Friday 30 July 2021

பெருந்தொற்று மேலும் பெருக வேண்டாம்!

 பெருந்தொற்று  இன்னும் பரவலாகப் பெருக நாம் காரணமாக இருக்க வேண்டாம்! அதற்கு நமது முதல் கடமை தடுப்பூசி போட்டுக் கொள்வது தான்.

சுகாதார தலைமை இயக்குனர்,  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இதனை பொது மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். விரைந்து போட்டுக் கொள்ளுங்கள் என்கிறார். சமீபத்திய கணக்கின் படி கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 92 விழுக்காட்டினர் இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் என்கிறார் டாக்டர் நூர்.

ஆக  பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலோர் இன்னும் தடுப்பூசி போடாதவர்கள். இன்னும் தயங்கிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும், பயந்து கொண்டும் இருக்க வேண்டாம். கோவிட்-19 தொற்று நம்மைத் தாக்கக் கூடாது என்கிற பயம் இருந்தால் உடனடியாகத் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள்.

இப்போது நாம் நிறையவே செய்திகளைப் படிக்கிறோம். மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை என்று செய்திகள் வருகின்றன. உங்களுக்குத் தொற்று வந்த பின்னர் மருத்துவமனைக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதன் பின்னர் திரும்பி வருவீர்களா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!  வந்தால் வாழ்த்துகள்!  வராவிட்டால் அனுதாபங்கள்! 

ஆனால் இதை விட தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது அல்லவா. இரண்டு முறை தடுப்பூசியைப் போட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டதும் உங்களுக்கு நூறு விழுக்காடு பாதுகாப்பு என்று யாரும் சொல்ல வரவில்லை.  உங்களுக்கு ஆபத்துக் குறைவு என்பது தான் அதன் பொருள்.

இப்போதைக்கு இந்த தடுப்பூசி தான் ஒரே வழி. மலேசியாவில் மட்டும் அல்ல உலக நாடுகள் அனைத்தும்  இதே வழியைத்தான் கையாள்கின்றன.. ஏதோ நம் நாடு மட்டும் தான் இதை வலியுறுத்துகிறது என்று பொருள் கொள்ள வேண்டாம். தொற்று நோயைத் தடுப்பதற்கு வேறு வழி இல்லை என்பதால் தான் வற்புறுத்தப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

இப்போதே மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை. இன்னும் இழுத்துக் கொண்டே போனால் என்ன என்ன பற்றாக்குறை வரும் என்பதை ஊகிக்க முடியவில்லை! எதுவும் நடக்கலாம். ஊசி போட்டுக் கொள்ளமுடியாத நிலை கூட ஏற்படலாம்! எல்லாமே சாத்தியம்!

நண்பர்களே! கோவிட்-19 எந்த விதத்திலும் குறைவதாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்னும் புதிய புதிய மாற்றங்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொற்றும்  வெவ்வேறு வடிவத்தில் வந்து கொண்டிருக்கிறது.

நம்மால் நோய் பரவ வேண்டாம்! அதற்குத் தடுப்பூசி ஒன்றே சாத்தியம்!

No comments:

Post a Comment