தமிழ் நாட்டிலிருந்து தொடர்ந்தாற் போல இங்கு வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!
குறை சொல்ல ஒன்றுமில்லை. கலை நிகழ்ச்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது. அதனால் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன!
குற்றம் சொல்வோர் பல்வேறு காரணங்களை முன் வைக்கின்றனர். அதுவும் இப்போது எல்லாருமே தங்களது கவனத்தைத் தமிழ்ப்பள்ளிகளின் மீது திருப்புகின்றனர். "நமது இரசிகர்கள் ஏன் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவக்கூடாது?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அதுவும் சரிதான்! ஆனால் இரசிகர்களைக் குறை கூற ஒன்றுமில்லை. தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏன் உதவக் கூடாது என்கிற குரலே இப்போது தான் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது! இதற்கு முன்னர் யாருமே கண்டுகொள்ளவில்லை. இப்போது தான் தமிழ்ப்பள்ளிகளைப் பற்றியே நாம் பேச ஆரம்பித்திருக்கிறோம்! அதற்குள் நமது இளைய சமுதாயத்தைத் திருத்திவிட முடியுமா? ஆனால் நான் பார்த்தவரை நமது இளைய சமுதாயத்தினர் சிறப்பாகவே செயல்படுகின்றனர். பள்ளிகளின் மீது அக்கறை காட்டுகின்றனர். சமுதாயத்தின் மீது ஈடுபாடு உள்ளவர்களாகவே இருக்கின்றனர். பெரியவர்கள் முணகிக்கொண்டு செய்வதை இளைஞர்கள் ஜாலியாகச் செய்கின்றனர்! அவ்வளவு தான்!
கேளிக்கைக்ளில் ஈடுபடுவதாலேயே அவர்கள் பொறுப்பவற்றவர்கள் என்று நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இப்போது அவர்கள் கேளிக்கைகளை விரும்புகிறார்கள். அதெல்லாம் நீண்ட நாள்களுக்குக் கொண்டு செல்ல முடியாது. நேரம் வரும்போது கவனம் வேறுதுறைகளில் சென்று விடும்.
நாங்கள் எல்லாம் இளமைக் காலத்தில் சிரம்பானிலிருந்து கோலலம்பூர் போய் பந்து விளையாட்டுகளைப் பார்த்தோம்! ஏன் எம்.ஜி.ஆர். படங்களைப் பர்த்தோம். அண்ணா பேசிய கூட்டத்திற்குப் போனோம். கடைசியில் டாக்டர் உதயமூர்த்தியின் தன்முனைப்பு கூட்டத்தோடு முடிவுக்கு வந்தது! இப்படித்தான் அனைத்தும். ஒரே மாதிரியாக கடைசிவரை இருக்கப்போவதில்லை. மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். மாற்றங்களும் நடக்கும்.
அதே போல ஹாரிஸ் ஜெயராஜின் கலை நிகழ்ச்சி சிறப்பாகவே நடக்கட்டும். டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்தன. மகிழ்ச்சி! இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்! இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுப்பதனாலேயே அவர்கள் வேறு எதிலும் ஆர்வம் காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எல்லாம் வீண் பேச்சு!
எல்லாம் நன்மைக்கே! நல்லதே நடக்கும்!
No comments:
Post a Comment