Thursday 22 July 2021

இந்தியர்களின் பிரச்சனை என்ன?

 இத்தனை ஆண்டுகள் ஆகியும் மலேசிய இந்தியர்களின் முன்னேற்றம் என்பது அப்படி ஒன்றும் பெருமைப்படத் தக்கதாக இல்லை!

தன் கையே தனக்கு உதவி என்கிற தத்துவம் இந்தியர்களிடையே இன்னும் ஆழமாகப் பதியவில்லை என்றும் சொல்லலாம்.

அரசாங்கம் செய்ய வேண்டிய சில கடமைகளை செய்யாமல் அது பின்வாங்கிவிட்டது. செய்யவில்லை என்றால் அதைக் கேட்க ஆளில்லை என்கிற நிலை தான் இன்னும் நிலவுகிறது.

நாம் அதைப் பற்றி அதிகம் பேச வேண்டாம்  அரசாங்கம் செய்ய வேண்டியது  என்ன என்பது பற்றி மட்டும் பேசுவோம்.

நாட்டின் மலாய், சீன சமுகத்திற்கு அடுத்த நிலையில் நாம் உள்ளோம். அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்ட மூன்றவது பெரிய இனம். இப்போது நமது தேவைகள் என்ன?  அரசாங்க வேலைகளில் பத்து விழுக்காடு நாம் பணியாற்ற வேண்டும். அதே போல தனியார் துறைகளிலும் அதே விழுக்காடு தான். கல்வித்துறை மிக முக்கியமானது நாம் கேட்பது பத்து விழுக்காடு தான். அந்த பத்து விழுக்காட்டை அடிப்படையாக வைத்து அரசாங்கம் ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தினால் நமக்கு எந்த ஒரு பிரச்சனையும் எழப்போவதில்லை. இந்நாட்டில் பெருமைக்குரிய  இனமாக நம்மாலும் வாழ முடியும். ஆனால் நம்மை சிறுமை படுத்துகிற வேலை தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  அதற்கு நம் ஆளே துணை போகிறான்!  

 நம்மை எந்த ஒரு கொம்பானலும் குறைத்து மதிப்பிட முடியாது.  எல்லாத் துறைகளிலும் நமது பங்களிப்பு என்பது அதிகம். பல துறைகளில் நாம் நிபுணத்துவம் பெற்றவர்கள். பிறர் தங்களை உயர்த்திக் கொள்வதற்கு நமது இனம் ஏணியாக  பயன்படுத்தப்பட்டிருக்கிறது  என்பது  ஊரறிந்த உண்மை.

நமக்கு வேண்டியது நமது உரிமை பத்து விழுக்காடு என்பது தான்.இதனை ஏன் அரசாங்கம் செய்ய மறுக்கிறது என்பது  நம் கேள்வி.

நமது உரிமைகளைப் பிடுங்கி இன்னொரு இனத்திற்கு இலவசமாகக் கொடுப்பது என்பது  காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது!  தங்களது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்ள செய்கின்ற ஏற்பாடு தான்  இது! அதாவது ஒரு இனத்தைக் கீழே தள்ளி இன்னொரு இனத்தை அதன் மேல் ஏறி தங்களின் காரியத்தைச் சாதிப்பது! அது மட்டும் அல்ல தொடர்ந்தாற் போல கீழே தள்ளப்பட்ட அந்த இனம் தலை தூக்காதபடி செய்து அவர்களை கீழேயே வைத்திருப்பது! அதாவது நமது உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டு, கீழே தள்ளிய பிறகும், நாம் முன்னேறிய சமூகம் என்று கிண்டலடிப்பது!

இதிலிருந்து மீள வழியில்லையா? உண்டு. அது நமது பொருளாதாரத்தை  வளப்படுத்துவது. அரசாங்கம் கொடுக்கின்ற உதவி எதுவும் நமக்கு வந்து சேர்வதில்லை. அது இடையிலேயே காணாமல் போகிறது! கல்வியில் நமது தரத்தை உயர்த்துவது. சுறுக்கமாக சொன்னால்  தன் கையே தனக்கு உதவி என்பதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை.

நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தத் தலைவனும் நமக்கு உதவப் போவதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

அரசாங்கம் உதவினால் நல்லது. நமது முன்னேற்றம் துரிதமாக இருக்கும். அப்படி இல்லையென்றால் நாமே நமக்கு உதவி நம்மை முன்னேற்றிக் கொள்ள வேண்டியது தான்!

நாம் முன்னேறலாம்! நம்மால் முன்னேற முடியும்! 

No comments:

Post a Comment