Saturday 17 July 2021

இந்த முறையாவது சாத்தியமா?

 நாடாளுமன்றம் இந்த மாதக் கடைசியில் அதாவது 26 ஜூலை அன்று, சுபயோக சுபதினத்தில்,  நாடாளுமன்றம் கூடும் என்பதாக அறிவிப்பு  வெளியாயிருக்கிறது!

நாடாளுமன்றம் கூடாது என்று நினைத்த நேரத்தில் இப்போது நாடாளுமன்றம் கூடும் என்பதாக வந்த அறிவிப்பு அப்படி எந்த ஒரு மனக் கிளர்ச்சியையும் நமக்கு ஏற்படுத்தவில்லை! இதற்காக எத்தனையோ மாதங்கள் ஏங்கிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்த போது இருந்த ஆர்வமோ அக்களிப்போ இப்போது இல்லை!

இந்த அறிவிப்பும்  தானாக வந்துவிடவில்லை.  ஏறக்குறைய மாமன்னரின் கண்டிப்பான கட்டளையாக வந்த பின்னர் தான் இப்போது இந்த சுபதினத்தை  தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்!

ஆனால் என்ன செய்வது? இப்போது நமக்கு நாடாளுமன்றம் கூடினால் என்ன, கூடாவிட்டால் என்ன என்கிற நிலைமைக்கு வந்து விட்டோம்!

மக்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்பது நமக்குப் புரிகிறது. வேலை வெட்டி எதுவும் இல்லாமல் படுகிற கஷ்டம் தெரிகிறது. கையில் பணம் இல்லாத இந்த நேரத்தில் எவன் எக்கேடு கெட்டால் என்ன என்கிற எண்ணம் தான் மேலோங்கி நிற்கிறது!

நாடாளுமன்றம் கூடினால் கோவிட்-19 நம்மைவிட்டு ஓடிவிடவா போகிறது? எந்த மண்ணும் ஆகப்போவதில்லை! இதில் வேறு "ஃபைசர் போட்டியா!  சைனோவேக் போட்டியா!" என்கிற கேள்வி வேறு! அப்புறம் அது சரியில்லை! இது சரியில்லை!  மாங்காய்கள் அதிகாரத்தில் இருந்தால் மக்களுக்கு மாம்பழமா கிடைக்கும்? வெறு மண் புழு தான் கிடைக்கும்!

நேற்றைய (16.7.21) புள்ளிவிபரத்தைப் பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் கோவிட்-19 சம்பவங்கள் கூடிக் கொண்டு தான் போகின்றன. குறைந்தபாடில்லை! நேற்றைய புள்ளிவிபரப்படி: 12,541 சம்பவங்கள் ஒரே நாளில்! இதை வைத்துப் பார்க்கும் போது நாடாளுமன்றம் கூடும் தினத்தில் நிச்சயமாக அது 20,000 த்தை எட்டிவிடும்!

அந்த நேரத்தில் என்ன மாதிரி அறிவிப்பு வரும் என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. நமது பிரதமருக்கு நாடாளுமன்றத்தை தள்ளி போடுவது  என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல! அதைத்தான் அவர் தொடர்ந்து பல மாதங்களாக செய்து வருகிறார்! கோவிட்-19 சம்பவங்கள் கூடும் போது நாடாளுமன்றம் கூடுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டா என்று சந்தேகம் எழத்தான் செய்கிறது!

கூடுகிறதோ கூடவில்லையோ மக்களின் மனநிலை மாறிவிட்டது. அங்கே என்ன நடக்கிறது என்பதில் அவர்களுக்கு அக்கறையில்லை. அவர்களின் இன்றைய பசிக்கு என்ன செய்வது! இப்படியே வேலை இல்லாமல் போனால் என்ன ஆகும் என்கிற கவலை அவர்களை வாட்டி வதைக்கிறது!

நமக்குத் தேவை எல்லாம் நாடாளுமன்றம் அல்ல! மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? எப்போது நாங்கள் வேலைக்குப் போவது! எங்கள் பிள்ளைக்குட்டிகளை யார் காப்பாற்றப் போகிறார்? கொவிட்-19 தொற்று தாக்கத்தினால் நாளை நான் இருப்பேனா,  யாருக்குத் தெரியும்? அரசாங்கம் என்ன செய்கிறது? என்ன செய்யப் போகிறது?

இந்த நிலையில் சாத்தியமா, இல்லையா என்று கேட்டால் பயனற்ற கேள்வி! ஏதோ கூடுவார்கள்! ஏதோ பேசுவார்கள்! நமது தட்டுக்கு  சாப்பாடு தானாக வரப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்!

No comments:

Post a Comment