பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன என்பது நல்ல செய்தி தான். தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் இன்னும் நமக்குத் தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், இவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பார்கள் என்பது கட்டாயம்.
பெற்றோர்களும் ஓரளவு விரக்தி அடைந்து விட்டார்கள் எனக் கூறலாம். காரணம் எத்தனை நாளைக்குத்தான் பிள்ளைகளை வீட்டில் அடைத்து வைக்க முடியும்? ஏதொ ஒரு மாதம், இரண்டு மாதம் என்றால் சமாளிக்கலாம். இது தொடர்ந்தாற் போல பல மாதங்கள்!
இயங்கலை வகுப்புக்கள் என்பது ஒரு புதிய பரிணாமம். இது எந்த அளவுக்குப் பிள்ளைகளுக்கு பயன் தருகிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்னொன்று எல்லோருக்கும் இணயதள வசதிகள் இல்லை. ஒரு சில இடங்களில் இணயதளங்களைப் பயன்படுத்த முடியவில்லை என்பதாகவும் சொல்லப்படுகின்றது.
பள்ளிகள் திறக்கப்படுவது மகிழ்ச்சி தான் என்றாலும் அதே சமயத்தில் பிள்ளைகளுக்கு ஆபத்து வருமோ என்கிற பயமும் பெற்றோர்களிடையே உண்டு. யாரைத்தான் குறை சொல்ல முடியும்? பள்ளிகளுக்குப் போனாலும் ஆபத்து! வீட்டிலிருந்தாலும் அட்டகாசம் பொறுக்க முடியவில்லை! இதற்கு ஒரு விடிவு காலம் இல்லையா என்பது தான் பெற்றோர்களின் கேள்வி.
அராசங்கமும் நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையும் திறப்போம் என்று ஒட்டு மொத்தமாகக் கூறவில்லை. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் தான் ஆங்காங்கு உள்ள நிலவரப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறுகிறது.
நெகிரி செம்பிலான் மாநிலைத்தைப் பொறுத்தவரை பெருந்தொற்றின் பாதிப்பு அதிகம் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது. அதனால் ஏதோ ஒரு சில இடங்களில் பள்ளிகள் திறக்கப்படலாம். மற்றபடி பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படாது என நம்பலாம்.
பள்ளிகள் திறக்கப்படும் என்பது ஒரு புறம் இருக்க அதனோடு சேர்ந்து வரும் பள்ளிப்பேருந்து கட்டணம் வேறு சில பல செலவுகள் அனைத்தும் பெற்றோர்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது. வேலை இல்லாத நேரத்தில் பெற்றோர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கவே செய்யும்.
அரசாங்கத்தின் பொருளாதார உதவி இல்லாமல் இனி பெற்றோர்களால் எதுவும் செய்ய இயலாது!
பள்ளிகள் திறந்தால் அரசாங்கத்தின் சுமையும் அதிகரிக்கவே செய்யும்!
No comments:
Post a Comment