மலேசிய முதலாளிகளின் கூட்டமைப்பு ஓர் அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறது.
ஆமாம், இந்த ஆண்டு சுமார் 60,000 பேர் வேலையிழப்பர் என்பதாக அதன் தலைவர் கூறியிருக்கிறார். வேலை இழப்பு என்றாலே மனதிலே நமக்கு அச்சம் ஏற்படத்தான் செய்கிறது. ஒரே காரணம் தான்.
வேலை இழப்பு என்றாலே அது பெரும்பாலும் நமது தமிழர் சமுதாயத்தைத் தான் பாதிக்கிறது. குடும்பமே சம்பாதிக்காத போது கையேந்துவதும் நன்றாகச் சம்பாதிக்கும் போது, குறிப்பாக கணவன்மார்கள், குடித்து அழிப்பதும் இயல்பாகவே நடந்து கொண்டிருக்கிறது! குடும்பத்தில் மனைவி வேலை செய்தால் அந்தக் குடும்பம் ஓரளவாவது சாப்பிடமுடியும்.
ஆனாலும் இன்றைய குடும்பங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். வீட்டு வாடகை, மாதத் தவணைகள், பள்ளி பஸ்களுக்கான கட்டணம், ஏறிக்கொண்டே இருக்கும் விலைவாசிகள் - இவைகளெல்லாம் சமாளிக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி வேலை செய்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலை. பொறுப்பற்ற கணவனாக இருந்தால் குடும்பம் நடுரோட்டுக்கு வரவேண்டி வரும்.
இப்படி ஒரு சூழலில் வேலை இல்லை என்றால் எப்படி? ஆனால் நமது சமுதாயம் ஒருசில படிப்பினைகளை இந்நேரம் கற்றிருக்க வேண்டும். கோரோனா காலத்தில் நாம் நிறைய சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்திருக்கிறோம். அதனால் வேலை இழந்தாலும் நமக்கு அது புதிதல்ல. ஏற்கனவே பட்ட அனுபவத்திலிருந்து சில பாடங்களையாவது நாம் கற்றிருக்க வேண்டும். ஓரளவாவது நம் கையில் இருப்பு இருக்க வேண்டும். பிரச்சனைகள் வரும் போது நமது கையிருப்பு தான் நமக்கு உதவும்.
நாம் ஏற்கனவே சரியான பாடத்தைக் கற்றிருக்கிறோம். அது போதும். ஒரு முறை பட்டுவிட்டால் அடுத்த முறை எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.
இப்பொழுதே மணி அடிக்கப்பட்டு விட்டது! எச்சரிக்கையாக இருப்பது ஒவ்வொருவரின் கடமை. குறிப்பாக பி40 மக்களுக்குத் தான் அந்த எச்சரிக்கைக் கொடுக்கப்படுகிறது. அந்த எச்சரிக்கையை நாம் மதிக்க வேண்டும். அதற்குத் தயாராக இருக்க வேண்டும். மற்றவர்கள் உதவுவார்கள் என்கிற பேச்சுக்கு இடமில்லை. நமக்கு நாமே உதவிக்கொள்ள வேண்டும்.
எச்சரிக்கை உணர்வுடன் இருப்போம்!
No comments:
Post a Comment