Friday 16 July 2021

இனி அரசியல் இல்லை!

 சுப்பர் ஸ்டார் ரஜினிக்கு  அரசியல் போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டார்!

அரசியலுக்கு வராமலேயே அரசியலிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் எனக் கூறலாம்!

"வருவேன்! வருவேன்!" என்று பயமுறுத்திக் கொண்டிருந்தவர் கடைசியில் "போதும்! போதும்!" என்கிற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும்!

நான் வருவேன் என்று சொன்ன போது அவர் கூறிய சில அரசியல் கருத்துகள் தமிழ் மக்களால் வரவேற்கப்படவில்லை என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

அவரைப் பற்றி கூறும் போது அவர் தமிழ் மக்களால் வளர்க்கப்பட்டவர். என்னை வளர்த்தது தமிழ் பால் என்றார். தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா! என்றார். அவரின்  சொல்லுக்கு தங்க காசு கொடுத்தவர்கள் தமிழர்கள் என்றார். தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொண்டாலும் இதுவரை அவரால் தமிழனாகப் பேர் போட முடியவில்லை! இது தான் உண்மை.

 ரஜினி அரசியல் பேசுகிறேன் என்று கருத்து சொல்லும் போது அது தமிழர்களுக்கு எதிரான கருத்தாகவே இருந்தன!  அவரின் கருத்துகள் அனைத்தும் தமிழர்களுக்கு நன்மை பயக்கவில்லை!  காரணம் அந்த அளவுக்கு அவரிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை என்று சொல்லப்பட்டது. அவரை யாரோ பின்னணியிலிருந்து இயக்கப்படுவதாக கிசுகிசுகப்பட்டது!

மற்றபடி ரஜினி ஒரு கெட்ட மனிதராக தமிழ்ச் சமுதாயம் அவரைப் பார்க்கவில்லை. நல்ல மனிதர் என்று தான் பெயர் எடுத்தார். அரசியலில் அவரால் பெயர் போட முடியாது என்பது தான் பெரும்பாலான ரசிகர்கள் எண்ணமாக இருந்தது. அவரது தீவிர ரசிகர்களைத் தவிர்த்து மற்றவர்கள் யாரும் அவர் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. அரசியல் என்பது அவரது கோட்டையல்ல! என்பது தான் பெரும்பாலானோர் கருத்து.

எப்படியோ போகட்டும். இப்போது பகிரங்கமாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டார். தனது  பெயரில் உள்ள  மக்கள் மன்றத்தை கலைத்ததின் மூலம் அவர் தமிழக மக்களுக்கு அவரின் முக்கிய செய்தியை அறிவித்து விட்டார். தமிழக மக்கள் என்பதை விட அவரை மிகவும் அரசியலுக்கு எதிர்பார்த்த பாரதீய ஜனதா கட்சிக்கு  என்ன சொல்ல வேண்டுமோ அதனைச் சொல்லி விட்டார்! காரணம் அவர்கள் தான் அவரை  அரசியல் வலையில் சிக்க வைக்க பகீரத முயற்சி எடுத்தவர்கள். இந்த அறிவிப்பின் மூலம் அவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்த்து விட்டார்!

தனது மக்கள் மன்றத்தை கலைப்பது என்பது அவர் எடுத்த முடிவு. இங்கு வேறு யாரின் தலையீடும் இல்லை என நம்பலாம்.

இதனை நல்ல முடிவாகத் தான் நாம் பார்க்கிறோம்.  இனி அவருக்கு அரசியல் இல்லை! சினிமாவே போதும்! தமிழன் வாழ வைப்பான்!

அவர் நல்ல நடிகர்! இன்னும் பேரும் புகழும் பெறட்டும்!

No comments:

Post a Comment