும்   ஆழமாகப் போய் பார்ப்பதில்லை.  போனால் தானே தெரியும் பொன்னான வாய்ப்புகள் பல உண்டு என்பது.

ஒன்றை மனதில் வையுங்கள்.  உங்கள் கல்வித் திறன் எத்தகையாக  இருந்தாலும்  அதனை மேம்படுத்த பல வழிகள் உண்டு.  இப்போது வழிகாட்டுதல்களும்  நிறைய உண்டு.   தேர்ந்தெடுப்பதற்குப்  பல துறைகளில்  குவிந்து கிடக்கின்றன.  இங்கெல்லாம் நமக்கு எங்கே கொடுக்கப் போகிறார்கள்  என்று நீங்களே ஒரு முடிவுக்கு வரவேண்டாம். கல்வி பொதுவானது; அனைவருக்குமானது.  அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.  நமது தவற்றினை மற்றவர் மீது போடாதீர்கள்!

இப்போதைய உலகம் போட்டி நிறைந்தது.  தகுதி இல்லாத கல்வியை வைத்துக் கொண்டு  யாரோடும் நம்மால் போட்டியிட முடியாது.  என்ன வாய்ப்புகள் உள்ளனவோ அதனைப் பயன்படுத்திக் கொண்டு  உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

கடைசியாக அரசாங்க கல்வி நிலையங்களையே  பயன்படுத்துங்கள். தனியார் நிலையங்கள் பணத்தை நோக்கமாகக் கொண்டவை. பி.40 மாணவர்களுக்கு வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. அவைகளைப் பயன்படுத்திக் கொள்வது உங்களின் கடமை.

வாழ்த்துகள்!

Friday, 24 May 2024

ஆசிரியர் பற்றாக்குறை ஏன்?

      நன்றி:  வணக்கம் மலேசியா

 இடைநிலைப் பள்ளிகளில்  தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை என்பது புதிய பிரச்சனையல்ல! எப்போதும்  உள்ள பிரச்சனை!  அற்ப மகிழ்ச்சிக்காக தலைமை ஆசிரியர்களால் உருவாக்கப்படும் பிரச்சனை.

காரணம்,  இது தலைமை ஆசிரியர்கள் அவர்களோடு கலவி அமைச்சில் உள்ள சில கூட்டுக் களவாணிகள்,  ஆகியோர்களால் ஏற்படுத்தப்படும் ஒர் செயற்கையான  பிரச்சனை!  மற்றபடி யாரும் இங்குத் தடையாக இல்லை, தலைமை ஆசிரியர்கள் தவிர!

பிரச்சனை நமக்கு என்னவென்று தெரிகிறது.  ஆனால் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  அன்று ம.இ.கா. விட்டுக் கொடுத்த பல பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.  அதனால் தான் இன்றும் ம.இ.கா.  நம்மிடம் திட்டு வாங்கிக் கொண்டியிருக்கிறது!

ஆனால் இன்று  நமக்குப் புதிய அரசாங்கம் அமைந்திருக்கிறது.  இப்போது இந்த பிரச்சனைகளுக்கெல்லாம்  தீர்வு காண வேண்டிய நேரம். இன்றைய அரசாங்கத்தில்  ஜ.செ.க., பி.கே.ஆர். போன்ற கட்சிகளின் கலவையில உள்ளன.  சீனர்களின் பிரச்சனை என்றால் இந்நேரம் ஜ.செ.க., ம.சீ.ச. போன்ற கட்சிகள் குரல் எழுப்பிருக்கும்!  தமிழர் பிரச்சனை என்றால்  குரல் எழுப்ப ஆளில்லை!  

யாரும் குரல் எழுப்பவில்லை என்றால் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை யாரால் களைய முடியும்?   இந்தியர்கள் பிரச்சனை என்னவென்று அனைவரும் அறிந்திருக்கின்றனர்.  ஆனால் அதனை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லத்தான் ஆளில்லை!

என்னைக் கேட்டால் அரசாங்கத்தில்  முழு  அமைச்சராக இருக்கும் கோபிந்த் சிங்  டியோ அவர்களிடம்  செல்லுவதே சிறப்பு என்று நினைக்கிறேன். காரணம் அவரைப் பார்த்தாலே அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு ஒரு  மரியாதை வரும்!  நம்மைப் பார்த்தால் அவர்களுக்குக் கோமாளிகளாகத்தான் தெரிகிறோம்! ஏன்? நமது பிரதமருக்கே அப்படித்தானே!  காரியம் ஆக வேண்டுமென்றால் - கோல் அடிக்க வேண்டுமென்றால் - கோபிந்த்சிங் தான் சரியான மனிதர்!

இப்போது இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கும் தமிழ் சார்ந்த அமைப்புக்களை நாம் பாராட்டுகிறோம்.  இதற்கு ஓர் நிரந்தர தீர்வே முக்கியமானது.  அதனை நோக்கியே நமது பயணம் அமைய வேண்டும்.

Thursday, 23 May 2024

இதற்கு சாத்தியம் உண்டா?

 

ஒருசில விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

பிரதமர் அன்வாரின் அமைச்சரவையில் ஒரு மாற்றம்.  இந்தியர்களைப் பிரதிநிதிக்க  தமிழ் பேசுபவர்களே பிரதான அமைச்சராக இருப்பார்கள்.  அப்படி ஒரு நடைமுறையை அந்தக்கால அரசியல்வாதிகள்  கடைப்பிடித்து வந்தார்கள்.  அந்த முறை நமக்கும் ஏற்றதாக இருந்தது.

கடைசியாக அமைந்த அமச்சரவையில் ஜ.செ.க. அதனை மாற்றியது. ஒரு சீக்கியரை முழு அமைச்சராக மாற்றியது.  ஜ.செ.க.  இப்போது தமிழர்களை ஓரங்கட்டும் நேரம்.  முடிந்தவரை இப்போது தமிழர்களை அவர்கள் களையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் நமது ஆதரவு என்பது பிரதமர் அன்வாரின் கட்சியான பி.கே.ஆர்.  பக்கம் சாய்ந்துவிட்டதாக  அவர்கள் நினைக்கிறார்கள்.

இப்போது நமது  விஷயத்திற்கு வருவோம். சமீபகாலமாக நாம் கேட்கும் அவலக்குரல்:  தமிழ் பேசும் ஒரு இந்தியர் முழு அமைச்சராக  வரவேண்டும் என்பது தான். வருவதில் நமக்கு  ஆட்சேபனையில்லை. வரவேற்கவே செய்வோம்.  

ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.   இத்தனை ஆண்டுகள் நாம் யாரைக் குற்றம் சொல்லி வந்தோம்?  அறுபது ஆண்டுகளாக ஒன்றையும் செய்யவில்லை  என்று யாரைப்பார்த்து புலம்புகிறோம்?  அந்த அமைச்சர்கள் அனைவருமே  தமிழ் பேசியவர்கள் அல்லவா!  ஆனால் ஏன் அவர்களால் இந்திய சமுதாயத்தை திருப்தி படுத்த முடியவில்லை?

அவன் தமிழ் பேசுகிறானோ இல்லையோ  அவன் சுயநலவாதியாக இருந்தால்  எதுவும் நடக்காது!  அவர்கள் விட்டுப்போன குடும்பங்களைப் பாருங்கள்.  பணம் இல்லையென்று எவனாவது இளைத்துப் போயிருக்கிறனா?   எல்லாரும் பணத்தில் மிதக்கிறார்கள்!  தலைவன் தனது குடும்பத்தைப் பார்த்தான்.  காரணம் சமுதாயத்தை மறந்தால் தான்  அவன் குடும்பம் கோலாகலமாக, பட்டம் பதவிகளோடு  இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்க முடியும் என்பது அவனுக்குத் தெரியும்!

துணை அமைச்சர்களாக இருப்பவர்களைப்  பாருங்களேன்.  இப்போதே அவர்களுக்குத் தலைகால் புரியாமல் நடந்து கொள்கிறார்கள்!  இவர்களுக்கே சுயநலம் தான்  கண்முன் நிற்கிறது! அப்படியிருக்க  முழு அமைச்சர் என்றால் எப்படியிருக்கும்?  இந்த மித்ராவை வைத்துக் கொண்டு  என்ன ஆட்டம் ஆடுகிறார்கள்?  மித்ரா என்ன செய்கிறது  என்று இப்போதும்  கேள்விகள் எழத்தானே செய்கின்றன?   இவர்களிடம் உள்ள பதில் தான் என்ன?

தொண்டு செய்பவனுக்குத்தான் தொண்டின் அருமை தெரியும். சும்மா  தின்னுவிட்டு ஏப்பம் விடுபவன்  முழு அமைச்சராக இருந்தும் பயனில்லை!  பாதி அமைச்சராக இருந்தாலும் பயனில்லை!  தின்று தீர்த்தவன் எல்லாம் பதவிக்கு வந்தால்  மென்றே தீர்த்துவிடுவான்!

Wednesday, 22 May 2024

வெசாக் தின வாழ்த்துகள்!


கௌதமபுத்தரின் பிறந்த நாளில்   சில பொன்மொழிகளைப் பார்ப்போம்.


     1}   வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.

