இந்த இக்காட்டான நாள்களில் மக்களுக்கான தேவை என்ன என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத ஜென்மங்கள் இருந்தும் என்ன பயன்?
தடுப்பூசிகளில் கவனம் செலுத்துங்கள் என்றால் மக்கள் என்ன ஆடை அணிந்து கொண்டு வருகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தும் நபர்களை எப்படித் தண்டிப்பது? இவர்களையெல்லாம் வேலைக்கு வைத்திருப்பது எதற்காக?
ஊசி போட வருபவர்கள் எதற்காக வருகிறார்கள் என்கிற ஞானம் கூட இல்லாதவர்கள் இந்த பொறுப்பற்றக் கூட்டம்!
இந்தப் பொறுப்பை ஊசி போடுவதில் காட்டினால் பாராட்டலாம். வெறும் "கோச டப்பா" ஊசியை வைத்துக் கொண்டு ஊசி போடுகிறார்களே அவர்களை இவர்கள் கண்டுப் பிடித்தால் பாராட்டலாம்.
ஒருவர் "எனக்கு ஊசி போட்டதாகவே தெரியவில்லை! ஒரு வலியும் இல்லையே!" என்கிறார்! இன்னொருவர் "ஒரு மருந்தும் இல்லாத கோச ஊசியை எனக்குப் போட்டார்கள்!" என்று வலிய வந்து குறை சொல்லுகிறார்!
இப்போதே பல குறைபாடுகள் கூறப்படுகின்றன. இங்கு போடுகின்ற மருந்துகளைக் குறைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டுகள் உண்டு. இதையெல்லாம் யார் செய்கிறார்கள்? ஆடைகளைப் பற்றி குறைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே இந்தக் கூட்டம் தான் இது போன்ற அடாவடிச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
எது முக்கியம் என்பதையெல்லாம் மறந்து உப்புச்சப்பற்ற பிரச்சனைகளைக் கிளப்பி, தங்களது திருட்டுத் தனங்களை மறைக்க, நல்ல பேர் வாங்குவது தான் இவர்களது நோக்கம்!
ஊசி போட வருபவர்கள் என்ன நிலையில் வருகிறார்கள் என்பதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அவர்களுடைய வேலை நேரத்தில் அவர்கள் வருகிறார்கள். ஊசி போட வருபவர்கள் அனைவரும் சீவி சிங்காரித்து வருபவர்கள் அல்ல. பலர் ஏதோ வேலையில் இருப்பவர்கள். அதனால் வேக வேகமாக வந்து ஊசி போட வருகிறார்கள். அவர்களைப் புறக்கணித்து திருப்பி அனுப்பி உடைகளை மாற்றிக் கொண்டு வா என்று கட்டளையிடுவது கண்டிக்கத்தக்கது.
"கோவிட்-19 ஊசி போட்டுக் கொள்ளுங்கள்" என்று அரசாங்கம் வருந்தி அழைக்கிறது. ஆனால் இந்தக் கூட்டமோ கொஞ்சம் கூட அக்கறை இன்றி அவர்களைத் திருப்பி அனுப்புகிறது!
எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற இங்கிதம் தெரியாத காட்டுக் கூட்டம் என்று தான் சொல்ல வேண்டி வருகிறது!
இந்த நேரத்தில் இந்த உடை கட்டுப்பாடு தேவையா என்றால் தேவை இல்லை என்பது தான் பதில். அந்த நேரத்தில் இன்னொரு பத்து பேருக்காவது தடுப்பூசி போட்டிருக்கலாம்!
வேலைகளை விட்டுவிட்டு வெட்டி வேலையில் ஈடுபடும் இது போன்ற நபர்களை வைத்துக் கொண்டு எந்தக் காலத்தில் நாம் கொரோனாவை வெற்றிக் கொள்ளப் போகிறோம்?
No comments:
Post a Comment