Friday 2 July 2021

இந்த முறையாவது நடக்குமா!

 நாடாளுமன்றம் இந்த மாதம் கூடும் என்று சொல்லப்படுகின்றது.

நல்லது!  நடந்தால் சரி!

ஆனால் ஒரு குழப்பம். நாடாளுமன்றம் கூடும் என்றாலே கொவிட்19 எண்ணிக்கையும் கூடி விடுகிறது! அந்த அளவுக்குத் தொற்றுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஏதோ ஒரு பகை இருப்பதாகத் தோன்றுகிறது! ஆமாம், தொற்று இப்போது 7000 த்தை நெருங்குகிறது!

நாடாளுமன்ற அவைத் தலைவரும், மேலவைத் தலைவரும் நாடாளுமன்றத்தைக் கூட்டும்படி, மாமன்னரின்  கட்டளைக்கிணங்க,  பிரதமரை அறிவுறுத்தியிருக்கின்றனர்.

இதற்கிடையே எதிர்கட்சி கூட்டணியின் தலைவர், அன்வார் இப்ராகிம்,  பிரதமரிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லையென்றால்  "நாங்கள் ஜூலை 19 அன்று நாடாளுமன்றத்திற்கு  முன்  கூடுவோம்!"  என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்! ஆக, பிரதமரின் அறிவிப்பு ஜூலை 5-ம் தேதிக்குள் வர வேண்டும். வரவில்லையென்றால் ....? வேறு ஏதாவது வர வேண்டும்!

அதுவும் வந்துவிட்டது!   பிரதமராக இருப்பதால் வயிற்றுப் போக்கு என்ன வராமலா போகும்?  அதுவும் வந்துவிட்டது! ஆனால் அறிவிப்பு வராது என்றே தோன்றுகிறது! மற்றவர்களுக்கு வயிற்றுப்போக்கு என்றால் எப்படியோ! பிரதமருக்கு வயிற்றுப்போக்கு என்றால் ஜூலை 19 வரையில் கூட நீடிக்கலாம்! எதனையும் கணிக்க முடியவில்லை.

எது எப்படி இருப்பினும்  பிரதமர் இப்போது  ஒரு நோயாளி. அவர் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். அவர் ஓய்வு எடுக்க வேண்டும். வயிற்றுப்போக்கு என்றால் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதனால் அவருக்கு நல்ல ஓய்வு தேவை. அவர் அரசியலை கொஞ்ச நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டும்.  இன்றைய நிலையில் அவர் மருத்துவமனையின் கட்டுப்பாட்டில்.

நமக்குத் தெரிந்தவரை நாடாளுமன்றம் இந்த மாதம் கூடும் என்பது ஐயத்திற்கு உரியது தான்! பிரதமரின் நலன் தான் முக்கியமே தவிர இந்த நேரத்தில் அவரைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருப்பது  ஏற்கத்தக்கது அல்ல!

எது நடந்தாலும் "எல்லாம் நன்மைக்கே!" என்கிற ஒரு வாசகம் உண்டு. இதனையும் நன்மையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்குக் கிடைக்க வேண்டிய அந்த நன்மை எங்கோ ஒளிந்து கொண்டு இருக்க வேண்டும். அது வெளிப்படும் போது அது  வெளிப்படும் என்று மனதைத் தேற்றிக் கொள்ளுவோம்! தீய சக்திகளை வெற்றி கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல!

ஆக, இதுவும் கடந்து போகும்!

No comments:

Post a Comment