Wednesday 1 February 2023

ஒன்னும் பிரச்சனையில்லை!

 

                                                                நூருல் இஷா
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தனது முதன்மை ஆலோசகராக அவரது 
 மகள் நூருல் இஷாவை நியமித்திருப்பதைப் பற்றி  பல்வேறு தரப்பிலிருந்து கண்டனக்குரல்கள் எழும்ப ஆரம்பித்திருக்கின்றன.

அது இயற்கை தான். மேலோட்டமாக பார்க்கும் போது இதில் ஏதும் சூது உண்டோ என்று தான் சொல்லத் தோன்றும்!

ஆனால் அது அப்படியல்ல. அதற்கான விளக்கத்தையும் பிரதமர் கொடுத்திருக்கிறார். அந்தப் பதவிக்காக நூருல் சம்பளம் எதுவும் வாங்கப் போவதில்லை! அன்வாரும் நூருலும் ஒத்த கருத்து உடையவர்கள். ஏழைகளுக்கு  முன்னேற்றத்தைக் கொண்டு வரவேண்டும். நாடு வளர்ச்சிப்பாதையில் செல்ல வேண்டும்.  அது தான் அவர்களின் குறிக்கோள். அதனால் தான் அன்வார் தனது மகளுக்கு அந்தப் பதவியைக் கொடுத்திருக்கிறார்.

இதற்கு முன்னர் ஆட்சி நடத்தினார்களே அவர்கள் என்ன செய்தார்கள்? தங்களது ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக  பாஸ் கட்சியினருக்குப் பதவிகளைக் கொடுத்தது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு ஓர் அமைச்சருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்தையும் கொடுத்தார்கள்!  அப்போது ஏன்  யாரும் வாய் திறக்கவில்லை?

நூருல் இப்போது எந்த சம்பளமும் வாங்காமல் தான் வேலை செய்யப் போகிறார். யாருக்கும் எந்த நட்டமும் இல்லையே!  இன்னொன்று தனது வேலை என்ன என்பது அவருக்குத் தெரியும். அதற்கான தகுதியும் அவருக்கு உண்டு.  அவர் செய்வது நாட்டுக்கான சேவையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.  பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை. போதுமான சாம்பாத்தியம் அவருக்குண்டு.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.  பிரதமரைச் சுற்றி இருப்பவர்கள் யார்? நேர்மைக்கு விலை பேசுபவர்கள்! இதற்கு முன்னர் அரசியலை வைத்து கொள்ளையடித்தவர்கள்!  இவர்களை எப்படி நம்புவது? அது ஒர் எமகாதகக் கூட்டம்!  எதற்கும் அஞ்சாத கூட்டம்! நேர்மையானவரை வேலைக்கு வைத்தாலும் அவர்களைத் தங்கள் பக்கம் இழுத்து விடுவார்கள்! என்ன செய்வது? இது பல கட்சிகளைக் கொண்ட  ஓர் ஒற்றுமை அரசு. அதனால் பிரதமர் அன்வார் சுயேச்சையாக இயங்க முடியாத நிலையில் இருக்கிறார்!

அதே சமயத்தில் வீண் செலவுகளைக் குறைக்க வேண்டிய சூழலிலும்  இருக்கிறார். அதற்கேற்ப தான் அவர் வேலை செய்ய வேண்டும். செலவுகளைக் குறைக்க வேண்டும். அது தான் அவரது தலையாயப் பணி.

எப்படி பார்த்தாலும் பிரதமரின் இந்த நியமனம் நாட்டின் நலனைச் சார்ந்ததாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்! அனைத்தும் நன்மைக்காக, நம்புவோம்!

No comments:

Post a Comment