Sunday 12 February 2023

தகுதியின் அடிப்படையிலா!

 

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் அரசாங்கத் துறைகளில்  பல்லின சமுதாயத்தின் சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதாக ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

அவர் பேச்சுக்கு வழக்கம் போல எதிர்ப்புகள் கிளம்பின. இங்கே ஒரு விசேஷம். பொது சேவைத் துறையின் - கியுபெக்ஸ் - தலைவர் டத்தோ அட்னான் மாட் ஒரு உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார். அவரின் கூற்றுப்படி அரசாங்க சேவைக்குத்  தகுதியின் அடிப்படையில் தான் ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்று அவர் கூறியிருப்பது நம்மை சிந்திக்க வைக்கிறது.  நம்மைப் பொறுத்தவரை அவர் எந்தவொரு அரசாங்க அலுவலகத்திற்கும் போனதில்லை என்பது நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது! ஒரு வேளை போக வேண்டிய அவசியம் அவருக்கு  ஏற்பட்டிருக்காது!

ஆனால் களநிலவரம்  அப்படி இல்லை என்பது அவருக்குத் தெரியவில்லை. எந்தவொரு  அலுவலகத்திற்குப் போனாலும் ஒரே நாளில் அந்த  வேலை முடிவதில்லை. ஒரு சாதாரண  பிரச்சனைக்குக் குறைந்தது ஐந்தாறு முறை மீண்டும் மீண்டும் போக வேண்டியதிருக்கும்! அரசாங்க அலுவலகங்கள்  அப்படித்தான் செயல்படுகின்றன! இதில் என்ன ஒளிவு மறைவு? ஒன்றுமில்லை! ஆனால் டத்தோ அட்னான் அரசாங்க ஊழியர்களைத் தூக்கிப் பிடிக்கிறாரே! தூக்கட்டும்!

டத்தோ அட்னானின் இன்னொரு கூற்றையும் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டியுள்ளது.   "நாங்கள் இனம், சமயம் எல்லாம் பார்ப்பதில்லை. தகுதி அடிப்படையில் தான் அரசாங்க வேலைக்குத் தகுதியானவர்களை நாங்கள் எடுக்கிறோம்!" என்று அடிக்கிறாரே அந்தர்பல்டி! சிரிப்பு, சிரிப்பாக வருகிறது!

அப்படியென்றால் மலாய்க்காரர்கள் அரசாங்க வேலைக்குத் தகுதியானவர்கள் காரணம் அவர்களுக்கு வேலைக்கான தகுதிகள் உண்டு. மற்ற இனத்தவர்களுக்குத் தகுதி இல்லையென்று அவர் எங்கிருந்து கண்டுபிடித்தார்? நாம் ஒரே பள்ளிக்கூடம், ஒரே கல்லூரி, ஒரே பல்கலைக்கழகம் தானே செல்லுகிறோம். இந்திய, சீனர்களுக்கு  இல்லாத தகுதி மலாய்க்காரர்களுக்கு எங்கிருந்து வந்தது? எல்லாருமே ஒரே தகுதியைத் தானே கொண்டிருக்கிறார்கள்!

கியுபெக்ஸ் தலைவர் டத்தோ அட்னான் சங்கத்தின் தலைவர் பதவியில் வெற்றி பெற வேண்டும்  என்பதற்காக "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என்கிற பாணியில் பேசுவது கூடாது. இந்த நாட்டின் வளப்பத்தில் அனைத்து மக்களுக்கும் பங்கு உண்டு. அதில் எங்களுக்கும் பங்கு உண்டு,  உங்களைப் போல!

நாம் மலேசியர்கள்! அதனை எப்போதும் நினைவில் வையுங்கள்!

No comments:

Post a Comment