     2)    நிம்மதிக்கான இரண்டு வழிகள்:  விட்டுக் கொடுங்கள் இல்லை
            விட்டு விடுங்கள்.

     3)    இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்கு
             மட்டும் தான் உண்டு.

     4)  இந்த நொடியில் மகிழ்ச்சியாக வாழுங்கள். நிகழ்காலத்தில்         
          மகிழ்ச்சியோடு வாழ்வதுதான்  வாழ்க்கையை இனிதாக்கும்.

     5)  அதிகமாகப் பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்.



                                               ***************************

Tuesday, 21 May 2024

இது கூட பிரச்சனையா?


மாரா கல்லூரியைப்பற்றி  நாம் பெரும்பாலும் அறிந்திருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரை நாம் அந்தப்பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.  காரணம் அந்தக் கல்லூரியில் மலாய் மாணவர்களைத் தவிர்த்து  வேறு யாருக்கும் இடமில்லை.  

அதனால் நமக்கு ஒன்றும்  வருத்தமில்லை.  அதன் கொள்கை  என்னவென்று  அறிந்து தெளிந்த பிறகு  வருத்தப்பட அவசியம் ஏதும் ஏற்படவில்லை.  

அந்தக் கல்லூரி இப்போது பலகலைக்கழகமாக மாறி பல வருடங்களாகிவிட்டன.  அங்கு இதய சிகிச்சை பெறுவதற்கான ஒரு பிரிவு இப்போது நடைமுறையில் உள்ளது.  ஆனாலும் போதுமான மலாய் மாணவர்களைக் கொண்டிருக்கவில்லை. அதே சமயத்தில் மற்ற இன மாணவர்களுக்கு இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற  வேறு வாய்ப்பும் இல்லை.  இந்த நிலையில் அந்தக் கல்லூரி நிர்வாகம்/மலாய் மாணவர்கள்,   மற்ற இன மாணவர்களைச் சேர்ப்பதில்  தங்களது ஆட்சேபனையைத் தெரிவிக்கின்றனர்.  அவர்கள் கோஷமெல்லாம் இது மலாய் மாணவர்களுக்கான கல்லூரி என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு நாட்டில் உள்ள பிரச்சனை என்பது தெரியவில்லை. 

இதய அறுவ சிகிச்சைப் பெற பல நூறு நோயாளிகள்  வரிசையில்  நிற்கின்றனர்.  காரணம் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இல்லை. பயிற்சி பெற அதற்கான வாய்ப்பும் வேறு கல்லூரிகளில் இல்லை.  அந்த நோயாளிகள் சிகிச்சை பெற வெளிநாடுகளுக்குப் போக வேண்டும்  அல்லது சிவலோகம் தான்!

நமக்கு அதில் வருத்தம் தான். நோயாளிகள் அனைவரும் சீனர், இந்தியர்  என்று மாணவர்கள் நினைக்கின்றனர் போலும்.  அதில் மலாய் இனமும் அடங்குவர்  என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.  மேலும் மருத்துவ மாணவர்கள் எந்த இன பாகுபாடும் கொண்டிருக்கக் கூடாது என்பது முக்கியம். அது அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் என்னத்தப் படித்து, என்னத்தக் கிழிச்சு என்னா ஆகப்போகுது?  மருத்துவர்களின் முதல் கடமையே உயிர்களைக் காப்பாற்றுவது தான். ஒருவேளை அவர்கள் தவறாகப் பயிற்றுவிக்கப் படுகின்றனரோ!

என்னவோ சரியான புரிந்துணர்வு  இல்லாத குறை தான்  என்று  நினைக்க வேண்டியுள்ளது!

Monday, 20 May 2024

சிங்கப்பெண்ணே! வாழ்த்துகள்!

 

ஸ்குவேஷ் விளையாட்டில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் நமது நாட்டின் சிங்கப்பெண்ணான சிவசங்கரி சுப்ரமணியம்!  நாட்டிற்குப் பெருமையும் சேர்த்திருக்கிறார்!  வாழ்த்துகள்!  வாழ்த்துகள்!  வாழ்த்துகள்!

அவர் செய்த சாதனை உலகளவில் ஸ்குவேஷ் விளையாட்டில் முதல் பத்து இடங்களில் இருப்பவர்களில்  அவரும் ஒருவர் என்கிற சாதனை தான்.  நமக்கு அந்த விளையாட்டில் பெரிய புரிதல் இல்லயென்றாலும்  சாதனை புரிகின்ற போது. அதுவும் நமது பெண்களில் ஒருவர் சாதனைகளை ஏற்படுத்தும் போது நாம் அதனை நல்மனதோடு பாராட்டுவது நமது கடமையாகும்.

நம் பெண்களில் பலர் பல சாதனைகள் புரிகின்றனர். அவைகள் வெளியே தெரிவதில்லை. அவர்களுக்கு அரசாங்க உதவியோ கிடைப்பதில்லை.  எல்லாமே சொந்த முயற்சி தான்.  சொந்த முயற்சியால் தான் சாதனைகள் புரிகின்றனர்.

அந்த வரிசையில் சிவசங்கரியும் ஒருவர்.  மீண்டும்  வாழ்த்துகிறோம்!  நமது வீரப்பெண்களின் சாதனைகள் தொடரட்டும்!

Sunday, 19 May 2024

மற்ற மதங்களை மதியுங்கள்!

 

"உங்கள் மதம் பிறரால் மதிக்கப்பட வேண்டுமானால்  முதலில் நீங்கள் பிறரின் மதத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்"

இதனைச் சொன்னவர் நமது  துணைப் பிரதமர், டத்தோஸ்ரீ அமட் ஸாஹிட். சரவாக்,  காவாய் நிகழ்வொன்றில்   இதனை வலியுறுத்தியிருக்கிறார்.

துணைப் பிரதமருக்கு நாம்  நன்றி நவில கடமைப்பட்டிருக்கிறோம். நாமும் இதே கருத்தைத்தான்  காலங்காலமாகச் சொல்லி வருகிறோம்; பேசி வருகிறோம்.

ஆக, சமய நல்லிணக்கம் என்பது அனைவராலும் பிபற்றக்கூடிய  ஒவ்வோருவரின் கடமையாகும்.  தலைவர்கள் அதனை அறிந்திருக்கின்றனர்.  நாட்டில் அமைதி நிலவ சமயமே முக்கிய காரணியாக இருக்கின்றது.

சரவாக்  மாநிலத்தில்  நிலவுகின்ற சமய  ஒற்றுமையையும் துணைப் பிரதமர் பாராட்டியிருக்கிறார்.  அந்த மாநிலத்தில்  சரவாக்கியரிடையே  உள்ள சமய புரிந்துணர்வு  தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியிருக்கிறார். 

ஆனால் நம்மிடையே உள்ள பிரச்சனை எல்லாம்  அரசியல்வாதிகள் தான். அவர்களுக்குச் சமயம் என்பது மக்களின் ஆதரவு பெற  ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.  முழுமையான சமய அறிவு இல்லாத  சமுதாயத்தில் அவர்களை எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பலாம். பிரச்சனை எல்லாம் நாட்டு நலனைப் பற்றி  கவலைப்படாத அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு  யார் என்ன செய்ய முடியும்?  பட்டம், பதவி என்று அலைபவர்கள்  நாட்டு நலனைப்பற்றி கவலைப்படப் போவதில்லை.  அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் மதபோதகர்களைப் பற்றி   அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் அடங்கிவிடுவார்கள்.

மலேசிய மாநிலங்களில் சரவாக் மாநிலம் சமய ஒற்றுமையில் ஓர் எடுத்துக்காட்டு.  துணைப் பிரதமர் சொன்னது போல மற்ற மாநிலங்களும் இந்த எடுத்துக்காட்டைப் பின்பற்ற வேண்டும்  என்பது தான் நமது நிலைப்பாடும்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் சமய ஒற்றுமையில்  தான் அடங்கியிருக்கிறது. நமது நாட்டில் சமயத்தைப் பற்றி, ஒரு காலகட்டத்தில்,  எந்த ஒரு பிரச்சனையும் எழுந்ததில்லை. ஆனால் இப்போது சமயம் தான் அரசியலில் பதவியைப் பிடிப்பதற்கு ஏற்ற  ஆயுதமாக இருக்கிறது!

இதுவும் மாறும்! 

Saturday, 18 May 2024

வெளிநாட்டவருடன் திருமணமா?

 

வெளிநாட்டு ஆண்களின் மேல் ஒரு கண் வைத்திருக்கிறீர்களா? அதாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் இருக்கின்றதா? 

வெளிநாட்டு ஆடவர் என்று சொல்லும் போது  வங்காளதேசம், இந்தியா, நேப்பாளம், ஸ்ரீலங்கா போன்ற  நாடுகளைச் சேர்ந்தவர்களைத்தான்  பெரும்பாலும் நாம் குறிப்பிடுகிறோம்.  படித்தவரிடையே நடைபெறும் திருமணங்களை நாம் சொல்லவில்லை. 

