Tuesday 7 February 2023

ஏன் வரவில்லை?


நமது சமூகம் ஏனோ தெரியவில்லை  உப்புசப்பில்லாத பிரச்சனையையும் கூட  ஒரு பிரச்சனையாக்கி அதையும் ஒரு பேசுபொருளாக்கி, விவாதமாக்கி பொது மேடைகளில் பேசுகின்ற அளவுக்குக் கொண்டு சென்று விடுகின்றனர்!

தைப்பூச திருவிழாவில் பிரதமர் அன்வார் இப்ராகிம் கலந்து கொள்ளவில்லை  என்பது பலருக்கு வருத்தத்தை கொடுத்திருக்கும் என்பது உண்மை தான். அதுவே ஒரு சிலருக்கு  மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதும் உண்மை தான். "எங்கள் தலைவரைப் போல முடியுமா?" என்கிற எக்காளப் பேச்சையும் நம்மால் கேட்க முடிகிறது! 

இதையெல்லாம் நாம் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது.  தைப்பூச திருவிழாவுக்கு முன்பு தான் பிரதமர் மருத்துவனைக்குப் போய் வந்தார் என்கிற செய்திகள் வந்தன. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது தான் அதன் பொருள். அதனால் தைப்புசத்திற்குக் கலந்து கொள்ளாததில் ஒன்றும் அதிசயமில்லை. அதனை ஒரு பிரச்சனையாக ஆக்க வேண்டிய  அவசியமுமில்லை!

ஒன்றை நான் நினைவுறுத்த விரும்புகிறேன். எல்லாவற்றுக்கும் கோபித்துக் கொள்வது என்பது ஏற்புடையதல்ல. அதிகாரத்தில் உள்ளவர்களுக்குப் பல வேலைகள், பல கடமைகள் இருக்கின்றன. ஏன் வருகிறார்கள் ஏன் வரவில்லை  என்பதெல்லாம் நம்மால் கணிக்க முடியாத ஒன்று.  அனைத்தையும் போகிற போக்கில் தூசியைத் தட்டிவிட்டுக்  கொண்டே போக வேண்டியது தான்!

"வந்தால் நல்லது! வராவிட்டால் அதைவிட நல்லது!" என்கிற மனப்போக்கை நமது சமுதாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு விவாதப் பொருளாக்குவதை தவிர்க்க வேண்டும். அதைப்பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையில்லை! அந்த அளவுக்கு அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல! ஒரு சிறிய பிரச்சனையைப் பூதாகரமாக ஆக்குவதில் நம்மை விட்டால் வேறு யாருமில்லை!

முன்னாள் பிரதமர் நஜிப் ஒவ்வொரு ஆண்டும்  தைப்பூசத் திருழிழாவில் கலந்து கொள்வார் என்கிற பேச்சும் தொடர்ந்து வந்தது. நல்லது தானே! அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்! யாரும் மறுக்கவில்லையே! ஆனால் அது  அவருக்கு எந்த அளவு இந்தியர்களின் வாக்காக மாறியது? அரசியல்வாதிகள் இது போன்ற நிகழ்வுகளுக்கு வருவதே வாக்குகளுக்காகத்தான்! நாம் அறியாததா, என்ன? 

அதனால் பிரதமர் கலந்து கொள்ளாதது ஒரு பிரச்சனையே அல்ல. விவாதிக்க வேண்டிய விஷயமும் அல்ல! போகிற போக்கில் "எல்லாம் நனமைக்கே!" என்று எடுத்துக் கொண்டால் போதும்.  நமது சமுதாயத்திற்குத் தேவை ஏகப்பட்டவைகள் உள்லன. எது முக்கியமோ அதில் நமது மூக்கை நுழைத்தால் போதும்! கல்வி, வேலைவாய்ப்பு என்று நமக்குப் பிரச்சனைகள் உள்ளன. அதில் கவனம் செலுத்துவோம்.

பிரதமர் அன்வார்  தைப்பூசத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது முக்கியம் அல்ல! எல்லாம் நல்லபடியாக நடந்ததா என்பது தான் முக்கியம்!

No comments:

Post a Comment