Friday 10 February 2023

வெளிநாடுகளில் வேலையா?

 

வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகிறீர்களா?

வெளிநாடுகளில் போய் வேலை செய்வதில் நமக்கு ஒன்று புதிதல்ல. இது காலாகாலமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பயப்பட ஒன்றுமில்லை.

ஆனால் சமீப காலமாக  இதன் போக்கே மாறிவிட்டது. மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும்  ஓர்  ஏமாற்றுக் கும்பலிடம்  நமது இளைஞர்கள் அகப்பட்டுக் கொண்டு பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

நமது இளைஞர்களும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எது போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும் முக்கியம். படித்து முடித்த இளைஞர்கள் பலருக்குப் பொது அறிவு என்பது கொஞ்சம் கூட கிடையாது என்பது மிகவும் வருத்தமான செய்தி.

கம்போடியா, லாவோஸ்,  மியான்மார் போன்ற நாடுகள் நமது நாட்டை விட மிகவும் பிந்தங்கிய நாடுகள் என்பதைக் கூட அறியாதவர்களாக இருக்கின்றனர். அந்த நாடுகளில் அப்படி என்ன பிரமாதமான வேலைகள் கிடைத்து விடப்போகின்றன? ஆனாலும் நம்மால் அவர்களைக் குற்றம் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு வேலை வேண்டும், அவ்வளவுதான்! படித்துவிட்டு சும்மா  சோம்பித்திரிவதை விட எங்கு வேலை கிடைத்தால் என்ன என்கிற மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆமாம், நமது நாட்டில் வேலை கிடைக்கவில்லை அதனால் எங்கேயாவது போய் அவர்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்களை நாம் எப்படி குற்றம் சொல்லுவது?

இதில் மிகவும் வருத்ததற்குரிய விடயம் என்னவென்றால்  அந்த நாடுகளில் சுமார் 330 பேருக்கு மேல்  மோசடிக் கும்பல்களின் கையில் அகப்பட்டுப் பல வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். ஏமாற்று வேலைகளைச் செய்ய சொல்லி துன்புறுத்தப் படுகின்றனர். இந்த மோசடிக் கும்பல்களின் வேலையே மக்களை ஏமாற்றுவது தான்.

ஆனாலும் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார். நடவடிக்கையும் ஆரம்பித்தாகி விட்டது. இப்போது அரசாங்கத்தின் நோக்கம் எல்லாம் அந்த நாடுகளில் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும்  இளைஞர்களை மீண்டும் மலேசியாவுக்குக் கொண்டு வரவேண்டும். அது தான் நோக்கம். நிச்சயம் நோக்கம் நிறைவேறும்.

வெளிநாடுகளுக்கு  வேலைத் தேடி போக வேண்டும் என்றால் தீர விசாரித்துவிட்டுப் போங்கள். அரைகுறையாக தெரிந்து கொண்டு போக வெண்டாம். இது தான் நமது வேண்டுகோள்.

No comments:

Post a Comment