மிகவும் வருத்தமான செய்தி தான்.
ஊழியர் சேமநிதி சந்தாதாரர்கள் நிலை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.
ஆமாம், கோவிட-19 என்கிற தொற்று வந்தாலும் வந்தது. பலரைத் துன்பக் கடலில் ஆழ்த்திவிட்டது. ஒரு பக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமான இறப்புகள். நடுத்தர குடும்பங்கள் பல நடுரோட்டுக்கு வந்து விட்டன. இழப்புக்கள் ஏராளம். ஈடுகட்ட முடியாத இழப்புகள். இருந்த மிச்சம் மீதி சொத்துகளும் கரைந்துவிட்டன.
நம் நாட்டில், வேலையை மட்டும் நம்பியிருக்கும் சமூகம் என்றால் அது நமது சமூகம் தான். அவர்கள் பணி ஓய்வு பெறும்போது அவர்களுடைய ஒரே நம்பிக்கை என்பது அவர்களது ஊழியர் சேமநிதி சேமிப்பு மட்டும் தான். அது தான் அவர்களது அந்திம காலத்திற்கு உதவக்கூடிய சேமிப்பு.
ஆனால் என்ன செய்வது? அதற்கும் உலை வைத்துவிட்டது கொரோனா தொற்று. தொற்று வந்த காலத்தில் சம்பாத்தியம் இல்லை. சம்பாத்தியம் இல்லாத காலத்தில் சாப்பாட்டுக்கு வழியில்லை. அதனால் தான் அரசாங்கம் ஊழியர் சேமநிதியிலிருந்து சேமிப்புகளை எடுக்க அனுமதி கொடுத்தது. அதுவும் நான்கு முறை அனுமதி கொடுக்கப்பட்டது. அதனால் பெரும்பாலானோரின் சேமிப்பு பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பது சோகம்.
இன்றைய நிலை என்ன? சுமார் 71 விழுக்காடு சந்தாதாரர்கள் இன்றை நிலையில் அல்லது பணி ஓய்வு பெறும்போது மிகக் குறைவான ஊழியர் சேமநிதியில் சேமிப்பைக் கொண்டிருப்பர் என்று கூறுகிறார் பிரதமர். ஏற்கனவே அவர்களுடய சேமிப்பு கோரோனா காலத்தில் குறைந்துவிட்டது. சந்தாதாரர்கள் வயதான காலத்தில் கையில் பணம் இல்லாமல் சிரமப்படுகின்ற நிலை ஏற்படத்தான் செய்யும். வயதான காலத்தில் அவர்கள் முற்றிலுமாக தங்களது பிள்ளைகளை நம்பித்தான் வாழ வேண்டி வரும்.
குறிப்பாக தோட்டப்புறங்களில் வாழ்கின்ற மக்களுக்கு இந்த ஊழியர் சேமநிதி என்பது மிகப்பெரிய பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். அதன் மூலம் தான் பெரும்பாலானோருக்கு வீடுகளை வாங்குகின்ற சக்தி ஏற்பட்டது. வங்கிகளும் அவர்களுக்குக் கடன்களும் கொடுத்தன. இப்போது இவைகள் அனைத்துக்கும் வாய்ப்பில்லாமல் போய்விடும்.
போனது போனது தான். இனி அது பற்றி பேசுவதில் புண்ணியம் இல்லை. இனி நமது சம்பாத்தியத்தில் தான் நாம் எல்லாவற்றையும் செய்ய வேண்டிய கட்டாயம். எது நடந்தாலும் அது நன்மைக்குத் தான் என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோம்.
இப்போதைக்கு அது வருத்தம் தந்தாலும் "இதுவும் கடந்து போகும்" என்று எண்ணி மகிழ்ச்சியடைவோம்! இது தான் வாழ்க்கை! இது தான் பயணம்!ஏற்றுக்கொள்வோம்!
No comments:
Post a Comment