அடிபட்ட காரை இழுத்துச் செல்வதிலும் போட்டியா?
போட்டி தான்! போட்டி இல்லாத தொழில் என்று எதுவும் இல்லை. அப்படியிருக்க இவர்களிடம் மட்டும் போட்டி இல்லாமலா இருக்கும்?
போட்டி இருந்தால் கூட அதனை நாம் சமாளிக்கலாம். ஆனால் அடிதடி, ரௌடிசண்டை போட்டி என்றால் கொஞ்சம் ஒதுங்கித் தான் நிற்க வேண்டியுள்ளது!
சமீபத்தில் நடந்த இந்தப் போட்டியில் அடிபட்ட காரை இழுத்துப் போக இரு நிறுவனத்தினரின் வண்டிகள் வந்துவிட்டன. இப்போது காரை யார் இழுத்துப் போவது? அதில் ஏற்பட்ட குஸ்தி தான் பெரும் பிரச்சனையாகி காவல்துறை அளவுக்குப் போய்விட்டது. அதுமட்டும் அல்லாமல் அது குண்டர் கும்பல் சண்டையாகவும் மாறிவிட்டது!
செய்தியில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாததால் 'யார் எவர்' என்று நமக்கும் தெரியவில்லை. ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் என்றால் யாராக இருக்கும் என்று நம்மால் ஊகிக்க முடியும். அந்தப் பெருமை நம்மைத் தவிர வேறு யாருக்கும் போய்விட முடியாது! அவர்களின் சீன முதலாளி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருப்பார்.
விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால், அதுவும் அங்கே அந்த இரண்டு நிறுவனங்களும் வந்து விட்டன என்பதால், இப்படி ஒரு அடிதடி சண்டையில் தான் முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இவர்கள் எல்லாம் முன்பின் அறியாதவர்கள் அல்ல. ஒரே தொழிலில் இருப்பவர்கள் அறிமுகமானவர்களாகத்தான் இருக்க வேண்டும். எல்லாம் நண்பர்கள் தான். ஆனால் போட்டி என்று வரும்போது எதிரிகள் ஆகிவிடுகிறார்கள்!
சீன முதலாளிகளுக்கு அது பற்றி கவலையில்லை. 'நீங்கள் அடித்துக் கொள்ளும்வரை எங்களுக்கு இலாபம்' என்கிற மனப்போக்கு உடையவர்கள். வண்டியை அனுப்பி, அவர்களுக்கு வேலை இல்லாமல் திரும்பிப் போனால், ஒரு வேளை அவர்களுடைய சம்பளம் வெட்டப்படலாம்! நமக்குத் தெரிய நியாயமில்லை.
நாம் சொல்ல வருவதெல்லாம் 'எத்தனை நாளைக்குத்தான் இப்படி சண்டை போட்டுக்கொண்டே இருப்பீர்கள்? என்பது தான். வயதானவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இளைஞர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். என்ன தான் செய்வது?
போட்டி இல்லாத தொழில் என்று எதுவுமில்லை. ஆனால் அந்தப் போட்டியைச் சண்டையின் மூலம் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் அப்படிப்பட்ட தொழிலே வேண்டாம்!
போட்டி வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்! சண்டை வேண்டாம் என்று தான் சொல்வேன்!