மனிதர்களுடன் மிகவும் ஒட்டி உறவாடும் விலங்குகளை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக நாய், பூனைகள் தான் மனிதனோடு மிகவும் ஒட்டி உறவாடும் விலங்குகள். பாசம் காட்டுவதில் மனிதனையே மிஞ்சி விடுகின்றன!
ஆனால் ஒரு பறவை, மிகவும் வித்தியாசமான பறவை, மனிதர்களோடு நெருக்கமில்லாத ஒரு பறவை எப்படி, இப்படி ஒட்டிக் கொண்டதுமல்லாமல் தனது அன்பையும் பாசத்தையும் பொழிந்து கொண்டிருக்கிறது என்பதை ஆச்சரியமாக மனித இனம் பார்த்துக் கொண்டிருக்கிறது!
இந்தியா, உத்திரபிரதேசத்தில் நடந்த சம்பவம் இது. நாரை ஒன்று விபத்து ஒன்றில் கால் அடிப்பட்டு வயல் ஒன்றில் கிடக்கிறது. அதனை கண்ட முகமது அரிப் என்பவர் அதனை வீட்டுக்குக் கொண்டு சென்று அதற்கு மருத்துவம் செய்து அந்த பறவையைக் குணப்படுத்தினார். குணப்படுத்திய பின்னர் அந்தப் பறவையை மீண்டும் ஆகாயத்தில் பறக்கவிட்டார். அந்தப் பறவையோ சிறிது தூரம் சென்றபின் அது மீண்டும் அவரது வீட்டுக்கே திரும்பிவிட்டது!
முப்பது வயதான அரிப் தனது மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் தனது பெற்றோருடன் அமேதியில் வசித்து வருகிறார். இப்போது இந்த நாரையும் அவரது வீட்டில் ஒருவராக இருந்து வருகிறது! கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து அதனையும் வீட்டில் ஒருவராக அக்குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர்.
இப்போது இந்த நாரையின் வேலை என்ன? அரிப் தனது இரு சக்கர வாகனத்தில் எங்குச் சென்றாலும் அதுவும் அவர் கூடவே பறந்து செல்லுகிறது! அவர் எந்த மூலை முடுக்களுக்குப் போனாலும் அவருடனேயே பறந்து செல்லுகிறது! அவருக்குப் பாதுகாப்பு கொடுக்கிறது!
ஒரு நாயின் பாசத்தை நாம் பார்த்திருக்கிறோம். மனிதர்களோடு அவ்வளவு நெருக்கம் இல்லாத ஒரு பறவையின் பாசத்தை நாம் பார்த்ததில்லை. அது பாசமா, அன்பா, நன்றி மறாவாமையா என்னவென்று நம்மால் சொல்ல முடியவில்லை!
சொல்லப்போனால் விலங்குகளும், பறவைகளும் அன்பைப் பொழிவதில் மனிதர்களையும் மிஞ்சிவிடுமோ என்று சொல்லத் தோன்றுகிறது!
No comments:
Post a Comment