Sunday 11 July 2021

சிங்கப்பூர் உணவகங்கள் வரவேற்கின்றன!

 

நமக்கு இன்னும் கிடைக்காத  நல்ல செய்தியை நமது அண்டை நாடான சிங்கப்பூர் உணவகங்களுக்குக்  கிடைத்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சி தான் இதனை எழுதவதற்குக் காரணம்.

இன்றைய நிலையில் நமது உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்குப்  பொட்டலைங்களைக் கட்டி அனுப்புவதோடு சரி. இப்போது பலர் வீட்டிற்கே உணவுகளை அனுப்ப சொல்லுவதால் இப்போது அந்த வியாபாரம் தான் ஓரளவு வெற்றிகரமாக நடக்கிறது. நூறு விழுக்காடு வியாபாரத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் ஏதோ ஐம்பது விழுக்காடாவது நடக்கிறதே என்கிறதே என்பதில் கொஞ்சம் திருப்தி.

ஆனால் எது எப்படி இருந்தாலும் வாடிக்கையாளர்கள் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடும் போது தான் உணவகங்கள் காசு பார்க்க முடியும். அதைத் தான் வாடிக்கையாளர்களும் விரும்புகின்றனர், உணவகங்களும் விரும்புகின்றன. 

ஆனால் நமது நாட்டில் கோவிட்-19  எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கும் இந்த வேளையில் உணவகங்கள் எப்போது திறக்கப்படும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகவே இருந்து கொண்டிருக்கிறது! தொற்றின் தாக்கம் குறையுமா இன்னும் அதிகரிக்குமா என்று அனுமானிக்க முடியவில்லை. இன்றைய சூழலில் இன்னும் கூடும் என்று தான் தோன்றுகிறது.

சிங்கப்பூரில் ஓரளவு கோவிட்-19 கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறது.  இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை என்றாலும் தாக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது.

இதன்  பின்னணியில் பல காரணங்கள் உண்டு. கடுமையான கட்டுப்பாடுகள் என்பது தான் முதல் காரணம். இதற்கும் சான்றுகள் உண்டு. சிங்கப்புரில் வேலை செய்யும் மலேசியர்கள் நாடு திரும்ப அனுமதி இல்லை.  அப்படி திரும்ப வேண்டுமென்றால் மீண்டும் சிங்கப்பூர் செல்ல அனுமதியில்லை! இது ஒன்றே போதும் அவர்கள் எந்த அளவுக்கு முன் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்று.

ஏன் நம்மால் முடியவில்லை? பொதுவாகவே இங்குள்ள ஆளும் அரசியல்வாதிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். இந்தத் தொற்று நாட்டுக்கு ஏற்பட்ட கடவுளின் சாபம்  என்று நினைக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் கடவுளால் தான் இதனைத் தீர்த்து வைக்க முடியும் என்று  நம்புகிறார்கள். நமக்கு அதில் ஆட்சேபம் எதுவும் இல்லை!

ஆனால் அதற்காக சிகிச்சை தேவையில்லை என்று நினைத்தது தான் பிரச்சனையாகி விட்டது. அப்போது ஏற்பட்ட அந்த தாமதம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

உண்மையைச் சொன்னால் இப்போது தான் தடுப்பூசி போடும் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.  சிங்கப்பூர் தடுப்பூசி போடுவதில் நம்மை முந்திக் கொண்டது. தீவிரமாக செயல்பட்டும்  கொண்டிருக்கிறது.

அதனால் தான் அவர்களால் படிப்படியாக தளர்வுகளைக்  கொண்டு வரமுடிகிறது. உணவகங்களில் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக அமர்ந்து சாப்பிடலாம் என்பதே பெரிய முன்னேற்றம் எனலாம்.

அங்கு குறைந்து வருகிறது  நமது நாட்டில் கூடி வருகிறது!  அவர்களுக்கு எப்படி சாத்தியமாகியது இங்கு ஏன் சாத்தியமாகவில்லை! என்று கேட்க விரும்பினாலும் அதற்கான பதிலை யாரும் கொடுக்கப் போவதில்லை.

சிங்கப்பூரை வாழ்த்துவோம்! நம்மை கடவுள் காப்பாற்றுவார் என நம்புவோம்! 

No comments:

Post a Comment