நன்றி: வணக்கம் மலேசியா
குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளியின் ஏழு ஆண்டுகால சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்ததாக "வணக்கம் மலேசியா" செய்தி வெளியிட்டுள்ளது.
நமக்கு அந்த பள்ளியைப் பற்றி அதிகம் தெரியாது. ஏதோ, ஈப்போ, குனோங் ராப்பாட், அம்பாங் சாலையில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி என்பது மட்டும் அந்த செய்தியின் படி தெரிகிறது.
சரி, அதை விடுவோம். பள்ளியில் ஏழு ஆண்டு கால சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது பற்றி நமக்கும் மகிழ்ச்சியே. நம்மிடம் உள்ள ஒரு கேள்வி: எழுபது இலட்சம் வெள்ளி பணம் செலவு செய்து கட்டப்பட்ட அந்த பள்ளி ஏன் சர்ச்சையில் சிக்கியது? ஏழு ஆண்டு காலம் என்பது ஒரு சிறிய காலம் அல்ல. அது நீண்ட காலம்.
கட்டடம் கட்டியவன் பணத்தை வாங்கி விட்டான்! கமிஷன் வாங்கியவன் கமிஷனை வாங்கிவிட்டான்! அப்புறம் என்ன கேடு வந்தது என்பது தான் கேள்வி. கட்டடம் கட்ட பொறுப்பானவர்கள் கல்வி அமைச்சின் அதிகாரிகள். கட்டடம் கட்டி முடிந்தது. அதன் பின்னர் ஏதும் பிரச்சனைகள் என்றால் அது கல்வி அமைச்சின் பொறுப்பு. அந்த பிரச்சனையைத் தீர்க்க ஏழு ஆண்டுகள் கல்வி அமைச்சு எடுத்துக் கொண்டது என்றால் அவ்வளவு பெரிய பிரச்சனையா அது?
ஒரு கட்டடத்தைக் கட்டிவிட்டு சும்மா அப்படியே போட்டு வைத்திருப்பது என்றால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது நமக்குச் செவிக்கு எட்டியது இந்த பள்ளிக்கூடம். நாட்டில் இன்னும் எத்தனை பள்ளிக்கூடங்கள் இந்த நிலையில் இருக்கின்றன என்பது தெரியவில்லை. நெகிரி மாநிலத்தில் மூன்று பள்ளிகள் திறக்கப்படாமல் கிடப்பதாகக் கூறப்பட்டது. அதன் இன்றைய நிலை தெரியவில்லை.
நமக்குத் தெரிந்ததெல்லாம் இப்படி சும்மால் கிடப்பில் கிடக்கும் பள்ளிகள் அனைத்தும் தமிழ்ப்பள்ளிகள் தான்! தேசிய மொழிப் பள்ளிகள் இப்படி ஏதேனும் இருப்பதாக கேள்விப்படவில்லை!
இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். தேசிய முன்னணி கட்சியின் ஆட்சியின் போது தான் இது போன்ற குளறுபடிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ம.இ.கா. வை நாம் கேட்க முடியாது! அப்படி ஒரு பிரச்சனை இருந்ததே அவர்களுக்குத் தெரியாது!
இப்போது நடந்து கொண்டிருப்பது ஒற்றுமை அரசாங்கம். தமிழ்ப்பள்ளிகள் பிரச்சனைகள் தீர வேண்டுமானால் இது தான் தக்க நேரம். பிரச்சனைகளை இப்போதே ஒரு முடிவுக்குக் கொண்டுவர் முயற்சி செய்யுங்கள். தேசிய முன்னணியோ அல்லது பெரிகாத்தான் நேஷனல் கட்சியோ ஆட்சிக்கு வருமானால் அதே பழைய நிலைமை தான்! மீண்டும் ம.இ.கா. வின் முகத்தில் தான் முழிக்க வேண்டும்!
இன்னும் எத்தனை பள்ளிகள் இது போன்ற இழுபறியில் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை. இதுவே தக்க நேரம். இப்போது பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் விழித்துக்கொள்ள வேண்டும். பிரச்சனைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.
No comments:
Post a Comment