இவர்கள் பிழைக்க வந்தவர்கள் என்று சொல்லுவதைவிட  'குடிக்க' வந்தவர்கள்  என்று சொல்லலாம்!  இன்றைய நிலையில் அவர்கள் தான் பெரிய குடிகாரர்கள்!  அவர்கள் ஊர்களில் இதையெல்லாம் செய்யத் தயங்கும் அவர்கள்  இங்குத் தாராளமாகக் குடிக்கின்றனர்.  பிள்ளைக்குட்டிகாரர்களை நாம் சொல்லவில்லை என்பதை அறிக!  எல்லாரையும் பொதுவாகவும் சொல்லவில்லை.  பொறுப்பானவர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.

திருமணம் புரியக் கூட நிலையில் இருந்தால்  பரவாயில்லை.  ஆனால் அவர்கள் ஊர் பக்கம் போய் விடாதீர்கள்.  போனால் உங்கள் நிலைமையே மாறிவிடும்.  அவன் உங்களை ஏமாற்றுவான்.   அவர்கள் ஊரில உங்களால் எதுவும் செய்ய முடியாது.  அங்குள்ளவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 'கணவனை' நம்பி  அவர்கள் ஊருக்குப் போனவர்கள் பலர்,  ஒன்று: சிறையில் இருக்க வேண்டும் அல்லது அடி உதையோடு வாழவேண்டும்.  இங்கு இருக்கும்வரை நீங்கள் தான் ராணி! அங்குப் போய்விட்டால்  அவன் தான் ராஜா!   உங்களிடம் உள்ள பணத்தை ஏப்பம் விட்டுவிட்டு  உங்களையும் நடுவீதிக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்!  எதற்கும் அஞ்சாதவர்கள்!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.  அவர்களில் பெரும்பாலோர்  ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பணம் இருக்கும்வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.  பணம் காலியாகிவிட்டால்....?  அங்கு அவர்களுடன் உங்களால் பேர் போட முடியாது.  இப்படி நம்பிப் போனவர்களில் பலர் வெளிநாட்டு சிறைகளில் தான் அடைக்கலம். 

இது உங்கள் வாழ்க்கை.  நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த ஊரில் வாழ்கின்ற வாழ்க்கையைப் போல் அங்கும் இருக்கும்  என்று எதிர்பார்க்காதீர்கள்.  நம்மோடு அவர்களை ஒப்பிடாதீர்கள். 

ஏமாறாதீர்கள் என்பதே நமது அறிவுரை!

Friday, 17 May 2024

மீண்டும் கோவிட் 19 ?

 

ஏனோ தெரியவில்லை மீண்டும் மீண்டும் கோவிட்-19  நம்மை நோகடித்துக் கொண்டு தான் இருக்கிறது.

நமது அண்டை நாடான சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று வந்துவிட்டால்  நமக்கும் பக்பக் என்று அடித்துக் கொள்வது இயல்பு தான். நமக்கு மட்டும் என்ன? மலேசியாவில் மட்டும் இல்லையென்று சொல்லிவிட முடியுமா? 

இங்கும் நமக்குப் பிரச்சனைகள் உண்டு.  ஆனாலும் பெரிய அளவில் தொற்று பரவவில்லை என்பது ஆறுதலான செய்தி.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைத்துவிடுவதால்  தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது என நம்பலாம்.

ஆனால் ஜோகூர் பக்கம் உள்ள மக்கள் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடேயே  இருக்க வேண்டியது அவசியம்.  சிங்கப்பூரோடு அதிகத் தொடர்புடையவர்கள் இவர்கள்.  தினசரி போக்குவரத்துகள் உள்ளவர்கள் ஜொகூர் மக்கள்.  ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில்  சிங்கப்பூருக்கு வேலைக்குப் போய் வருபவர்கள். 

தொற்று அங்கிருந்து இங்கு வரலாம் அல்லது இங்கிருந்து அங்கும் போகலாம்.  எதுவும் சாத்தியமே!    ஒரே வித்தியாசம்.  சிங்கப்பூர் அரசாங்கம் அதிவிரைவில் நடவடிக்கை எடுக்கும் என்பது மட்டும் நமக்குத் தெரியும். எடுத்தே ஆக வேண்டும்.  இல்லாவிட்டால் இரண்டு நாடுகளும் பாதிக்கப்படும். 

நம் நாட்டில் ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்பில்  இன்னும் பல நிறுவனங்கள் திறக்கப்படாமலே இருக்கின்றன.  அப்போது வேலை இழந்தவர்கள் இப்போதும் வேலை இல்லாமல் இருக்கின்றனர்.   இந்த நிலையில்  மீண்டும்  இன்னொரு தொற்றை நாடு எதிர்கொள்ள வழியில்லை.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் மீது நமக்கு நம்பிக்கை அதிகம்.  பிரச்சனைகளை அவர்கள் நீட்டிக்க விட மாட்டார்கள்.  உடனடி நடவடிக்கையில் இறங்கிவிடுவார்கள்!   

அதே போல நமது நாடும் செயலில் இறங்கிவிடும் எனவும் நம்பலாம். கோவிட்-19 தொற்று மறக்கக் கூடிய வியாதியா? இல்லவே இல்லை!

Thursday, 16 May 2024

ஏன் அவசியமில்லை?


 இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும், திட்டங்களையும் ண்காணிக்க சிறப்பு செயற்குழு எதுவும் தேவை இல்லை என்பதாகக் கூறியிருக்கிறார் டத்தோ ரமணன்.

அவர் சொல்லுகின்ற காரணம் எல்லாம் சரிதான். எல்லாத் திட்டங்களுக்கும், எல்லா நிதி ஒதுக்கீடுகளுக்கும் அதனைக் கண்காணிக்க  ஒவ்வொன்றுக்கும்  ஒவ்வொரு   செயற்குழுக்கள் உள்ளன என்பதை யாரும் மறுக்கவில்லை.

 அதில் இன்னொன்றையும் குறிப்பிட்டிருக்கிறார் டத்தோ. "பதவியில் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்தால் இன்னொரு செயற்குழு என்கிற பேச்சுக்கே இடமில்லை"  என்பது சரிதான்.   ஆனால் பதவியில் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்கள் தான்  நிறையவே இருக்கின்றன.  அதனால் தான் மித்ரா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கின்றன!  

டத்தோ சொல்லுவது போல பதவியில் இருப்பவர்கள் ஒன்று: ஒழுங்காகச்  செயல்படவில்லை.   அடுத்து அவர்களின் செயற்குழுவும் சரியாகச் செயல்படவில்லை.  பதவியில் உள்ளவர்களும்  சரியாகச் செயல்படவில்லை! அதே போல அவர்களின் செயற்குழுவும் சரியாகச்  செயல்படவில்லை!   சரியான முறையில் செயல்பட்டிருந்தால்  ஏன் மித்ராவைப்பற்றி இத்தனை குளறுபடிகள்? அந்த குளறுபடிகளைப் பற்றி டத்தோவுக்கே தெரியும். யாரும் ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமில்லை!

மித்ராவுக்குத் தலைமை தாங்கிய காலத்தில்  டத்தோ  மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.  தமிழ் பள்ளிகளுக்குத் தரமற்ற  கணினிகள் கொடுக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு!  அப்படியென்றால் என்ன பொருள்? அவர் பதவியில் இருந்த காலத்தில் அவர் சரியாகச் செயல்படவில்லை! அதே சமயத்தில் அவருடைய செயற்குழுவும் சரியாகச் செயல்படவில்லை!

இது ஒன்றே போதும்.  நிதி ஒதுக்கீடுகளையும், அமுல்படுத்தும் திட்டங்களும்  சரியாகச் செயல்பட, கண்காணிக்கப்பட   ஒரு செயற்குழு தேவைதான்.  சிலாங்கூர் இந்தியர் ஆலோசக மன்றம்  சொன்ன கருத்து சரியானதே.

டத்தோ ரமணன் பயப்பட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை!

Wednesday, 15 May 2024

குழந்தைகளுக்கு காது எப்படி?

 


குழந்தைகள் செவித்திறன் எப்படி இருக்கிறது  என்பதைக்  குழந்தைகள்  பிறந்தவுடனேயே  கவனிக்க வேண்டியது பெற்றோர்களின்  பொறுப்பு.  காரணம்  இப்போதெல்லான் பெற்றோர் டிக்டோக், யூடியூப், விடியோ  போன்றவைகளில் அதிகக்  கவனம் செலுத்துவதால்  குழந்தைகளின் நலனை மறந்துவிடுகின்றனர்.

ஆனாலும் அரசாங்க மருத்துவமனைகளில்  செவித்திறன் பரிசோதனைகள் நடப்பது  நமக்கு ஆறுதலான செய்தி.  அவர்களை மட்டுமே நம்பியிராமல் நாமும் அதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.  ஏனென்றால் இப்போதெல்லாம் செவித்திறன் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  

சென்ற ஆண்டு பரிசோதிக்கப்பட்ட  குழைந்தைகளில் சுமார்  987 குழைந்தைகளுக்குச்    செவித்திறன் குறைபாடுகள் இருந்ததாக  சுகாதார அமைச்சர்  குறிப்பிட்டிருக்கிறார். இதனை நாம் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள  வேண்டும்.  இந்த எண்ணிக்கை குறைந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.  ஆனால் வாய்ப்புண்டா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.  கூடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.  காரணம் நமது சுற்றுச்சூழல் அப்படி.

