அரசியல்வாதிகள் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு இதோ இன்னொரு சான்று!
அம்னோவின் உதவித் தலைவரான முகமத் காலிட் நோர்டின் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதாவது "தடுப்பூசி போட விரும்பாதவர்கள், போட முடியாதவர்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டாம். அவர்களது நமபிக்கை அல்லது அவர்களது விரூப்பத்திற்கே விட்டு விடுங்கள்!" என்கிறார் அவர்.
இந்தக் கருத்து சரிதானா என்று கேட்பதைவிட இப்படி ஒரு கருத்தை அவர் ஊடகங்களில் வெளியிடலாமா என்பது தான் முக்கியம்.
இந்த அரசியல்வாதிகளில் யாராவது மக்கள் நலனை யோசிக்கிறார்களா என்றால் அது தான் இல்லை. ஒவ்வொரு நாளும் டாக்டர்கள் மக்களைப் பார்த்து "தயவு செய்து ஊசி போடுங்கள்" என்று கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். ஏன்? எல்லாருக்கும் தெரிந்த காரணம் தான்.
கோவிட்-19 முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென்றால் தடுப்பூசி போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். அது தான் ஒரே வழி வேறு வழியில்லை. இந்த நேரத்தில் "போட்டால் போடுங்கள் போடாவிட்டால் பரவாயில்லை!" என்கிற பாணியில் பேசுவது சரியான கருத்து இல்லை.
அவர் இப்படிக் கூறுவதற்கான நோக்கம் புனிதமாக இருக்கலாம். ஆனால் நாடு எதிர்நோக்கும் நெருக்கடியைக் குறைத்து மதிப்பிட முடியாது. இன்றைய கணக்கின் படி நாட்டின் மொத்த பாதிப்புகள் ஒரே நாளில் 17,000-த்துக்கும் மேல் எகிரிவிட்டன!
உண்மையைச் சொன்னால் அரசாங்கம் இப்போது தான் பெருந்தொற்றின் அபாயத்தைப் புரிந்து கொண்டு தனது நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறது. எப்போதோ செய்ய வேண்டியதை இப்போதாவது செயல்படுத்துகின்றதே என்று நாமும் திருப்தி அடைய வேண்டியது தான்!
இன்றைய நிலையில் வேண்டுமா, வேண்டாமா என்கிற கேள்விக்கு இடமில்லை. ஊசி போட்டே ஆக வேண்டும் என்கிற ஒரே நியதி தான் உண்டு. போடவேண்டாமென்று நினைத்தால் அவர்கள் தனித்து இருக்கு வேண்டும். தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு வாழ வேண்டும். பொது வெளிக்கு வருவதை தடை செய்து கொள்ள வேண்டும்.
ஆனால் அது போன்று யாரும் செய்வதில்லை. அதனால் தான் பிரச்சனைகள் எழுகின்றன. எங்கேயாவது சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற நிலை தான் எங்கும் நிலவுகிறது. ஏன்? அரசியல்வாதிகளையே எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வர முடியவில்லையே!
அதனால் தான் நமக்கு உள்ளதெல்லாம் ஒரே வழி ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் என்று டாக்டர் சொல்லுவதைக் கேட்போம்.
அரசியல்வாதிகள் சொல்லுவதைத் தவிர்ப்போம்!
No comments:
Post a Comment