கல்வியின் முக்கியத்துவத்தை மலேசியத் தமிழர்கள் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்ற நிலையில் மேலே உள்ள செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது!
மேலே உள்ள பெண்ணின் பெயர் ருக்குமணி குமாரி. வயது 22. இந்தியா, பீகார் மாநிலத்தில் பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரசு பள்ளியில் படிப்பவர். திருமணமானவர்.
சம்பவத்தன்று அவருக்குப் பிரசவவலி ஏற்பட்டு முந்தைய இரவு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அழகான ஆண் குழந்தை காலை 6.00 மணிக்கு பிறந்தது. தாயும் சேயும் சுகம்.
அன்று அவர் தனது கடைசி பரிட்சையான விஞ்ஞானப் பரிட்சியை எழுத வேண்டும். குழந்தை பிறந்து மூன்று மணி நேரமே ஆன நிலையில் தான் பரிட்சை எழுதப் போகவேண்டுமென டாக்டர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். டாக்டர்கள் மறுக்கின்றனர். அவரது குடும்பமும் மறுக்கிறது. அது அபாயகரமானது என டாக்டர்கள் கூறுகின்றனர். இல்லை! போயே ஆகவேண்டுமென பிடிவாதம் பிடிக்கிறார்! வேறு வழியில்லை! டாக்டர்கள் மருத்துவனை ஆம்புலன்ஸ் மூலம் அவரைப் தேர்வு எழுதும் மண்டபத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். அத்தோடு சில மருத்துவமனை உதவியாளர்களையும், ஆபத்து அவசரத்துக்காக, அனுப்பி வைக்கின்றனர்.
ருக்குமணி நல்லபடியாக படிக்கக் கூடியவர். எல்லாப் பரிட்சிகளையும் சிறப்பாகவே, விஞ்ஞானம் உட்பட, எழுதியிருப்பதாகக் கூறுகிறார். வெற்றி பெறும் நம்பிக்கையில் இருக்கிறார்.
அவர் கொடுக்கும் செய்தி என்ன? "நான் நன்றாகப் படிக்கக் கூடியவள். பரிட்சையைத் தவிர்க்க விரும்பவில்லை. குறிப்பாகப் பெண்களுக்கு அது தவறான எடுத்துக் காட்டாக அமைந்துவிடும். அதனால் தான் நான் அவ்வளவு பிடிவாதமாக நடந்து கொள்ள நேர்ந்தது. வருங்காலத்தில் எனது மகன் பெரிய கல்விமானாக ஆக வேண்டும் என்பதே எனது அவா!"
இங்கு நமது சமுதாயத்திலும், குறிப்பாக பெண் கல்வி என்பது, மிக மிக முக்கியம் என்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆட்டம் பாட்டம் இருக்கலாம். அதுவே வாழ்க்கை ஆகாது. ஆட்டம் பாட்டத்தோடு கல்வியையும் ஆட்டம் பாட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்! மலாய்ப் பெண்கள், சீனப் பெண்கள் அவர்களோடு ஒப்பிடும் போது நமது பெண்களின் கல்வி நிலை ஏமாற்றம் அளிக்கிரது. வறுமை என்பது ஒரு காரணமாக இருந்தாலும் உதவும் கரங்களும் நிறையவே இருக்கின்றன. பல வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதே நமது வேண்டுகோள்!
No comments:
Post a Comment