இதனை நாம் எப்படித்தான் புரிந்து கொள்வது? தண்டனைக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இப்படியொரு கொடூர தண்டனையா என்று நம்மால் கேட்கத்தான் முடியும். ஓர் ஆசிரியர், பிள்ளைகளுக்கு எது சரியான தண்டனை என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
இன்றைய கடுமையான வெயில் காலத்தில் சாதாரணமாக யாராலும் வெளியே போக முடிவதில்லை. பலர் குளிரூட்டியைத் தேடி ஓடுகின்றனர். சிலர் குளிர்பானங்களைச் சலிக்காமல் குடித்துக் கொண்டிருக்கின்றனர். என்ன தான் செய்வது?
ஏற்கனவே இந்த வெப்பத்தின் அளவை தாங்க முடியாத நிலையில் இரண்டு மாணவர்கள் இறந்து போனார்கள் என்கிற செய்தியையும் நாம் படித்திருக்கிறோம். குறிப்பிட்ட இந்த ஆசிரியர் செய்திகளைப் படிப்பதில்லை என்பது நமக்குப் புரிகிறது. அன்றாடச் செய்தி என்பது ஓர் ஆசிரியருக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் கல்வி அமைச்சு கூட எந்தவித புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்கிற அறிவிப்பையும் செய்திருக்கிறதே. தண்டனை என்பது அதில் அடங்கவில்லையோ!
ஓர் ஐந்தாம் வகுப்பு, 11 வயது மாணவனை, இரண்டு மணி நேரம் வெய்யிலில் நிற்குமாறு தண்டனைக் கொடுப்பது எத்துணைக் கொடுமை என்பதை அவர் எப்படி அறியாமல் போனார்? சரி அவர்தான் அறியவில்லை. பள்ளித் தலைமையாசிரியருக்குத் தெரியாமலா போயிருக்கும்? நடுத்திடலில் ஒரு மாணவனை நிற்க வைத்திருப்பதை யாருமே அறிந்திருக்க வில்லையா? அது எப்படி சாத்தியம்? அவர் குளிரூட்டியில் மட்டும் தான் இருப்பாரோ?
இப்போது அந்த மாணவன் OKU என்று முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறான். அவனுக்கு அது வாழ்நாள் தண்டனை. அவனால் இனி சராசரி மனிதனாக வாழ வழியில்லை. நிரந்தரமாக்கப்பட்ட ஊனம். பையனுடைய எதிர்காலம்? பெற்றோர்களின் பரிதாபம்?
கல்வி அமைச்சின் நடவடிக்கை என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment