Thursday 15 July 2021

மரங்களை வெட்டாதீர்!

நம் நாட்டில் மரங்களை வெட்டுவது என்பது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது!

இப்போதெல்லாம் வீடுகளின் முன் எந்த ஒரு மரத்தையும் காண முடிவதில்லை. ஏன்?  சிறிய செடிகளைக்  கூட காண்பது குதிரைக் கொம்பாகி விட்டது.  இப்போது அதற்கான இடங்கள் கூட இருப்பதில்லை.

ஏதாவது  சில சிறிய செடிகளைக் கூட நட்டு வைக்க இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது  வீட்டின் முன்பாகவோ பின்பாகவோ சிறிய இடம் கூட கொடுக்காமல் முற்றிலும்  சமையல் கூடங்களாகவும், கார்கள் நிறுத்தும் இடமாகவும்  ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. என்ன செய்வது?

இந்தியர்களைப் பொறுத்தவரை வேப்பமரம், கருவேப்பிலை செடிகள், முருங்கை மரங்கள் இவைகள் எல்லாம் நிச்சயம் தேவை என்கிற பட்டியலில் உள்ளவை.  வேப்ப இலை தேவை எங்கே ஓடுவது? எங்கெங்கோ ஓட வேண்டியுள்ளது! கருவேப்பிலை வாங்க இப்போது மார்கெட்டுக்குப் போக வேண்டியுள்ளது! அட! ஒரு முருங்கைக்காய் முருங்க இலை - எல்லாமே பக்கத்தில் கிடைப்பதில்லை.  எல்லாமே "ஓடு! மார்கெட்டுக்கு!" என்கிற நிலை தான் இப்போது!

இப்படி சிறிய சிறிய செடிகளைக் கூட வளர்க்க முடியாத ஒரு சூழலில் மரங்களை எப்படி வளர்ப்பது? அதற்கும் காரணங்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்! மரத்தின் வேர்கள் வீட்டின் அடித்தளத்தை அசைத்து விடுமாம்!  மரத்தின் இலைகள்  வீட்டின் முன்னால் கொட்டுமாம். அதை யார் கூட்டுவது? நேரமில்லையே!

தாமான் பகுதிகளில் வாழ்வது எவ்வளவு இக்கட்டானது என்பது புரிகிறது. அதனுள் எப்படி வாழ முடியுமோ அப்படித்தான் வாழ முடியும். அதை மீறினால் சண்டை, சச்சரவுக்குக் குறைவு இருக்காது!

இப்போது இந்தக்  கட்டுரை எழுதுவதின்  நோக்கம் என்ன?  பகாங் மாநிலத்தில்  படித்த ஒரு செய்தி மனதைக் கொஞ்சம் பிழிகிறது. ரவுப் வட்டாரத்தில் டுரியான் மரங்கள்,  சுமார் 15,000 மரங்களைச் சரியாக  ஒன்பது நாள்களில்  அரசாங்கம் வெட்டித் தள்ளியிருக்கின்றது. எல்லாமே பழம் உள்ள மரங்கள்.

நினைத்துப் பாருங்கள்.  டுரியான் பழ பருவத்தில் இப்படி வெட்டித் தள்ளினால் யாருக்கென்ன  இலாபம்? அந்தப் பழங்கள் விற்பனை ஆகும் வரை பொறுத்திருக்கலாம். அந்த மரங்கள் எத்தனை ஆண்டு கால மக்களின் உழைப்பு அத்தனையும் பாழ். அவர்கள் விற்பனை மூலம் கிடைக்க வேண்டிய கொஞ்ச நஞ்ச பண வரவும் அத்தனையும் வீண்.

என்ன செய்ய?  அதிகாரம் கையில் இருந்தால் எதையும் செய்யலாம் என்பதற்கு இது உதாரணம். பகாங் மாநிலம் மனிதாபமற்ற செயல்களுக்குப் பேர் போன மாநிலம். ஏற்கனவே கேமரன் மலையில் இந்தியர்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக புகுந்து நாசமாக்கியவர்கள். இவர்கள் செய்ய மாட்டார்கள் மற்றவர்களும் செய்யக் கூடாது என்பது தான் அவர்களின் தாரக மந்திரம்!

எப்படியோ முடிந்தவரை மரங்களை வெட்டாதீர்கள்.  உங்கள் வீட்டு முன் மரங்கள் இருந்தால், செடிகள் இருந்தால் அவைகள் மூலம் நல்ல சுத்தமான காற்று கிடைக்கும். இப்போது நமக்குக் காற்று எல்லாம் கார்களின் மூலம் வெளியாகும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை - இப்படி அனைத்தும் சேர்ந்து இந்த பூமியை நரகமாக்கி விட்டன! மனிதன் வாழவே தரமாற்றதாகி விட்டது பூமி!

மனிதர்களிடம் வன்மம் இருக்கும் வரை மரங்களுக்கு ஆபத்து இருக்கத்தான் செய்யும்! மரங்களை வெட்டுவது என்பது வன்மம் மிகுந்த செயல்.

"மரங்களை வெட்டாதீர்கள்!" என்று சொல்லத்தான் முடியும்! அதற்கு மேல் உங்கள் பாடு!

No comments:

Post a Comment