காது கேட்காத குழந்தைகளின் நிலையை எண்ணிப் பாருங்கள்.  நமது வீடுகளில் உள்ளவர்களே  அதற்கு எதிரியாக இருப்பார்கள்.   பெற்றோர்களின் அசட்டையினால்  குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  கல்வி கற்க அவர்கள் படும்பாட்டையும் யோசியுங்கள்.  ஊனம் உற்ற பிள்ளைகளாக அவர்களை மாற்றிவிடாதீர்கள்.  

கர்ப்பம் உள்ள பெண்கள் கைப்பேசி, டிக்டோக், விடியோ - போன்றவைகளை அதிகம் பயன்படுத்துவதை தவிருங்கள்.  அதிகமான சத்தங்கள் அங்கிருந்து தான் வருகின்றன. நம்மைச் சுற்றிலும் இன்னும் அதிகமாக வருகின்றன.  இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?  இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.   ஆனாலும் எல்லாமே ஓர் எச்சரிக்கைதான்!

இந்த செய்தி   இளம் பெற்றோர்களுக்கு  ஓர் எச்சரிக்கை.   மற்றபடி நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.  உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்.  செவுடு, செவிடா, செவிடி - என்று தங்கள் குழந்தைகள் அழைக்கப்படுவதை எந்தப் பெற்றோரும் விரும்பவதில்லை.

நீங்களும் அப்படித்தான்

Tuesday, 14 May 2024

பேராசிரியர் செய்தது சரிதான்!


பெராசிரியர் இராமசாமியைப் பற்றி அவதூறு பேசுவதை நாம் நிறுத்த வேண்டும். 

தமிழ் சமூகத்திற்காக பல ஆண்டுகள் போராடியவர் இன்னும் அவர் போராடி வருபவர்.  ஆனால் நமது துரதிருஷ்டம்.  ஜனநாயக செயல் கட்சி இப்போது தமிழர்களைக் களையெடுக்கும் காலம்   அவரும் களையெடுக்கப்பட்டார். அதனால் அவரது சேவை பாதியிலேயே நின்று போனது.  குறைந்தபட்சம் பினாங்கு இந்தியர்களாவது பயன்பெற்றிருப்பர்.  அதுவும் இல்லாமல் போனது வருத்தம் தான்.

கோலகுபுபாரு இடைத்தேர்தலில் அவர் ஜ.செ.க. விற்கு  வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னார்.  அது தவறில்லை தான்.  சீனர்களின் நலனுக்காக மட்டும் யோசிப்பவர்கள் அவர்கள்.  கோலகுபுபாருவின்  மூன்று தோட்டங்களின்  வீடமைப்புத் திட்டத்திற்கு லிம் குவான் எங் நிதியமைச்சராக இருந்தபோது  "பணம் இல்லை" என்று கைவிரித்துவிட்டதாக  குற்றச்சாட்டு எழுந்தது.  இது ஒன்றே போதும். அக்கட்சி இந்தியர்களை  ஓரங்கட்டுகிறது என்பதற்கு ஓர் உதாரணம்.

ஆனால் என்ன செய்வது?  அங்கு பி.கே.ஆர். போட்டியிட்டதனால்  அவர்கள் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது!

இப்படியெல்லாம் அவர் சொன்னாரே என்கிற  கோபம் தேவையில்லை. ஒன்றைக் கவனியுங்கள்.  அவர் அப்படி சொல்லாவிட்டால் அந்த வீடமைப்புத் திட்டத்தின் நிலை என்னவாக இருக்கும்?  அவர் அப்படி பேசியதால்  தானே ஆளுங்கட்சியினர்  வரிந்து கட்டிக்கொண்டு கீழே இறங்கி  வேலை செய்தனர்!  இல்லாவிட்டால்   அங்கேயும் ஒரு ஏமாற்று வேலை  தான் நடந்திருக்கும்!

மற்ற அரசியல்வாதிகளைப் போல அவர் எதனையும் மூடி மறைக்கவில்லை.  நேரடியாக ஜ.செ.க.விற்கு  வாக்களிக்க வேண்டாம்  என்பதை அவர் தான் ஆரம்பித்து வைத்தார்.  அதன் பின்னர் தான் பிரச்சாரங்கள் சூடு பிடித்தன!  பேராசிரியரின் வார்த்தைக்கும் ஒரு மரியாதை உண்டு  என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் தான்  அனைத்து அரசியல்வாதிகளும்  களத்தில் குதித்தனர் என்பதை மறக்க வேண்டாம்.

அதனால் தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பாதீர்கள். அவர் எதைச் செய்தாலும் நமது நலனுக்காகத்தான் செய்வார் என்று நம்புங்கள்.  அரசியல் அதிகாரம் இல்லையென்றால்  நாம் எதிர்பார்ப்பது போல  அவரால் செய்ய இய்லாது. 

அவர் ஒரு போராளி என்பதை மட்டும்  மறந்து விடாதீர்கள்!

Monday, 13 May 2024

மக்கள் தொகையில் சரிவா?

 

மலேசிய இந்தியர் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட்டிருப்பதாக புள்ளியல் துறை அறிவித்திருக்கிறது.  ஏற்கனவே இது பற்றி சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. இந்தியர்களின் கணக்கெடுப்பு சரியாக  அமையவில்லை  என்பதாகப்பேசப்பட்டது. அவ்வளவு தான். மேலும் அது பற்றிப் பேசினாலும் காது கொடுப்பார் யாருமில்லை!

இந்தியர்கள் என்றால் எது வேண்டுமானாலும்  பேசலாம், செய்யலாம் என்பது தான் நாட்டு நிலைமை.

ஆனாலும் இதுபற்றியெல்லாம்  அலட்டிக்கொள்ள ஒன்றுமில்லை. உருப்படி இல்லாத ஒன்பது பிள்ளைகளைப் பெற்றுப்போடுவதை விட  உருப்படியாக ஒன்று இரண்டைப் பெற்று  மேன்மையான வாழ்க்கை வாழவதுதான்  இன்றைய நிலையில் சரியான முடிவாக இருக்கும்.

இந்தியாவில்  பிராமணர்கள்   இந்திய மக்கள் தொகையில் மூன்று விழுக்காட்டினர் தான் . ஆனால் அவர்கள் தான் இந்தியாவை ஆளுகின்றனர்! அனைத்துத்  துறைகளிலும் அவர்கள் தான் முன்னணி வகிக்கின்றனர்.  தொண்ணூற்றேழு விழுக்காடு   இந்தியர்கள்  அவர்களின்  கட்டுப்பாட்டில் தான்  உள்ளனர்!    ஆக மிகச் சிறுபான்மை எனப்படும்  பிராமணர்கள்  என்ன தாழ்ந்து போனார்கள்?  கல்வி ஒன்று மட்டுமே அவர்களின் உயரத்தை நிலைநிறுத்தியது.  நமக்கும் அதே நிலை தான்.  கல்வி மட்டும் போதும். எந்தக் காலத்திலும் கல்வியில் நாம் தான் முன்னணியில் இருக்க வேண்டும். அது போதும் நமக்கு மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடும்.  பட்டம் பதவிகள் கிடைத்துவிடும்.

இந்தோனேசிய மக்கள் தொகையில் சீனர்கள் மூன்று விழுக்காட்டினர் தான்.  ஆனால் நாட்டின் பொருளாதாரம் அவர்கள் கையில்!  பெரும் தொழில்களானாலும் சரி, சிறிய தொழில்களானாலும் சரி  அவர்கள் தான் செய்கின்றனர்.  என்ன தான் அரசாங்கம் உள்ளூர் மக்களுக்கு வாய்ப்புக்கள் கொடுத்தாலும் சீனர்களின்  வியாபார ஆதிக்கத்தை  யாரராலும்  அசைக்க முடியவில்லை என்பது தான் உண்மை.  ஆமாம், மூன்று விழுக்காடு  தான்   ஆனால் அதன்  ஆழம் அகலத்தை  அகற்றிவிட  முடியுமா?  அரசாங்கத்தின் கஜானாவை யார் நிரப்புகிறார்கள்? சீனர்கள் தான்.  ஒரு சிறிய விழுக்காடு தான்.  ஆனால் அதன் சக்தியைப் பார்த்தீர்களா? அந்த பலம் தான் நமக்குத் தேவை.

என்ன இருக்கிறதோ இல்லையோ இந்த உலகம் நம்முடைய  பொருளாதாரத்தை உற்றுக் கவனிக்கிறது.  கல்வியை உற்று நோக்குகிறது.  ஒருவன்  கல்வி கற்றால் அவனின் வெற்றி உறுதி.  பொருளாதாரத்தில் வெற்றி பெற உழைக்கத் தயங்கக் கூடாது. சீனர்கள் உழைக்கத் தயங்குவதில்லை.

இந்தியர்களில் குஜாராத்தியர் வியாபாரம் தவிர்த்து வேறு எது பற்றியும்  சிந்திப்பதில்லை.  அவர்களிடம் தான் தங்கம் கொட்டிக்கிடக்கிறது.  தமிழர்களில் முஸ்லிம்கள், செட்டியார்கள் - இவர்களுக்கு  வியாபாரம் மட்டும் தான் அவர்களின்  பிழைப்பு. மற்ற சிந்தனைகள் எதுவும் எழுவதில்லை.  நாமும் நமது சிந்தனை ஓட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதனால் மக்கள் தொகையில் சரிவு என்றால் கவலைப்பட் ஒன்றுமில்லை. நம்முடைய பொருளாதார வலிமை தான் கணக்கில் எடுக்கப்படும். சீனர்கள் கேட்காமலேயே பல விஷயங்கள் கிடைத்து விடுகின்றன. நமக்குக் கிடைப்பதில்லை.  காரணம் நாம் இன்னும் அரசாங்கத்தை நம்பிதான்  இருக்கிறோம்.  மற்றவர்களை நம்பியிருப்போரை யார் மதிப்பார்?

