Wednesday 7 July 2021

இது எண்ணிக்கையை குறைக்குமா?

 மக்கள் சொல்லுவது வேறு! அரசாங்கம் செய்வது வேறூ!

அமைச்சரைவையில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டால் கோவிட்-19 எண்ணிக்கை குறைந்து விடுமா, என்ன?

நமக்கு வேண்டியது கோவிட்-19 குறைய வேண்டும் என்பது அல்ல அந்தத் தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான். அதைத் தவிர மலேசியர்களுக்கு இன்றைய நிலையில் வேறொன்றுமில்லை!

இந்த மாற்றத்தினால் மக்களுக்கு என்ன நன்மை என்பது தான் இன்றைய கேள்வி.  ஆமாம், ஒருவர் துணைப் பிரதமர் ஆகி விட்டார், இன்னொருவர் மூத்த அமைச்சராக ஆக்கப்பட்டு விட்டார்.  இதனால் இந்நாட்டு மக்களுக்கு எந்த விதத்தில் இலாபம்? இதனால் கோவிட்-19 குறைந்து விடுமா, மக்கள் மீண்டும் தங்களது வேலைகளுக்குத் திரும்ப முடியுமா, வியாபார நிலையங்கள் திறக்கப்படுமா, மக்களின் பசியைப் போக்கிவிட முடியமா - எதுவுமே இல்லை என்கிற போது இந்த மாற்றத்தினால் என்ன நேர்ந்து விடப் போகிறது என்பது நமக்குப் புரியவில்லை!

ஒரு வேளை சம்பந்தப்பட்ட கட்சியினருக்கு அது இலாபம் தரலாம்.   சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் சம்பளம் ஏறலாம். அவர்களுக்குச் சம்பளம் ஏறுவதால் அது அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இலாபமே தவிர மக்களுக்கு அதனால் என்ன இலாபம்,  அது தான் கேள்வி.

மக்கள் தங்களது வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் நேரத்தில் அரசாங்கம் அரசியல் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்க முடியாது. இது எரிகிற நெருப்பில் எண்ணைய் வார்த்துக் கொண்டிருப்பதற்குச் சமம்! ரோம் சாம்ராஜ்யம் எரிந்து கொண்டிருக்கும் போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின்  செயலுக்குச் சமம்!

இப்போது மக்களின் தேவை எல்லாம் கோவிட்-19 தொற்று ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஊரடங்கு அகற்றப்பட வேண்டும். நாடு, எப்போதும் போல, இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். வேலைக்கு மக்கள் மீண்டும் போக வேண்டும். குழந்தைகள் மீண்டும் தெருக்களில் ஓடி ஆடி விளையாட வேண்டும். உணவகங்களுக்குச் செல்ல வேண்டும்.

அதை விட்டு, குழந்தைகளிடம் கைப்பேசிகளைக் கொடுத்து, அவர்களை அமைதிப்படுத்த, 24 மணி நேரமும் விளையாட அனுமதிப்பது என்பது அவர்களை நிரந்தர நோயாளிகளாக்கும் செயல் என்பதும் பெற்றோர்களுக்குப் புரிகிறது. ஆனால் வேறு வழி இல்லையே!  குழந்தைகளின் அமளி துமளிகளைச் சமாளிக்க வேறு வழி தான் என்ன?

நம்முடைய வேண்டுகோள் என்பது இது தான்: கோவிட்-19 வேண்டாம்! ஊரடங்கு வேண்டாம்! தொழிற்சாலைகளை மூட வேண்டாம்! வியாபார நிலையங்களை அடைக்க  வேண்டாம்!

தேவை எல்லாம்: வேலை வேண்டும். பணம் வேண்டும். பசியை விரட்ட வேண்டும். குழந்தைகள்  பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

இந்த அமைச்சர்களின் மாற்றம் என்பது தேவையற்ற ஒன்று!

No comments:

Post a Comment