வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
இதனைப் பிரதமரும் வலியுறுத்தியிருக்கிறார். இடைத்தரகர்கள் மூலம் வெளிநாட்டவரை எடுக்கும் போது ஏகப்பட்ட பண விரயம் ஏற்படுவதை பிரதமர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இந்த நடைமுறை பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை.
ஒன்று மட்டும் நமக்குத் தெரிகிறது. நமது இந்திய உணவகங்கள் ஆள் பற்றாக் குறையால் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. வேலைக்கு ஆள் கிடைக்காததால் பல உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. இன்னும் பல மூடப்படும் அபாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதாக சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர் சங்கங்கள் கூறுகின்றன.
இப்படிப்பட்ட நேரத்திலும் உணவகத்தில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீதான உணவக உரிமையாளர் நடத்தும் அராஜகங்களும் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன! அதனை அவர்கள் மறுக்க முடியாது!
குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்கள் பல குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். அவர்கள் விமான நிலையம் வந்து இறங்கியதுமே முதலில் அவர்களின் கடவுச்சீட்டுகளைத் தரகர்கள் பறிமுதல் செய்து விடுகின்றனர்! ஆக யார் இவர் என்கிற அடையாலமே இல்லாமல் முதல் அடி விழுகிறது! இவர்கள் எங்கே வேலைக்குப் போகிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாது. மலேசியாவின் எந்த மாநிலத்தில் வேலை செய்கிறார்கள் என்கிற வ்பரங்கள் எதுவும் சொல்லப்படுவதில்லை.
இப்படித்தான் வெளிநாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்களின் வாழ்க்கை ஆரம்பிக்கிறது! பின்னர் பல வழிகளில் துன்புறுத்தப்பட்டு, சம்பளம் இல்லாமல் வேலை செய்து, அடிகளை வாங்கி இன்னும் ஒரு சிலர் வந்ததற்கான அடையாளமே இல்லாமல் மறைக்கப்பட்டு - இப்படி பல துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
இங்கு வருபவர்கள் அனவருக்குமே இப்படி நடப்பதாக நான் சொல்லவில்லை. ஒரு சிலருக்கு நடப்பது தான் பெரிய செய்தியாக வெளி வருகின்றன. அதற்குத்தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒரு பக்கம் ஆள் பற்றாக்குறை என்கிற புலம்பல்! இன்னொரு பக்கம் வேலை செய்பவர்களைத் தக்கவைத்துக் கொள்ள துப்பு இல்லாத ஒரு கூட்டம்! என்ன தான் செய்வது?
அரசாங்கம் கடுமையான சட்டதிட்டங்களோடு இந்தப் பிரச்சனைகளை அணுக வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சனை எந்தக் காலத்திலும் தீரப்போவதில்லை. வெளி நாடுகளிலிருந்து வந்து வேலை செய்பவர்களைச் சரியாகக் கவனித்துக் கொண்டாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
வருங்காலங்களில் இந்தப் பிரச்சனை எதனை நோக்கி நகரும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment