Tuesday 28 February 2023

கைதிகளும் கற்றவர்களாக மாறலாம்!

 

           "ஜெயிலுக்குப் போய் வந்த தேச மக்களை சீர்திருத்துவாங்கோ"  

மேலே உள்ள அந்தப் பாடலைப் பாடியவர் கலைவாணர் என்.எஸ்/கிருஷ்ணன்.  கொஞ்சம் முயற்சி எடுத்து கூகலில் தேடினால் அவர் பாடிய முழு பாடலையும் அவரது சிறை அனுபவங்களையும் கேட்கலாம்!

ஆமாம், சிறைகளின் வேலையே வருபவர்களைச் சீர்திருத்துவது தான். அது தான் அவர்களின் முதல் வேலை. இப்போதெல்லாம் நிலைமை மாறிவிட்டது. வரும் போதே கடுமையான குற்றங்களோடு வருபவர்கள் தான் அதிகம். எல்லாகாலங்களிலும் அது தான் நிலைமை  ஆனாலும் விதிவிலக்குகளும் உண்டு.

குற்றவாளிகள் என்று நாம் சொன்னாலும் அவர்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற முனைப்பு அவர்களுக்கு இருந்தால் அதனையும் சிறைகள் அந்த வாய்ப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

திப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் அந்த குறிப்பிட்ட குற்றவாளி சிறையில் தள்ளப்பட்டான்.  தனது 14-வது வயதில் ஒரு கொலைக் குற்றவாளியாக  வந்தவன் அவன்.  மரண தண்டனை தான். ஆனாலும் மிக இளம் வயதினனாக இருந்ததால் மாநில சுல்தான் அவர்களின் கருணைப் பார்வையில் அது ஆயுள் தண்டனையில் முடிந்தது. 

இப்போது அவன் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறான். சிறையில் இருப்பது பெரிய காரியமல்ல. தனது செயலுக்காக அவன் வருந்துகிறான் என்பது ஒரு பக்கம் இருக்க தனது கல்வியைத் தொடர்வதில்  அவன் தீர்மானமாக இருந்தான். அவனுக்கு அந்த வசதிகளைச் செய்து கொடுக்க சிறைத்துறை  ஒரு பிரச்சனையாக இல்லை.

முதலில் எஸ்.பி.எம். பரிட்சை எடுத்து வெற்றியடைகிறான். அதன் பின்னர் டிப்ளோமா, பி.ஏ., எம்.ஏ. மாஸ்டர்ஸ்  என்று ஆராம்பித்து இப்போது  முனைவர் பட்டம் பெறுவதில்  முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கிறான். சீக்கிரம் அந்தப் பட்டமும் கிடைத்துவிடும்.

கல்வியில் ஓர் உச்சியைத் தொட்டுவிட்ட அவனுக்கு அவனது எதிர்காலம் எப்படியிருக்கும்? மாநில சுல்தான் எப்படி அவனுடைய மரண  தண்டனையை ரத்து செய்தாரோ அதே போல  அவனை விடுதலை செய்யவும் சுல்தானுக்கு அதிகாரம் உண்டு.

ஆனால் அவன்  என்ன சொல்லுகிறான்? "தவறு செய்துவிட்டேன். உண்மைதான்.   நான் திருந்தி வாழ எனக்கு ஒரு சந்தர்ப்பம்  கொடுக்க  வேண்டும்.  வெளியே வந்து நான் ஒரு தன்முனைப்பு பேச்சாளனாக  இருக்க விரும்புகிறேன்.  இளைஞர்களை நல்வழிபடுத்த  அது எனக்கு உதவும்."

இந்த  இளைஞனிடம் நமக்குள்ள பாடம் என்ன? எங்கிருந்தாலும், அதளபாதாளாத்தில் இருந்தாலும்,  அங்கும் நேர்மறையான எண்ணத்தோடு வாழமுயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு ஓரு புதிய உலகத்தையே காட்டும். இனி எனக்கு வாழ்க்கையே இல்லை என்கிற எதற்கும் உதவாத எண்ணங்கள் வேண்டாம்.

கைதிகள் மட்டும் தானா கற்றவர் ஆக முடியும்? இல்லை யாராலும் கற்றவராக ஆக முடியும். தேவை எல்லாம் நேர்மறை எண்ணமும்  கொஞ்சம் முயற்சியும்!

No comments:

Post a Comment