பொதுவாக சினிமா நடிகர்களைப் பற்றி நாம் எழுதுவதில்லை. ஆனால் விதிவிலக்குகள் உண்டு.
பொதுவாக நகைச்சுவை நடிகர் மயில்சாமி யைப் பற்றி பேசும்போது அனைத்து தமிழ்ப்பட சினிமா உலகினர் அனைவருமே ஒருமித்த குரலில் மயில்சாமியைப் பற்றி உயர்வாகவே பேசுகின்றனர்.
மயில்சாமி, எல்லாகாலங்களிலும் தான் ஒர் எம்.ஜி.ஆர்.பக்தர் என்பதாகவே தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர். ரை ஒருவர் பின்பற்றுகிறார் என்றால் அவரிடம் இயல்பாகவே நல்ல குணங்கள் இருக்க வேண்டும். குறிப்பாக மற்றவர்களுக்கு உதவும் அந்த தயாள குணம் எம்.ஜி.ஆரிடம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
எம்.ஜி.ஆர். ரைப் பின்பற்றவர்கள் நம் நாட்டிலும் உண்டு. எல்லாருமே ஏதோ ஒரு வகையில் இந்த தமிழ் சமுதாயத்திற்கு உதவுபவர்களாகவே இருக்கின்றனர். மேடை நிகழ்ச்சிகளை நடத்தி பலருக்கு உதவிகளும் செய்திருக்கின்றனர்.
அந்த வகையில் பார்த்தால் மயில்சாமி பிறருக்கு உதவுவதில் தாராளமாகவே இருந்திருக்கிறார். அப்படித்தான் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். பண உதவியாக இருந்தாலும் சரி அல்லது வேறு வகையான உதவியாக இருந்தாலும் சரி அவர் அனைவருக்கும் தன்னாலானதைச் செய்திருக்கிறார். தன்னிடம் பணம் இல்லையென்றாலும் மற்றவர்களிடம் வாங்கியாவது உதவிகள் செய்திருக்கிறார்.
அவர் இறப்புக்குப் பல சினிமா புள்ளிகள் வந்திருக்கின்றனர். ரஜினியே வந்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல. எல்லா நடிகர்களுமே அவருக்கு நெருங்கிய நண்பர்களாகவே இருந்திருக்கின்றனர். திரைப்படங்களில் அவர் வருவதெல்லாம் ஏதோ ஓரிரு காட்சிகள் தாம். அவருடைய திறமைகளைக் காட்டுவதற்கு அந்த ஓரிரு காட்சிகளுமே போதுமானதாகும்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவர் எம்.ஜி.ஆர். படங்களைத் தவிர வேறு எந்தப் படங்களையும் பார்ப்பதில்லையாம். ஏன் தான் நடித்த படங்களைக் கூட அவர் பார்த்ததில்லையாம். அனைத்தும் எம்.ஜி.ஆர். தான்.
எம்.ஜி.ஆர்.தான் அவருக்குத் தெய்வம். அவர் தான் அவருக்கு வழிகாட்டி. வாழ்நாள் முழுவதும் அவரது தொண்டன். அனைத்தும் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர். தான்! இனி இது போன்ற ஒரு தொண்டன் எம்.ஜி.ஆருக்குக் கிடைக்கப் போவதில்லை!
No comments:
Post a Comment