மலேசியர்களுக்கு என்ன ஆயிற்று? என்று கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது!
இவ்வாண்டு முதல் மூன்று மதங்களில் ஒவ்வொரு நாளும் நான்கு தற்கொலைகள் நடந்துள்ளனவாம்! நம்பத்தான் வேண்டியுள்ளது. காரணம் இந்தப் புள்ளி விபரத்தை கொடுப்பது சுகாதார அமைச்சு.
நமக்குள்ள ஒரே வருத்தம் இப்படி ஒரு நிலைமை நாட்டில் ஏற்படுவதற்கு யார் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பது தான்.
நமக்கும் புரிகிறது. தற்கொலை என்பது தனிப்பட்ட மனிதரின் முடிவு. அதற்காக யாரும் பொறுப்பு ஏற்கப்போவதில்லை. ஆனால் அப்படி ஒரு முடிவை ஒருவர் எடுப்பதற்கான காரணங்கள் என்ன?
இத்தனை ஆண்டுகள் இல்லாத ஒரு சம்பவம் இப்போது ஏன் நடக்கிறது என்பது தான் கேள்வி. தற்கொலைகள் நடப்பதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? இத்தனை ஆண்டுகள் தற்கொலையைப் பற்றி சிந்திக்காதவர்கள் இப்போது ஏன் அப்படி ஒரு நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்?
கோவிட்-19 தொற்று என்பது ஓர் ஆபத்தான வியாதி தான். அதனை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அந்தத் தொற்றினால் ஏற்படுகின்ற பாதகங்களைப் பற்றி அதிகாரத்தில் உள்ளவர்கள் யாரும் கவலைப்படுவதில்லை என்பதும் உண்மை.
இப்படிச் தற்கொலை செய்து கொள்ளுபவர்களில் எந்த பிரிவைச் சேர்ந்த மக்கள் அதிகம்? பொதுவாக B40 என்பது அனைவரும் அறிந்ததே! காரணம் இவர்கள் தான் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாக இருக்கின்றனர். அவர்கள் வேலை செய்கின்றனர். குடும்பத்தைக் காப்பாற்றுகின்றனர். பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். வேலையில் தடங்கள் ஏற்பட்டால் மேலே சொன்ன அனைத்தும் பாதிக்கும். அவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டும் அல்ல அவர்கள் தான் மக்கள் தொகையில் அதிகமாகவும் இருக்கின்றனர்.
அரசு பணிகளில் உள்ளவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை. மாத முடிந்தால் சம்பளம் அவர்களுக்குத் தயாராக இருக்கிறது. அவர்கள் தான் இன்று பெரும் பெரும் அங்காடிகளைச் சுற்றி வருபவர்கள்! அரசியல்வாதிகள் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை. எந்நேரமும் அவர்கள் கையில் பணம் இருக்கிறது. இன்றைய இக்கட்டான நிலையில் கூட அவர்களால் பிள்ளைகளை வெளிநாட்டுப் பள்ளிகளுக்கு அனுப்ப முடிகிறது!
நமக்குத் தெரிய வருவது ஒரே விஷயம் தான். பணம் இருந்தால் B40 மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வரப் போவதில்லை! இப்போது அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு உதவி தான். பி40 மக்களுக்குக் குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவருக்காவது பண உதவி செய்ய வேண்டும். அதன் மூலம் முழு பட்டினி இல்லையென்றாலும் அரை வயிற்றுக்காவது சாப்பாடு கிடைக்கும்.
இப்போது பி40 மக்கள் இரு வகையான எதிரிகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. ஒன்று பொருளாதாரத்தை முற்றிலுமாக இழந்துவிட்டார்கள். இன்னொன்று பொருள்களின் விலை கிடு கிடு என்று ஏறிவிட்டது.
இந்த இன்றைய சூழலில் பலர் என்ன செய்வது என்று அறியாதவர்களாக இருக்கின்றனர். தற்கொலை செய்வதற்கு யாரும் தடை விதிக்கப் போவதில்லை. பிரச்சனைகளிலிருந்து விடுவித்துக் கொள்ள வேறு வழி தெரியவில்லை! இது தான் வழி!
"இது தான் வழி!" என்கிற ஒரு முடிவு தான் இந்த ஒரு நாளைக்கு நான்கு மரணங்கள்!
No comments:
Post a Comment