பத்துமலை திருத்தலம் என்றாலே தைப்பூச தினத்தன்று அதிக இந்துக்கள் கூடுகின்ற இடம் என்பதை நாடே அறியும். இந்த ஆண்டும் சுமார் பத்து இலட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுவும் சனி, ஞாயிறு, திங்கள் என்று தொடர் விடுமுறை வேறு. சொல்லவா வேண்டும்.
சரி, அப்படியே ஆகட்டும். நாம் விஷயத்திற்கு வருவோம். இலட்சக் கணக்கில் பக்தர்கள் கூடுகின்ற இடம் என்பதால் குப்பைகளும் இலட்சக் கணக்கில் தான் இருக்கும் என்பது தான் நாம் வைத்திருக்கும் ஓர் அளவுகோள்!
ஆனால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாம் குப்பை போடுவதைக் கூட கௌரவமாக நினைக்கும் ஒரு சமுதாயம்! நமது வீட்டுக் குப்பைகளை பக்கத்து வீட்டுக்குத் தள்ளி விடுபவர்கள் தானே! நம் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் அடுத்தவன் வீட்டைப் பற்றி நமக்கு என்ன கவலை?
இப்படி வீடுகளில் ஆரம்பிக்கிற இந்த குப்பை போடும் ஆக்கிரமிப்பு தான் நாளடைவில் குப்பை என்பதை எங்கு வேண்டுமானாலும் போடலாம், வீசலாம் என்கிற நிலைக்கு நம்மைத் தள்ளி விட்டிருக்கிறது! அந்தப் பழக்கத்தை இது நாள்வரை நம்மால் விட முடியவில்லை!
வெள்ளைக்காரன் பத்து இலட்சம் பேர் கூடினால் அங்கு மட்டும் ஏன் குப்பகளைக் காண முடிவதில்லை? அவர்கள் வீடுகளிலேயே அந்தப் பழக்கத்தை வளர்க்கிறார்கள். நம்மால் அது முடியாதா? காசா, பணமா? பிள்ளைகளுக்கு வீட்டிலேயே சொல்லித் தரலாமே!
பத்துமலையில் இலட்சக்கணக்கில் செலவு செய்து குப்பைகளைப் போடுவதற்கென்று தொட்டிகளைக் கட்டி வைத்திருக்கின்றார்கள். தொட்டிகளிலோ அல்லது அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களிலோ உங்கள் குப்பைகளைப் போடுங்கள். அதைவிட பெரிய சேவை என்பது வேறு எதுவுமில்லை. அதைவிட பக்தி என்பது வேறு எதுவுமில்லை!
கோவிலுக்குப் போகும் போது சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்பது தானே நம் வீட்டில் நமக்குக் கற்றுக் கொடுத்த முதல் பாடம்? அதே பாடம் தான் போய் வரும் போதும் நாம் சுத்தமாக இருக்க வேண்டும், கோவிலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறது? அப்படியிருக்க அது எப்படி பக்தி பரவசமாக போவதும் வரும் போது கோவிலையே நாசம்பண்ணிவிட்டு வருவதும் - இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்வது?
கோவிலை அசுத்தப்படுத்துவது என்பது நம்மை நாமே அசுத்தப்படுத்துவது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த நோக்கத்தோடு நாம் போவிலுக்குப் போகிறோமோ அந்த நோக்கமே பாழ்பட்டுப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டில் நமது பிள்ளைகளுக்குக் குப்பைகளை எங்கே போட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்காததால் இன்று அந்தக் குப்பைகள் பத்துமலை வரை சென்று குவிய ஆரம்பித்துவிட்டன!
குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட நம் பிள்ளைகளைப் பழக்குவோம். அதனையே நாம் வழக்கமாக்கிக் கொள்வோம்! ஒரு சின்ன காரியத்தைக் கூட செயல்படுத்த முடியாத சமுதாயம் என்கிற அவப்பெயர் நமக்கு வேண்டாம்!
No comments:
Post a Comment