தேசிய ஹாக்கி விளையாட்டாளர் ஹனிஸ் நாடியா ஓன், இந்தியர்களை இழிவு படுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக, தேசிய விளையாட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை அதனால் அவர் மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதாக மலேசிய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமால் அறிவித்திருக்கிறார்.
அவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை கடுமையானது தான் என்றாலும் அது தேவை என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை.
அதே சமயத்தில் வேறு ஒரு கேள்வியும் நமக்கு எழுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு தான். பள்ளி மாணவர் ஒருவரை "நீ தேசிய விளையாட்டில் பங்கு பெற வேண்டுமானால் மதம் மாற வேண்டும்" என்று அந்த மாணவர் மீது தாக்குதலைத் தொடுத்த ஆசிரியர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதையும் நாம் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த நிகழ்வு என்பது மேலே விளையாட்டாளர் ஏற்படுத்திய நிகழ்வைவிட கடுமையானது என்பது நமக்குப் புரியும். அந்தப் பெண் விளையாட்டாளர் ஏற்படுத்திய நிகழ்வைவிட அந்த ஆசிரியர் செய்தது கொஞ்சமேனும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த ஆசிரியர் என்பவர் அவரது தொழிலுக்கே கேவலமானவர். ஆசிரியர் தொழிலில் உள்ள ஒருவரின் நடவடிக்கை இப்படியிருக்கும் என்றால் அவரிடம் கல்வி கற்கும் மாணவர்களின் நிலை என்ன? இதுவரை எத்தனை மாணவர்கள் இந்த முறையில் மதம் மாற்றப்பட்டிருக்கிறார்கள்? ஆக, இது ஒரு தொடர்கதை என்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் விளையாட்டுத் துறையில் கொடிகட்டிப் பறந்த நமது நாட்டில் இன்றைய நிலை என்ன? அதற்கான காரணம் என்னவாக இருக்கும்? இப்போது தான் நமக்குப் புரிகிறது. பள்ளிகளில் நடக்கும் அட்டுழியங்கள் இப்போது தான் நமக்குத் தெரிய வருகின்றன! விளையாட்டுத் துறையில் திறமையான மாணவர்கள் இருக்கின்றனர். ஆனால் எதன் பெயரால் ஒதுக்கப்படுகின்றனர் என்பது நமக்கு இப்போது தான் புரிகின்றது. என்ன செய்வது? நாட்டின் பெருமையைவிட மதத்தின் பெருமை தான் இவர்களைப் போன்ற ஆசிரியர்களுக்குப் பெருமை தருவதாக தோன்றுகிறது. அதில் தவறில்லை! ஆனால் அவர் இருக்க வேண்டிய இடம் பள்ளிக்கூடம் அல்ல என்பதை அவரே அறிந்திருக்க வேண்டும்!
இவரைப் போன்றவர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்பவர்கள். மேலே அந்தப் பெண்ணுக்கு கிடைத்த தண்டனையை விட இவருக்கு இன்னும் அதிகமான தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை!
No comments:
Post a Comment