Sunday, 12 May 2024

ஆட்டுக்கறி விருந்து!

 

ம.இ.கா.வின் இது போன்ற அரசியலைத்தான் நாம் வெறுக்கிறோம்!

ஏற்கனவே அவர்களின் அரசியலைப்பற்றி நமக்குத் தெரியாமலில்லை. கூடவே ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்குத் 'தண்ணி'  வாங்கிக் கொடுப்பது, உணவுகளை வாங்கிக் கொடுப்பது -இப்படி  எல்லாம் செய்வதால்  யாருக்கு என்ன இலாபம்? சாப்பிடுகிறவன்  அந்த நேரத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி அடைவான்! படித்தவனாக இருந்தால் அவனுக்கு ஏதாவது பட்டம் கிடைக்கும். அவனுக்கு அது போதும்!

ஆனால் இப்படிச் செய்வதால்  இந்த சமுதாயத்திற்கு என்ன கிடைக்கப் போகிறது?  சமுதாய பிரச்சனைகள் தீர்க்கப்படப் போகிறதா? நம்மிடையே நிறைய பிரச்சனைகள் உண்டு. பிரச்சனைகளை விட்டுவிட்டு  இதுபோன்ற சில்லறைத்தனங்களால் என்னத்தை நீங்கள் சாதிக்கப் போகிறீர்கள்?

கோலகுபுபாரு வீடமைப்புத் திட்டம் என்பது ம.இ.கா. காலத்துப் பிரச்சனை. அப்போது இவர்கள் தான் பதவியில் இருந்தார்கள்.   ஒரு மைல் தூரத்திற்கு ஒரு கிளை வைத்திருந்தார்கள். அந்தத் தொகுதியில் ஐந்து  தோட்டங்கள் எல்லா தோட்டங்களிலும் கிளைகள் இருந்திருக்க வேண்டும்.  ஏன் அவர்களால் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை? அவர்கள் செய்ய மாட்டார்கள்! காரணம் இது தின்னு  கொழுத்த  கூட்டம்! அரசாங்கத்திடமிருந்து இன்னும் எவ்வளவு கறக்கலாம்  என்று நினைக்கிற கூட்டம்!

அவர்களைப்பற்றி அறிந்திருப்பதால்  தான் இன்று மக்கள் அவர்களை ஒரேடியாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள்!  அவர்களின்  தானைத்தலைவர் போகும் போதே  அனைத்தையும்  பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டார். அவர்களுக்கு இந்தியரிடையே எதிர்காலம் இல்லை. ஆனால் அவர்களுக்கு ம.இ.கா. தேவைப்படுகிறது.  கல்வி நிலையங்கள் இருக்கின்றன.  அதை வைத்தே காலத்தை ஓட்டலாம்! ஆனால் அதன் மூலமும் இந்திய மாணவர்களுக்குப் பயனில்லை!

நமது மக்கள் இன்னும் திருந்தவில்லை. ஆட்டுக்கறி விருந்து வைத்தால்  அதனைப் புறக்கணித்திருக்க வேண்டும்.  மக்களுக்கு ஒரு வேண்டுகோள். இனி இது போன்ற சில்லறத்தனங்களை யார் செய்தாலும் அவர்களைப் புறக்கணியுங்கள். அது போதும். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்.

கோலகுபுபாருவில் ஒன்று சேர்ந்திருக்கிறோம். அதனையே மீண்டும் மீண்டும் எதிரொலிப்போம்!

Saturday, 11 May 2024

இடைத் தேர்தலுக்குப் பின்!


 கோலகுபுபாரு இடைத்தேர்தல் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது!

இந்தத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணிக்கு மலாய் மக்களின் ஆதரவு கூடி இருக்கிறதாம். அதாவது பிரதமர் அன்வாருக்கான ஆதரவு கூடி வருகிறதாம்.

வாக்களிப்பதில் மலாய் மக்கள் முனைப்புக் காட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.  சீன வாக்காளர்கள் எப்போதுமே ஜ.செ.க.  ஆதராவளர்கள். இந்திய வாக்களர்கள் எங்கே  பின் தங்கி விடுவார்களோ  என்று சீனர்களின் கூட்டம் கூடுவதில் வியப்பு ஏதுமில்லை! இந்தியர்களின் வாக்கு இன்னும் ஏனோதானோ நிலையில் தான்!  அது அவர்களின் குற்றமல்ல.  காலங்காலமாக ஏமாற்றப்பட்ட ஒரு சமூகம் அப்படித்தான் இருக்கும்.

நமது அபிப்பிராயங்கள் எப்படி இருப்பினும் ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. செய்ந்நன்றி கொன்றவருக்கு உய்வில்லை!   அந்தத் தொகுதியில் உள்ள அங்குள்ள மக்களுக்கு சுமார் 245 வீடுகள் கட்டிக்கொடுக்க உறுதி அளித்திருக்கும் போது  நாம் ஏன் எதிர்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். எதிர்கட்சியால் ஒரு செங்கல்லைக் கூட தூக்கிவைக்க முடியாது! ஏன் ஆளுங்கட்சியாக இருந்த போது கூட ம.இ.கா.வால் ஓரு ஆணியைக் கூட புடுங்க முடியவில்லையே!

கோலகுபுபாரு மக்கள் நல்ல தெளிவான முடிவை எடுத்திருக்கிறார்கள். அதுவும் இந்தியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.  அவர்களின் ஆதரவு  தக்க சமயத்தில் ஒற்றுமை அரசாங்கத்திற்குக் கைகொடுத்திருக்கிறது. அவரகளது கோரிக்கைகள் அனைத்தும் தொகுதியைச் சார்ந்தவை.

இப்போது நாம் ஒரு சவால் விடுகிறோம்.  தேர்தல் பிரச்சாரத்தின்  போது  அத்தனை தலைகளும் இந்தியர்களின் காலில் விழுந்தீர்களே  அதனை அப்படியே போய்  பிரதமர் காலில் விழுந்து இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வழிவகைக் காணுங்களேன்!  ஏன்? இன்னும் அடுத்த  தேர்தல்வரை காத்திருக்கப் போகிறீர்களோ?  நீங்கள் ஒன்றும் செய்யவில்லையானால்  இப்போதே நான் உங்களுக்காக அனுதாபப்படுகிறேன்.  காரணம் இந்திய இளைஞர்கள் இனி உங்களைச் சும்மா விடப்போவதில்லை!

Friday, 10 May 2024

தேர்தல் அன்று!

 


கோலகுபுபாரு  இடைத்தேர்தல் அன்று தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும்  காலை மணி 8.00 க்கு  தயாராகிவிட்டன.  அனைத்தும்  மாலை மணி 6.00 வரை திறந்திருக்கும்.

சுமார் 30,269 வாக்களார்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் இரவு 10.00 மணி அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க காவல்துறை  குவிக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு நான்கு முனை போட்டி என்றாலும் இரண்டு கட்சிகளே பிரதானமாகத் தோன்றுகின்றன. பிரதமர் தலைமையில் இயங்கும் பக்காத்தான் ஹராப்பானும் முன்னாள் பிரதமர் முகமது யாஸின் தலைமையிலான  பெரிக்காத்தான் நேஷனலும் முக்கியமானவை.  இதில் ஒரு விசேஷம் என்னவென்றால்  போட்டியிடும் நான்கு பேருமே தொகுதியில் வாக்களிக்க  தகுதி பெறவில்லை!   அனைவருமே வேறு தொகுதிகளைச்  சேர்ந்தவர்கள்!

பல்வேறு காரணங்களுக்காக இந்திய வாக்களார்கள் வாக்களிக்கமாட்டார்கள், சீனர்கள்  வாக்களிக்கமாட்டார்கள் என்று சொன்னாலும்  பின்னர் அவர்கள் அனைவருமே சமரசமாகி விட்டார்கள். மலாய், சீன  வாக்காளர்கள்  காலையிலேயே வாக்களிக்கத் தொடங்கி விட்டாலும் இந்திய வாக்களர்கள் தாமதமாகத்தான்  வாக்களித்திருக்கின்றனர்.  அன்று வேலை நாள்  என்பதால் அந்தத் தாமதம்.

இந்திய வாக்களர்களைப்பற்றி பலவாறு குறைகள் சொன்னாலும் இந்த இடைத்தேர்தலில்  ஆளுங்கட்சிக்குச் சரியானதொரு பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர். தொகுதியில் பல்வேறு பணிகள் உறுதியளித்தவாறு நடைபெறவில்லை.  நடைபெறும் என்பதாக உறுதிமொழி  கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த முறை, இந்தியர்கள்,  வாக்குச்சாவடிக்கு சும்மா ஓட்டுப் போட போகவில்லை. சில உறுதிமொழிகளுடன் தான்  ஓட்டு போடுகின்றனர். இதனை நாம் ஓர் ஆரம்பமாக எடுத்துக்கொள்ளலாம். வருங்காலங்களில் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பலாம்.

