எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் அனைவருக்கும் நமது வாழ்த்துகள். வெற்றி பெற்ற பல மாணவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்கிற தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். எஸ்.டி.பி.எம். எடுப்பதற்குத் தயார் நிலையில் இருக்கும் மாணவர்கள் அதனைத் தொடர்வதில் தயக்கம் வேண்டாம். தொடருங்கள். எஸ்.டி.பி.எம். வேண்டாம் என்று நினைப்பவர்கள். கல்வியைத் தொடர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இன்று கல்வியாளர்கள் பலர் வழிகாட்டுகின்றனர். நிறைய வாய்ப்புகளை அறிவிக்கின்றனர். அவர்கள் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய கைப்பேசிகளைப் பயன்படுத்தியே பல தகவல்களைப் பெற்றுவிடலாம். கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். ஒரு முயற்சியுமே செய்யாமல் மற்றவரைப் பழி கூறாதீர்கள்.
நீங்கள் எஸ்.பி.எம். தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் அவர்களும் தங்கள் கல்வியைத் தொடர வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. கொஞ்சம் உள்ளே போய் பலவேறு வாய்ப்புகளைப் பற்றி அறிய முயற்சி செய்யுங்கள். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு கதவை மூடினால் இறைவன் ஒன்பது கதவுகளைத் திறந்து வைத்திருப்பார் என்பார்கள். நம்முடைய குறைபாடுகள் எல்லாம் மாணவர்கள் எதனையும் ஆழமாகப் போய் பார்ப்பதில்லை. போனால் தானே தெரியும் பொன்னான வாய்ப்புகள் பல உண்டு என்பது.
ஒன்றை மனதில் வையுங்கள். உங்கள் கல்வித் திறன் எத்தகையாக இருந்தாலும் அதனை மேம்படுத்த பல வழிகள் உண்டு. இப்போது வழிகாட்டுதல்களும் நிறைய உண்டு. தேர்ந்தெடுப்பதற்குப் பல துறைகளில் குவிந்து கிடக்கின்றன. இங்கெல்லாம் நமக்கு எங்கே கொடுக்கப் போகிறார்கள் என்று நீங்களே ஒரு முடிவுக்கு வரவேண்டாம். கல்வி பொதுவானது; அனைவருக்குமானது. அதனைப் புரிந்து கொள்ளுங்கள். நமது தவற்றினை மற்றவர் மீது போடாதீர்கள்!
இப்போதைய உலகம் போட்டி நிறைந்தது. தகுதி இல்லாத கல்வியை வைத்துக் கொண்டு யாரோடும் நம்மால் போட்டியிட முடியாது. என்ன வாய்ப்புகள் உள்ளனவோ அதனைப் பயன்படுத்திக் கொண்டு உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
கடைசியாக அரசாங்க கல்வி நிலையங்களையே பயன்படுத்துங்கள். தனியார் நிலையங்கள் பணத்தை நோக்கமாகக் கொண்டவை. பி.40 மாணவர்களுக்கு வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. அவைகளைப் பயன்படுத்திக் கொள்வது உங்களின் கடமை.
வாழ்த்துகள்!
No comments:
Post a Comment