கோவிட்-19 ஒழிந்து நாடு மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டுமென்றால் மக்களின் பங்கு தான் மிக மிக முக்கியம்!
அதைத்தான் அரசாங்கம் சொல்லி வருகிறது. மக்கள் நலன் மீது அக்கறை உள்ளவர்கள் அதையே மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள்.
ஒவ்வொருவரும் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். இன்றைய நிலையில் தடுப்பூசி ஒன்றே வழி. எவ்வளவு தான் சிந்தித்துப் பார்த்தாலும் வேறு வழி தோன்றவில்லை. வேறு வழி இல்லை. அது தான் உண்மை.
இதைத்தான் உலகில் உள்ள அத்தனை அரசுகளும் செய்து வருகின்றன. நாமும் அதைத்தான் செய்ய வேண்டும்.
ஊசி போட பயம்! உண்மை தான். சின்ன வயதில் பயமுறுத்தி பயமுறுத்தி போடப்பட்ட ஊசி கடைசி காலம் வரை நம்மோடு வந்து கொண்டு தான் இருக்கும்! அதனையெல்லாம் மறந்துவிட்டு இப்போது குறைந்தபட்சம் பொது மக்கள் நலன் கருதி நாம் போடத்தான் வேண்டும்.
"நான் ஒருவன் ஊசி போடாவிட்டால் குடியா முழுகிப் போய்விடும்!" ஆமாம்! குடி முழுகித்தான் போய்விடும்! அதில் சந்தேகம் வேண்டாம். உங்கள் ஒருவரால் கோவிட்-19 மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உண்டு என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. உங்களால் எதுவும் நடக்கலாம். உங்கள் ஒருவரால் இந்த உலகத்துக்கே பரப்பிவிட முடியும்!
உங்கள் வீட்டில் உள்ளவர்கள் ஊசி போட போக்குவரத்து பிரச்சனைகள் இருந்தால் அதனை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அதனையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு சிலர் நடமாட முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கும் அரசாங்கம் உதவி செய்யக் காத்திருக்கின்றது.
ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பெருந்தொற்று நாட்டில் இருக்கும் வரை நாடு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது. தொழிற்சாலைகள் திறக்க முடியாது. பள்ளிகள் திறக்க முடியாது. மீண்டும் நாம் வேலைக்குத் திரும்ப முடியாது. நமது மாதாந்திர தவனைகளைக் கட்ட முடியாது. நமது குடும்பத்திற்குச் சோறு போட முடியாது. அத்தனையும் நின்று விடும்!
இப்படி ஒரு நிலைமையை யார் விரும்புவார்? யாரும் விரும்ப மாட்டார். நாடு நல்ல நிலையில் இருந்தால் தான் நாமும் நல்ல நிலையில் இருக்க முடியும்.
அதனால் மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். வாய்ப்பைத் தவற விடாதீர்கள். ஊசி போடுவது இலவசம். உங்கள் பணத்தைக் கொடுக்க வேண்டாம். நீங்கள் போடும் ஊசிக்கு அரசாங்கம் பணம் போடுகிறது.
தனியார் மருத்துவமனைகளோ, கிளினிக்குகளோ சொந்தமாக ஊசி போட அனுமதியில்லை. அரசாங்கம் மட்டுமே அந்த வேலையைச் செய்கிறது.
தடுப்பூசி போடுங்கள்! போட்டால் தான் அடுத்தக் கட்டத்துக்கு நகர் முடியும்!
No comments:
Post a Comment