Thursday, 9 May 2024

இடைத் தேர்தலுக்கு முன்!

 

iகோலகுபுபாரு இடைத்தேர்தலுக்கு முன் நடந்த சரித்திரபூர்வமான  சம்பவங்கள்!

எல்லாத் தலைவர்களும் ஒன்று கூடினார்கள்.  ஒன்று சேர்ந்து கும்மியடித்தார்கள்!

"தேர்தலை புறக்கணியுங்கள்!"  என்றது ஒரு கூட்டம்.  குறிப்பாக பெரிகாத்தான்  நேஷனல். அப்படிப் புறக்கணித்திருந்தால் புதிய வருகையான முன்னாள் ம.இ.கா.வினருக்கு  நல்ல பெயர் கிடைத்திருக்கும்!

"தேர்தலை புறக்கணிக்க வேண்டாம். வாக்களியுங்கள்.  ஆனால் பக்காத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்காதீர்கள்!"  பின்னர் தொனியை மாற்றிக் கொண்டு இப்படி ஒரு பிரச்சாரம்!

"பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவா?  கெடா மாநிலத்தைப் பார்த்தீர்களா?  அத்தனை உரிமைகளும்  பறிபோகும்!"  இப்படி ஒரு தீர்க்கதரிசனம்!

"எதிர்கட்சிக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள்! உங்களை அம்போ என்று விட்டுவிடுவார்கள்! எங்களை நம்புங்கள். எங்களால் மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும்!"   என்று எல்லா தலைகளும் புருடா விட்டன!


இப்படி எல்லாம் பேசினால் யாருக்குத் தான் வாக்களிப்பது?  குறிப்பிட்ட அந்தத் தொகுதியில் என்ன தான் பிரச்சனை என்று யாரும் கேட்கவில்லை. இது நாள் வரை என்ன  தான் குறை என்று அறிந்து தெரிந்து  அதனைச் சரி செய்ய யாருக்கும் துணிவில்லை.  வெட்கமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? ஏற்கனவே சொல்லப்பட்ட, உறுதி கூறப்பட்டவைகள் எதனையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரால் செய்ய முடியவில்லை.  அந்தக் கட்சியினர்  வியாதியால் துன்பப்பட்ட ஒருவரை அங்கே நிறுத்தியிருந்தனர். அதனால் எந்த வேலையும் ஓடவில்லை என்பது தான் உண்மை.

எப்படி இருந்தாலும்  அந்தத்  தொகுதி மக்கள் தான் அவர்கள் பிரச்சனையை கையில் எடுத்தனர்.  சும்மா இருந்தால் சோத்துக்கு ஆகாது என்று தெரிந்து கொண்டு கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் தான் அத்தனை தலைகளும் பேச ஆரம்பித்தன!  மீண்டும் மீண்டும் உறுதி மொழிகள்  கொடுக்கப்பட்டன. பேசப்பட்டன. விவாதிக்கப்பட்டன.

அதன் பின்னர் தான் மக்கள் பஞாயத்தை ஏற்றுக் கொண்டனர். இது தான் தேர்தலுக்கு முன் உள்ள நிலைமை.


Wednesday, 8 May 2024

இடைத் தேர்தலுக்கு ரெடியா?

 

நாடு எதிர்பார்க்கும் மிகப்பிரமாண்டமான இடைத்தேர்தல் என்றால் அது கோலகுபுபாரு இடைத்தேர்தல் தான்!

எப்போதும் அலட்சியமாக பார்க்கும் நமது அரசியல்வாதிகள்  இப்போது நமக்கும் ஒரு காலம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.   யானைக்கு  ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பார்கள்!  இப்போது  அது வந்திருக்கிறது!  ஒவ்வொரு அரசியல்வாதியும் குனிந்து குனிந்து வாக்கு அளிக்குமாறு  கூனிக்குறுகுகிறான்!

இதில் நமது ம.இ.கா.வினரை நினைக்கும் போது தான்  நமக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.  பேசுபவர்கள் அனைவருமே "அறுபது ஆண்டுகளாக செய்யாதவர்கள் இப்போது செய்வார்களா?"  என்கிற கேள்வி வரும் போதெல்லாம் அது அவர்களைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்பது தெரியாமலா போகும்!  என்ன செய்ய? அது தான் அரசியல் என்று மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்!  நாம் ஏன் ம.இ.கா.வின் மேல் இத்தனை அக்கறை காட்டுகிறோம்? காரணம் நம்மில் பெரும்பாலோர் முன்னாள் ம.இ.கா.வினர் தான்.  மற்றவர்கள் எப்படியோ நான் கட்சியின் கிளையோன்றில் செயலாளராக இருந்தவன்! எப்படியோ இருக்க வேண்டிய கட்சி......இப்படி ஆனதே என்பதில்  வருத்தம் தான்! 

அரசியல்வாதிகளுக்கு நாம் நினைவுறுத்துவது ஒன்று தான்.  அரசியலை வைத்துப் பணம்  சம்பாதிக்க நினைத்தால் அது கடைசியில்  சாபத்தைத்  தான் கொண்டுவரும்.  இது தடித்த 'தோலர்' களுக்குப் பொருந்தாது!  இப்போது பாருங்கள் வரிசையாக வழக்குகள். டாக்டர் மகாதிர், டைம் ஜைனுடின்,  முகைதீன்யாஸின் இப்படிப் பல பிரபலங்கள் இன்று  அவமானப்பட்டு நிற்கிறார்கள்! 

இன்றைய நிலையில் எந்த ஒரு கட்சியும் வீரவசனம் பேசும் நிலையில் இல்லை. இந்தியர்களைப் பொறுத்தவரை அனைத்துக் கட்சிகளும் ஏமாற்று வேலையைத்தான் செய்கிறார்கள்! நம்மை ஏமாற்றுவது எளிது என்று நினைக்கிறார்கள்.  நம்முடைய உரிமைகளைப் பெற்றுத்தர யாரும் தயாராக இல்லை!

இந்த இடைத்தேர்தலில் அந்தத் தொகுதி மக்களே சிந்தித்து வாக்களிக்கட்டும்.  யார் சரியாக நடந்து கொண்டார்கள் என்பது அங்குள்ள மக்களுக்குத் தான் தெரியும்.  ஒரு வீடமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற ஏன் இத்தனை ஆண்டுகள் பிடித்தன? என்கிற கேள்விக்கு  ஜ.செ.க.   தான் பதில் சொல்ல வேண்டும்.

மக்களே!  வாக்கு யாருக்கு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!

Tuesday, 7 May 2024

ஹி! ஹி! பொறாமையா!

 

பிரதமர் அன்வார் சொன்ன ஒரு கருத்து வேடிக்கை என்று நினைத்தாலும் அது விஷமத்தனமான  கருத்து என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

மலாய்க்காரர்களைப் பார்த்து இந்தியர்கள் பொறாமைப் படுகிறார்கள்  என்று அவர் சொன்னது  வேறு எப்படி எடுத்துக் கொள்வது?  உண்மையைச் சொன்னால் நமது மேல் தான் மற்றவர்களின் கொள்ளிக்கண் பட்டு விட்டதோ  என்று நினைக்க  வேண்டியுள்ளது!

ஒரு காலகட்டத்தில் முன்னாள் பிரதமர்  டாக்டர் மகாதிர் சொன்னார்: மலேசிய மருத்துவமனைகளில் டாக்டர்கள் அனைவரும் இந்தியர்களாகவே இருக்கிறார்கள் என்று.  அதன் பின்னர் தான்  இந்திய மாணவர்களுக்கு மருத்துவம் பயில  மலேசியப் பல்கலைக்கழகங்களில்  இடம் மறுக்கப்பட்டது.  அது இன்னும் தொடர்கதையாகவே போய்க் கொண்டிருக்கிறது. இப்போது அவர்கள் மருத்துவம் பயில பெற்றோர்கள் தங்களது சொத்துகளை விற்று வெளிநாடுகளில்  படிக்க வைக்க  வேண்டியுள்ளது.  இப்போது சொல்லுங்கள்.  யார், யார் மீது பொறாமைப்  பட்டது?

இன்னொரு சம்பவமும் நமது ஞாபத்திற்கு வருகிறது.  மைக்கா ஹொல்டிங்ஸ் ஆரம்பித்த காலகட்டம்.  அதே பிரதமர் தான். அப்போது இந்திய மக்களிடமிருந்து பத்து கோடி வெள்ளி வசூலிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில்  அது மிகப்பெரிய தொகை.  டாக்டர் மகாதிரே அசந்து போனார் என்பதாக  துன் சாமிவேலுவே அதனை வெளியிட்டார்.  இந்தியர்களிடமிருந்து இந்த அளவு  பணம் கிடைக்கும் என்று தான்  எதிர்பார்க்கவில்லை என்று டாக்டர் மகாதிர் சொன்னதாக செய்திகள் வெளியாயின.

