Wednesday 14 July 2021

பேரு பெத்த பேரு!

 "பேரு பெத்த பேரு!" என்று சொல்லுவார்களே அது நடிகர் விஜய்-யுக்குத் தான்  சரியாகப் பொருந்தும்!

அவர் வாங்கியது இங்கிலாந்தின் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார். அது போன்ற கார்களை சராசரி நிலையிலுள்ள யாராலும் வாங்க முடியாது. சராசரி பணக்காரர்களும் வாங்க முடியாது. பெரும்பாலும் முதல் வரிசை பணக்காரர்கள் மட்டுமே வாங்கக் கூடிய ஒரு கார்.

ஏன்?  சினிமா துறையில் பலராலும் வாங்க முடியாத ஒரு கார். ஓரிரு முன்னணி நடிகர்களால் மட்டுமே வாங்க முடியும். அதை வாங்கி பராமரிப்பது என்பது எல்லாராலும் முடியாது. அதே நடிகர் பின்னணிக்குப் போய்விட்டால் அவர் தொடர்ந்து அந்தக் காரை வைத்திருப்பாரா என்பது வேறு விஷயம்.

அந்த வரிசையில் பார்க்கும் போது  நடிகர் விஜய்யுக்கு அந்தக் காரை வாங்கக் கூடிய தகுதி இருக்கிறது. முதல் வரிசை பணக்காரர். இன்றைய முன்னணி நடிகர்களில் அதிகம் பணம் வாங்குபவர்களில் அவரும் ஒருவர். நமக்கும் அதில் மகிழ்ச்சியே!

ஆனால் ஒரு சில பணக்காரர்களின் வாழ்க்கை முறையை நாம் பார்த்திருக்கிறோம். மிகக் கேவலமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஐந்து, பத்து காசுகளைக் கூட எண்ணி எண்ணி கொடுப்பார்கள்! நன்கொடை பற்றியெல்லாம் இவர்களிடம் வாய் திறக்க முடியாது!

இந்த பிச்சைக்கார பணக்காரர் வரிசையில் தான் விஜய்யை நாம் பார்க்க முடிகிறது. ரோல்ஸ் ராய்ஸ் போன்ற ஒரு காரை வாங்குவதற்கு  சில கோடிகளாவது செலவு செய்ய வேண்டி வரும். அவர் முன்றரை கோடி செலவு செய்திருக்கிறார்.. அதை இந்திய நாட்டிற்குள் கொண்டு  வர வேண்டும்  என்றால்  ஒரு கோடி  வரியாகக் கட்டியாக வேண்டும். அதுவும் அவருக்குத் தெரியும். இவ்வளவும் அவருக்குத் தெரிந்தும் காருக்கான வரியைக் கட்ட மறுத்து வருகிறார்! அதற்காக அவர் வரி விலக்கு வேண்டும் என்று சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறார்!

ஒரு சில விஷயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. வரி என்பது அனைத்துக் குடிமக்களுக்கும் உரியது. வரியில்லாமல் அரசாங்கத்தை நடத்த வழியில்லை. வரியைக் கொடுக்க முடியாது என்று ஏன் இவர் பிடிவாதம் பிடிக்கிறார்? இவருடைய காரை  நாட்டின் நலனுக்காக  பயன்படுத்தப் போகிறேன் என்று இவரால் மெய்ப்பிக்க முடிந்தால் அதற்காக ஓரளவு சலுகைகள் கிடைக்கலாம். ஒன்றுமே இல்லை. அவருடைய சொந்த நலனுக்காக பயன்படுத்தப் போகிறார். அதற்கு ஏன் வரி விலக்கு? என்று நாமும் தான் கேட்கிறோம்.

இந்தியாவில் இருந்து கொண்டு இங்கிலாந்து வாழ்க்கையை வாழ நினைக்கிறார். யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. எல்லாப் பணக்காரர்களும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவரும் வாழட்டுமே, நமக்கென்ன?

ஆனால் விஜய் சார்! இனி உங்கள் படங்களில் ரசிகர்களுக்குப் புத்தி சொல்கின்ற வேலை வேண்டாம். புத்தி சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் அப்படி வாழ்ந்து காட்ட வேண்டும்!   ஏழை எளியவர்கள் கூட அரசாங்கத்திற்கு வரி கட்டத்தான் செய்கிறார்கள். அதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

ஒவ்வொரு குடிமகனும் அவர்களுக்கு ஏற்றவாறு வரி கட்டத்தான் செய்கிறார்கள். அவருடைய படங்களைப் பார்க்கின்ற ரசிகன் கூட ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் வரி கட்டுகிறான். கோடிக்கணக்கில் சம்பாதித்தால் வரி கோடிக்கணக்கில் தான் வரும். ஆயிரக்கணக்கில் சம்பாதித்தால் ஆயிரக்கணக்கில் வரும். அவ்வளவு தான் வித்தியாசம்.

விஜய் நடிக்கட்டும், சம்பாதிக்கட்டும்! அவர் குடும்பத்தோடு குதூகலமாக ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஊர்வலம் வரட்டும். ஆனால் மக்களின் தலைவனாக வர முயற்சி செய்ய வேண்டாம்.

கடைசியாக, முடிந்தால் நாலு பேருக்குக் கல்வி கொடுக்கட்டும்!

No comments:

Post a Comment