நடப்பு அரசாங்கத்தில் அதாவது பிரதமர் முகைதீன் யாசின் தலைமை தாங்கும் இன்றைய அரசாங்கத்தில் பங்கு பெற்றிருக்கும் அமைச்சர்கள் மக்களுக்கு எந்த வகையில் முன்னுதாரணமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஓர் சிறிய அலசல்!
நாட்டில் இப்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு யாருக்கு என்று பார்த்தால் பொது மக்களுக்கு மட்டும் தான் என்று தாராளமாகச் சொல்லலாம்.
இன்றைய நிலையில், தொடர்ந்தாற் போல விதிகளை மீறுவதில் அமைச்சர்கள் பொது மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர்! வீதிகளை மீறினால் அவர்களுக்கும் அபராதம் உண்டு என்று இருந்தாலும் அந்தத் தொகை என்பது அவர்கள் வீட்டு வளர்ப்புப் பிராணிகளுக்குச் செய்கின்ற செலவுகளை விட குறைவு தான்! அதனால் அவர்கள் பணத்தைச் சும்மா வீசி எறிந்து விட்டுப் போய் விடுவர்!
ஆனால் எல்லாவற்றையும் விட அவர்களுக்கு ஒரு பொறுப்பு உண்டு. அவர்களின் செயல் மக்களிடையே ஒரு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. அரசாங்கத்தின் கொள்கைகளை மீறுபவர்கள் எப்படி பொறுப்புள்ள அமைச்சர்களாக இருக்க முடியும் என்று மக்கள் நினைக்கத் தான் செய்வார்கள். அவர்களுக்கும் அது தெரியும். இருந்தும் அவர்கள் செய்கிறார்கள் என்றால் மக்களை அவர்கள் மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை என்பது தானே உண்மை!
சமீபத்தில் அமைச்சர் அஸ்மின் அலி துருக்கி நாட்டிற்கு அலுவல் நிமித்தமாக சென்றிருந்தார். குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அவர் குடும்பமும் அவரோடு சேர்ந்து போனது. அதனால் இணையதளவாசிகளின் சீற்றத்திற்கு ஆளானார்! இன்று நாட்டில் நடப்பதென்ன? குடும்பமே பிரிந்து ஆளுக்கொரு பக்கம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேலையில் ஓர் அமைச்சரால் குடும்பத்தோடு வெளிநாட்டிலும் கும்மாளம் அடிக்க முடிகிறது!
இன்னொரு அமைச்சர் அனுவார் மூசா இதுவரை இரண்டு முறை அபராதம் கட்டியிருக்கிறார்! இன்னும் இருபது முறை அவர் சட்டத்தை மீறினாலும் அவரால் அபராதத்தைக் கட்ட முடியும்! இன்னொரு முன்னாள் அமைச்சரோ எனது பையனை பள்ளியில் சேர்க்க வெளிநாடு போகிறேன் என்கிறார்! உணவகத்தில் உட்கார்ந்து உணவு உண்ணுகிறார் ஓர் அமைச்சர்! எல்லாருமே எல்லை மீறி போய்க் கொண்டிருக்கின்றனர்!
இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பாடம் என்ன? அரசியலில் இருந்தால், அமைச்சராக இருந்தால், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் சட்டத்தை மீறலாம் என்கிற ஒரு பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்!
இவர்கள் செய்கின்ற செயல்களைப் பார்க்கின்ற போது இப்படி சட்டத்தை மீறுபவர்கள் நடப்பு பிரதமர் மேல் எந்த ஒரு மரியாதையும் வைத்திருக்கவில்லை என்பது தெரிகிறது! இவர்கள் யாரும் பிரதமரின் கட்டுப்பாடில் இல்லை என்பதும் தெரிகிறது! அதனால் தான் இப்படி அவிழ்த்துவிட்ட காளைகள் போல் சுற்றித் திரிகின்றனர்!
மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்களே இப்படி சட்டத்தை மீறுபவர்களாக இருக்கின்றனர்! சட்டத்தை மீறுவதில் சுகம் காண்கின்றனர்! இவர்கள் பல வேளைகளில் இப்படித்தான் சட்டத்தை மீறுபவர்களாக இருக்கின்றனர். ஆனால் ஏதோ ஓரிருமுறை அகப்படுகின்றனர்!
நல்ல உதாரணங்கள் நமக்குத் தேவை! நாசகார உதாரணங்கள் அல்ல!
No comments:
Post a Comment