இது பாராட்டாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அது பொறாமையின் வெளிப்பாடு என்பது பின்னர் தான்  நமக்குத் தெரியவந்தது.  மைக்கா ஹொல்டிங்ஸ்  என்ன நிலைக்குத் தள்ளப்பட்டது  என்று பிற்கால வரலாறு நமக்குத் தெரியும்.  இந்தியர்கள் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்  என்கிற எண்ணமே எழாதபடி  அது நமக்கு மறைமுகப் பாடமாக அமைந்துவிட்டது!

பொறாமை என்கிற எண்ணம் யார் மீதும் நமக்கு எழுந்ததில்லை.  ஆனால்  நம்மீது மற்றவர்களுக்குப் பொறாமை எப்போதும் உண்டு!  பல வழிகளில்! அதனால் தான் எங்கும் எதிலும் தடைகள்.  ஒவ்வொன்றையும் போராடித்தான் பெற வேண்டியுள்ளது.  நமது உரிமைகளுக்குக் கூட நாம் போராட வேண்டியுள்ளது. என்ன காரணம்?  ஆட்சியில் உள்ளவர்கள் நம்மீது உள்ள பொறாமை தான்!

Monday, 6 May 2024

மக்களின் போராட்டத்திற்கு வெற்றி!

 

கோலகுபுபாரு  தோட்ட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததில்  நமக்கும் மகிழ்ச்சியே.

எல்லாகாலங்களிலும் இந்தியர்களை மடையர்களாக  நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடம்.  இந்தியர்கள் என்றாலே எப்படியாவது  மடக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு  ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது.

அங்கு ஏற்பட்ட பிணக்கு என்பது  பத்து, பதினைந்து வருடங்களுக்கு மேல்  கிடப்பில் போடப்பட்ட வீடமைப்புத் திட்டம் தான்.  சமீபகாலம் வரை அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த ஒரு சீனப்பெண்மணி. ஜ.செ.க. ஏழைகளின் நலனுக்கு பாடுபடும்  கட்சி என்று சொன்னாலும்  அவர்கள் ஏன் மௌனம் சாதித்தார்கள்? ஒரே காரணம் அங்கு ஏற்பட்டது இந்தியர்களின் பிரச்சனை.  அதனால் தான் அவர்கள் அதனைச் செயல்படுத்த  எந்த முயற்சியும்  எடுக்கவில்லை.

ஒர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜ.செ.க. சீனர்கள் கட்சி என்பதில் சந்தேகமில்லை.  அவர்கள் சீனர்களின் பிரச்சனைக்குத் தான்  முக்கியத்துவம் கொடுப்பார்கள். நமது அங்கத்துவம் என்பது சும்மா 'பல்லின கட்சி'  என்று  வெளியே காட்டிக்கொள்ளத்தான்!  மற்றபடி  நமக்கு எந்த மரியாதையும் இல்லை! 

இப்போதும் கூட பார்த்தால் சீனர்களின் பிரச்சனைக்கு வாய் திறப்பார்களே தவிர இந்தியர்களின் பிரச்சனைக்கு 'கப்சிப்' அவ்வளவு தான்!

எப்படியோ இந்த வீடமைப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்,  செயல்படுத்தியவர், வாதாடியவர், போராடியவர்,  என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் அதற்குக் காரணமானவர் Parti Sosialis Malaysia கட்சியின் திரு.அருட்செல்வன் அவர்கள் தான் என்று ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

                                                        அருட்செல்வன் (PSM)
திரு அருட்செல்வன் நல்ல சேவையாளர் என்பது நமக்குத் தெரியும்.  ஆனால் அவரை நம்மால் ஆதரிக்க முடியவில்லை. எல்லாகாலங்களிலும் ஏமாற்றுபவர்களையே ஆதரித்துப் பழகிவிட்டோம்! அதனை மாற்றிக்கொள்ள  முடியவில்லை! நாம் உயிர்வாழ டத்தோ, டான்ஸ்ரீ, டத்தோஸ்ரீ - இவைகளெல்லாம் தேவை!  மீண்டும் மீண்டும் ஏமாறத்  தயாராக இருக்கிறோமே தவிர, திருந்த தயாராக இல்லை! அது தான் நமது நிலைமை!

எப்படியோ இந்த வெற்றியை அங்குள்ள மக்களுடன் சேர்ந்து  நாமும் கொண்டாடுகிறோம். இனி நமது  போராட்டங்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக  இருக்கட்டும்.   ஒன்று  சேர்ந்தால் எதனையும் சாதிக்கலாம் என்பது இந்த நிகழ்வு நமக்குப் புலப்படுத்துகிறது.

வாழ நினைத்தால் வாழலாம்!

Sunday, 5 May 2024

ஏன் வாய் திறக்கவில்லை?

 

பிரதமர் அன்வார்,  இந்திய சமூகத்திற்கு நான் தொடர்ந்து செய்ய வேண்டியதை  செய்து கொண்டு தான்  இருக்கிறேன்  என்று சொல்லி வருகிறார்.

ஆனாலும் அப்படி என்ன செய்து விட்டார் என்கிற கேளவி தான் தொடர்ச்சியாக  எழுப்பப்படுகிறது.  அதில் உண்மை உண்டு என்று  தான் நமக்கும் படுகிறது.

பிரதமர் அடிக்கடி சொல்லுவது என்ன வென்றால்  வணிகம் செய்ய பண உதவி செய்கிறோம்  என்கிறார்.  நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.  மித்ரா மூலம் உதவிகள் கிடைக்கின்றன. அது பெரும்பாலும் ஏழைகளுக்குப் போய் சேருவதில்லை. இருந்தாலும் கிடைக்கின்றது. அதே போல சிறுகடன் உதவிகள் பெற மேலும்  இரு  அமைப்புக்களின் மூலம் கிடைக்கின்றன.  பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பயன் படுத்திக் கொள்கிறார்கள். அந்த இரு அமைப்புகளும் மலேசியர்களுக்குப் பொதுவானவை.   இருந்தாலும் நமக்கும் அதில் வாய்ப்புக் கொடுப்பதற்காக  நன்றி கூறுகிறோம்.

பிரதமர் மேற்சொன்னவைகளைத் தான் அடிக்கடி குறிப்பிட்டுக்  கூறி வருகிறார்.  இருக்கட்டும் அதனை நாம் மறுக்கவில்லை.  ஆனால் மெட் ரிகுலேஷன் கல்வி இட ஒதுக்கீடு பற்றி மட்டும் பேச மறுக்கிறார்.  இப்போது எத்தனை இடங்கள் கிடைக்கின்றன என்பது பற்றியும் பேசுவதில்லை.  எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என்பது பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.

முன்பு ஒரு காலத்தில பிரதமராக இருந்த நஜீப் ரசாக் 2500 இடங்கள் ஒதுக்கி இருந்தார். அதனையே இலக்காக வைத்து இப்போது நாமும் 2500 இடங்களை ஒதுக்கும்படி  கேட்கிறோம்.  பிரதமரோ அது பற்றி பேசுவதில்லை!  எவ்வளவு தான் கொடுக்கலாம் என்கிற முடிவை அவரால் எடுக்க முடியவில்லை.

இந்திய சமுகத்தைப் பார்த்து, தேர்தலுக்கு முன்பு,  மிகவும் ஏழ்மையான சமுகம் என்று மிகவும் அனுதாபப்பட்டார்.  அவர்கள்  ஏழ்மை நிலையிலிருந்து விடுபட  கல்வி எத்துணை முக்கியம் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.  ஆனால் அந்தக் கல்வியைப் பற்றி பேசாமல் கடந்து போய் விடுகிறார்!  இந்திய சமுகத்திற்குக்  கல்வி  தேவை இல்லை என்று நினைக்கிறார் என்று தான் நமக்குத் தோன்றுகிறது.

அதிகாரம் வலிமையானது என்பார்கள்.  அந்த அதிகாரத்தை நாம் அளவுக்கு மீறியே கொடுத்து விட்டோமோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

பிரதமர் இந்திய மாணவர் நலன் கருதி  குறிப்பாக மெட்ரிகுலேஷன்  பற்றியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று நினைவுறுத்துகிறோம்.

Saturday, 4 May 2024

இலஞ்சம் தவிர்!

இப்போது நம் கண் முன்னே இருப்பது கோலகுபுபாரு  இடைத்தேர்தல் மட்டும் தான்!

அத்தொகுதியில் உள்ள மக்கள் தான் அவர்களுக்கு எது நல்லது  எது கெட்டது என்கிற முடிவை எடுக்க வேண்டும்.  இத்தனை ஆண்டுகள் அவர்களைப்  பிரதிநிதித்தவர்கள்  எத்தகைய சேவைகளைக் கொடுத்தார்கள்  என்பது அவர்களுக்குத்தான்  தெரியும்.

வெளியே இருந்து கொண்டு பல நூறு அவதூறுகளை அள்ளி வீசலாம். பொதுவாக எடுத்துக் கொண்டால் சிலாங்கூர்  அரசாங்கம்  ஏழைகளுக்குப் பல  நல்ல செயல் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது  என்பதை  ஏற்றுக் கொள்ளலாம். அதில் இந்தியர்களும் பயன் பெறுகின்றனர்  என்பதை மறுக்க முடியாது.

