Wednesday 28 July 2021

அம்மாமார்களே! இது நியாயமில்லையே!

 "இப்போது நேரமே சரியில்லை!" என்று பலர் புலம்புகின்ற காலக்கட்டம்.

ஆனால் இப்போதும் கூட நாம் பாடம் படிக்கவில்லை. இன்னும் நாம் வயிறை முழுமையாகப் பட்டினி போடுகிற நிலைமைக்கு வரவில்லை. ஆனால் உணமையாகவே வறுமையில் வாடுகின்ற குடும்பங்கள் பல உண்டு. வயிற்றைப் பட்டினி போடுகின்ற குடும்பங்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர்.

முகநூலில் டத்தோ ஒருவர் பேசிய காணொளியைக் காண நேர்ந்தது. நான் ஆச்சரியப்பட்டுப்  போனேன்! இன்னுமா இப்படி! எங்கே போய் முட்டிக் கொள்வது? 

பலர் பல வழிகளில் உதவிகள் செய்கின்றனர். பண உதவி யாராலும் செய்ய முடியாது. முடிந்த வரை உணவுகள் கொடுக்கின்றனர். குழந்தைகளுக்குப் பால் பவுடர் போன்ற உதவிகளையும் செய்கின்றனர். பால் பவுடர் என்பது சாதாரண விஷயமல்ல.  அதுவும் ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுக்க முடியாது.  அதை இலவசமாகக் கொடுக்கும் அளவுக்கு அதன் விலை கட்டுப்படியாகாது. ஆனாலும் அதையும் கூட ஒரு சிலர்,  குழந்தைகளின் நலனை முன்னிட்டு, வாங்கிக் கொடுக்கின்றனர்.

ஆனால் டத்தோ அவர்கள் சொன்னது பல தாய்மார்கள், கவனியுங்கள், பலர்,  பேம்பெர்ஸ் கிடைக்குமா என்று கேட்பதாக அவர் கூறினார்! நானே அதை எதிர்பார்க்கவில்லை.

மிகவும் சிரமமான ஒரு காலக் கட்டத்தில் எது நமக்கு முக்கியம்! சாப்பாடு  இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. அதனால் உணவுக்குத் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் தான் கொடுப்பவர்கள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஆனால் பெம்பெர்ஸ் கேட்பதில் என்ன நியாயம்? அது அவர்களுக்கே அநியாயமாகத்  தோன்றவில்லை என்பது தான்  அதிசயம்! அதுவும் அந்த டத்தோ சொல்லும் போது கேட்பவர்கள் பல தாய்மார்கள் என்கிறார்! நாம் என்ன நினக்க வேண்டியுள்ளது?  இவர்களுக்கு உணவு மித மிஞ்சி கிடைக்கிறது அதனால் தான் கொஞ்சமும் கூச்ச நாச்சம் இல்லாமல் பேம்பெர்ஸ் கிடைக்குமா என்று கேட்கின்றனர் என்று தானே நமக்குத் தோன்றும்?

தாய்மார்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். இவர்களுடைய தாய்மார்கள் எந்த பேம்பெர்ஸ்ஸை பாவித்தார்கள்? அதற்குள்ளேயே அனைத்தையும், உங்கள் வாழ்க்கை முறை அனைத்தையும், மறந்து போனீர்களே அம்மா! என்னவென்று சொல்லுவது! பழசை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கலாமா!

நீங்கள் பேம்பெர்ஸ் பாவிக்கக் கூடாது என்பதல்ல! நீங்கள் எப்போது பழைய நிலைக்குத் திரும்ப முடியுமோ அப்போது நீங்கள் மீண்டும் பாவிக்கலாம்.  யார் அடிக்கப்போகிறார்? மேலும் இன்னொரு கேள்வியும் எழுகிறது. வேலை இல்லை. சும்மாதான் வீட்டில் இருக்கிறீர்கள்.  இந்த நேரத்தில், குறைந்த பட்சம் சிக்கனம் கருதி,  பேம்பெர்ஸ் தவிர்த்து, வேறு பழைய துணிகளைப் பயன்படுத்தலாமே! வேலை இல்லாமல் வீட்டில் சும்மா தானே இருக்கிறீர்கள்? என்ன கெட்டுப் போய்விட்டது?

அம்மாமார்களே! தயவு செய்து யோசியுங்கள். நீங்கள் பட்டினியாய் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் உணவு பொருள்கள் கொண்டு வந்து உங்களின் சிரமத்தைக் குறைக்கின்றனர். அதற்கு மேல் எதிர்ப்பார்க்காதீர்கள்.

நியாயமானதைக் கேட்டுப்  பெறுங்கள்!  அதற்கு மேல்......வேண்டாமே!


No comments:

Post a Comment