Friday 9 July 2021

சமூகநல உதவி உயர்த்தப்பட வேண்டும்!

 ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தக்க நேரத்தில் தக்கதொரு வேண்டுகோளை அரசாங்கத்திற்கு விடுத்திருக்கிறார்.

சமூகநல உதவி பெறுவோருக்கு நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்பது ஒரு நியாயமான வேண்டுகோள் என்பதாகவே நாம் கருதுகிறோம். இங்கே இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

ஒரு சாரார் வேலை எதையும் செய்யாமல்,  அரசாங்க ஊழியர்கள் என்கிற ஒரே காரணத்தினால், தங்களது மாத வருமானத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் தான் இன்று பேரங்காடிகளின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். அதே சமயம் தொற்று நோயைப் பரப்புவர்களாகவும் வலம் வருகின்றனர்!

காரணம் மாதாமாதம் பண வரவு இருப்பதால் கவலைப்பட ஒன்றுமில்லை! வாடகையோ, மாதத் தவணையோ அனைத்தும் அவர்களால் கட்ட முடிகிறது.

ஆனால் சமூகநலன் உதவி பெறுபவர்களின்  நிலைமை பற்றி  சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. மாதாமாதம் கிடைப்பதோ ஒரு சிறிய தொகை. ஒரு சிலருக்கு அதுவே நிரந்தர வருமானம்!  வேறு வருமானம் இல்லை. அந்தப் பணத்தை வைத்தே காலத்தைக் கடத்த வேண்டும்.

இப்போதோ நிலைமையே மாறிப் போய்விட்டது. விலைவாசிகள் ஏறிவிட்டன. யாருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை.  வியாபாரிகள்  இப்போது பண்டிகை காலம் என்கிற நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!  காய்கறிகள் என்று போனாலும் அப்படி ஒன்றும் குறைந்த விலையில் எதுவும் கிடைப்பதில்லை. சராசரி வருமானம் உள்ளவர்களே விலையைப் பார்த்து முகம் சுளிக்கின்றனர்.

இப்படி ஒரு காலக்கட்டத்தில் அரசாங்கம் இன்னும் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருப்பதில் நியாயமில்லை. அனைத்துப் பொருட்களும் விலைகள் ஏறிவிட்டன.  இதுவே தக்க தருணம். சமூகநல உதவித் தொகை வெள்ளி ஆயிரத்திற்கு அதிகரிக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

சமூகநல உதவி பெறுபவர்களை ஏதோ தீண்டத் தகாதவர்கள் போல அரசாங்கம் பார்க்கக் கூடாது. அவர்களும் இந்த நாட்டிற்காக தங்களது உழைப்பைக் கொட்டியவர்கள். உழைத்து  ஒடாய்த் தேயந்தவர்கள். என்ன செய்வது? இப்போது அப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அவர்களைப் பரிவோடு பார்க்க வேண்டுமே தவிர பரிதாபத்தோடு அல்ல.

சமூகநல உதவி அவர்களுக்கு உயர்த்தப்பட வேண்டும். அவர்களும் தங்களது  இறுதிக் காலம் வரை கௌரவமாக வாழ வேண்டும். பாதி பிச்சை பாதி உதவி என்பது சரியானது அல்ல.

அரசாங்கம் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே நமது வேண்டுகோளும் கூட!

No comments:

Post a Comment