ஆனால் நாம் பேசுவது அந்தத் தொகுதி அளவில் என்ன நடந்திருக்கிறது  என்பது தான்.  நிச்சயமாக அதே தொகுதியில்  மலாய்க்காரர்களும் சீனர்களும் கூடவே இந்தியர்களும்  காலங்காலமாக வாழ்ந்து கொண்டு தான் வருகின்றனர்.

நமக்குத் தெரிந்தவரை  மலாய்க்காரர்களை ஏமாற்ற முடியாது.  அது தானாகவே வந்து சேரும்.  சேராவிட்டால் அதன் பலனை அரசியல்வாதிகள்  அனுபவிக்க நேரும்!   அந்த அளவுக்கு அவர்களிடம் பயம் உண்டு .  சீனர்களுக்கு அனைத்தும் 'உள்ளுக்குள்ளேயே'  பேரம் முடிந்துவிடும்.  அவர்களை ஏமாற்றுவது கடினம்.

இதில் இந்தியர்கள் தான் வாயில்லா பூச்சிகள்! ஏமாற்றுவது எளிது. நமது தேவைகள் புறக்கணிக்கப்படுவது  இயல்பு.  நமது தேவைகள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.  உணவு பொட்டலங்களைக் கொடுத்து சரிபண்ணுவது நமக்கு மட்டும் தான் நடக்கும்!    இது தான் நமக்குக் கிடைக்கும்  இலஞ்சம்!  இதனைக் கொடுத்தே இந்திய சமுதாயத்தை சரிசெய்துவிடலாம் என்கிற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு உண்டு!

நமது கோரிக்கை என்ன என்பதற்குத் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  அங்கு வீடமைப்புத் திட்டம் நிறைவேற்றப்படாத ஒரு திட்டம் என்று கூறப்படுகிறது.  அதனை நிறைவேற்றக் கூறி நாம் அழுத்தம் கொடுக்கலாம்.  இந்த நேரத்தில் அது நிறைவேற வாய்ப்புகள் உண்டு. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் போராட வேண்டும்.

இத்தனை நாள்கள் நடந்த பேச்சுவார்த்தைகள், பிரச்சாரங்கள், பல்வேறு கருத்துகளை அங்குள்ள தொகுதி தலைவர்கள்  கேட்டிருப்பார்கள்.  அதன் மூலம் அவர்களுக்கு நல்ல தெளிவு கிடைத்திருக்கும்.  யாரை நம்பலாம், யார் போலிகள்  போன்ற விபரங்கள் இப்போது  தெரிந்திருக்கும்.

நீங்களே யாருக்கு உங்கள் வாக்கு என்பதை முடிவு செய்யுங்கள்.   குடிமுழுகிப் போக ஒன்றுமில்லை. இலஞ்சம் தவிர் என்பதை மறந்து விடாதீர்கள்!

 

Friday, 3 May 2024

வெறும் வார்த்தைகள் போதா!

 

அசியல்வாதிகளின் ஏமாற்று வேலைகளுக்கு அளவே இல்லையா? அதைத்தான் கேட்கிறோம் இந்த இடைத்தேர்தலில்!  அதனை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் உருட்டல்களை நம்பித்தான் வாக்குகள் அளிக்கிறோம். பதவிக்கு வந்தவுடன்  அவன் மேலே போகிறான்  நாம் கீழே போய்விடுகிறோம்!

அது பற்றி நமக்குக் கவலையில்லை.  அவனுக்கு இருக்கிற அதே உரிமை நமக்கும் இருக்கிறது.  சில தேசிய பிரச்சனைகளைப் பற்றி நாம் பேசப்போவதில்லை.  ஆனால் அந்தத் தொகுதி மக்கள்  ஏமற்றப்பட்டிருக்கிறார்களே  அது பற்றி நாம் பேசித்தான் ஆக வேண்டும். 

அந்தத் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜ.செ.கட்சியைச் சேர்ந்தவர்.  மூன்று தவணைகள்  சட்டமன்ற உறுப்பினராக இருந்தும்  அவர் அங்கு நிலவிய வீடமைப்புத் திட்டத்திற்கு  ஆதரவு தரவுமில்லை; முடிவுக்குக் கொண்டு வரவுமில்லை.  அதனால் தான் இது நாள் வரை இத்தனை இழுத்தடிப்புகள்.  இழுத்தடிப்பு என்றால் ஜ.செ.க. செயல்படவில்லை என்பது தான் பொருள். 

என்ன காரணமாக இருக்கும்?  வெளிப்படையாக நமக்குத் தெரியவில்லை. மேலோட்டமாகப் பார்க்கும் போது  நிலம் சீனர்களுடையது வீடுகள் இந்தியர்களுக்கானது - என்று தான் இருக்க வேண்டும். அது தான் மலேசிய சூழல்.  சீனர்கள் என்னும் போது ஜ.செ.கட்சி செயல்படாது என்பது நமக்குத் தெரியும்.  இந்தியர்களுக்கு என்றால் ஜ.செ.க. அலட்சியம் காட்டத்தான் செய்யும்!  அது தான் அவர்களது வாடிக்கை!

அதனால் தான் அங்குள்ள இந்தியர்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். வீடமைப்புப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு இல்லையென்றால்  "எங்கள் வாக்கு எதிர்கட்சியினருக்கே!"  என்கிற கோஷம் சரியானது தான்!

அரசாங்கம் நமது உரிமைகளுக்கு மரியாதை தரவேண்டும். கல்வி, வர்த்தகம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் தான். அது தேசியப் பிரச்சனை.  நமக்கு இந்தத் தொகுதியே இப்போதைய பிரச்சனை. கோலகுபுபாரு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கிடைக்கும் என்கிற உறுதிமொழி இருந்தால் பக்காத்தானுக்குத் தாராளமாக வாக்களிக்கலாம்.

Thursday, 2 May 2024

அவதூறுகளைப் பரப்ப வேண்டாம்!

 

பொதுவாக இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு  அமைச்சர் பதவி  கிடைத்திருப்பது,  அது இப்போது தான் நடந்திருக்கிறது. அதுவும் பிரதமர் அன்வார் காலத்தில் நடந்திருப்பது  மேலும் விசேஷம் என்று தான் சொல்ல வேண்டும்.

பிரதமர் அன்வார் பற்றி பலவேறு கருத்துகள் நமக்கு இருந்தாலும்  அவருடைய அமைச்சரவையில்  ஒரு  தமிழ் பெண்ணுக்கு இடம் கொடுத்திருக்கிறாரே அதனை நாம் பாராட்டியே ஆக வேண்டும். 

ஆனால் பிரச்சனை என்னவென்றால் பிரதமரின் இந்த முடிவை அவருடைய கட்சியின், அல்லது ஒற்றுமை அரசாங்கத்தின் இந்தியத் தலைவர்களே  அவருக்கு ஆதரவு கொடுக்க மறுக்கிறார்கள் என்பது தான்! அதனை நாம் சமீபத்தில் கண்டோம்.  ஆமாம், மித்ரா அமைப்பை பிரதமர் துறைக்கு மாற்ற வேண்டும் என்பதில் ஏன் அத்தனை வன்மம்? அத்தனை பேரும் மாற்றியே ஆக வேண்டும் என்று பொர்க்கொடி தூக்கினார்கள்,  எதனால்?  "எங்களுக்குத் துணை அமைச்சர் மேல் நம்பிக்கையில்லை!"  என்கிற  ஆவேசம்  தானே! இவர் ஒரு பெண், இவரால் என்ன செய்ய முடியும்? என்கிற வயிற்றெரிசல்  ஒருபுறம்!  ஒரு தமிழ் பெண் என்றால்  உங்களுக்கு எவ்வளவு இளக்காரம் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.  சீன, மலாய் பெண்கள் என்றால் காலில் விழத்தயார்! ஒன்றை நினைவில் வையுங்கள்.  உங்களைவிட அவர் எந்த வகையிலும் தகுதியில் முறைந்தவர் அல்ல.

ஒற்றுமைத் துறையிலிருந்து  பிரதமர் துறைக்கு மித்ராவை மாற்றியது  பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது.  அதனை மாற்றுவதற்கு நீங்கள் காட்டிய முனைப்பு 'ஹின்ராப்' முனைப்பு என்று சொல்லலாமா?    அதனையே இன்று இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு  அந்த முனைப்பைக் காட்டியிருந்தால் இன்று பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்குமே!  ஒரு பெண் என்பதால்  அவ்வளவு தீவிரம் காட்டினீர்கள்!  ஏன் இப்போது நம் கண்முன்னே உள்ள பிரச்சனைகளுக்கும் அதே தீவிரத்தைக் காட்டுங்களேன்!  சும்மா வெத்து வேட்டுகள் என்று தான் உங்களைப்பற்றி நான் சொல்லுவேன்!

இப்போதும்  அவரைப்பற்றி புரளி கிளப்புகிறீர்கள் என்பது நமக்குத் தெரிகிறது.  உங்கள் வேலையை நீங்கள் பார்த்தாலே போதுமானது. யாருக்கும் புண்ணியமில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பது நமக்கும் விளங்குகிறது.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.  நீங்கள் தேர்தலுக்குப் போகும் போது உங்கள் சேவை தான் முன் நிறுத்தப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.  ஒரு பெண் அமைச்சரை உங்களுக்கு மதிக்கத் தெரியவில்லை என்றால்  வேறு யாரை மதிக்கப் போகிறீர்கள்?